பூச்சிய நிலைக்கு தள்ளப்படும் மன்னார் மீனவ குடும்பங்கள்

மன்னாரில் எரிபொருள் இன்மையலும் இந்திய இலுவைப் படகுகளின் வருகையாலும் மீனவ சமூகம் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். வெளிச் சந்தையில் மண்ணெணெய் ஒரு லீற்றர் 500 ரூபா தொடக்கம் 600 ரூபா வரை கொடுத்தே மண்ணெணெய் பெற்று தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலையும் காணப்படுகின்றது என மன்னார் மாவட்ட கிராமிய மீனவர்களின் அமைப்பின் சம்மேளனத் தலைவர் யஸ்ரின் சொய்சா இவ்வாறு தெரிவித்தார்.

யஸ்ரின் சொய்சா மன்னார் மாவட்ட மீனவர்கள் தற்பொழுது எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்;

மன்னார் மாவட்டத்தில் எரிபொருள் பற்றாக்குறை மிக மோசமான நிலையில் இருந்து வருகின்றது.

எமது மன்னார் மாவட்ட மீனவர்கள் அன்றாடம் மீன்பிடி தொழிலுக்குச் செல்வதற்கு மிகவும் கஷ்ட நிலையை எதிர்நோக்கி வருகின்றனர்.

எமது இந்த மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனை தொடர்பாக யாவரும் அறிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் 4000 க்கு மேற்பட்ட படகுகளும் 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்களும் கடற்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னார் தீவை பொறுத்தமட்டில் நான்கு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காணப்படுகின்றன.

இவற்றில் ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுடையதும், மற்றையதில் ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோருடையதாகும், மற்றைய இரண்டும் கூட்டுறவு சங்கத்திடையதும், தனியாருடையதும் ஆகும்.

இந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருகின்ற மண்ணெணெய்களில் ஒரு பகுதியைத்தான் மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கின்றனர்.

ஏனையவை பொதுமக்களுக்கு என்றும் அத்துடன் தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு என்றும் வழங்கி வருகின்றனர்.

மன்னார் மாந்தை மேற்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு வருகின்ற எரிபொருள் மிக குறைவாகவே வந்து சேர்கின்றது.

இந்த நிலையத்துக்கு ஒரு மாதத்தில் 6600 லீற்றர் மண்ணெணெய் மாத்திரமே வருகின்றது.

இதில் ஒரு பகுதி மண்ணெணெயை ஆறு மீனவ சங்கங்களுக்கு பிரித்து கொடுக்கப்படுகின்றது.

இதை நோக்கும்போது இந்த சங்கங்களின் மீனவர்கள் ஒரு மாதத்தில் மூன்று அல்லது ஐந்து லீற்றர் மண்ணெணெயை மாத்திரமே பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

இந்த நிலையில் எவ்வாறு மீனவர்கள் தங்கள் மீன்பிடித் தொழிலை செய்ய முடியும்?

மன்னார் தீவுக்கு வெளியே திருக்கேதீஸ்வரம், முருங்கன் மற்றும் உயிலங்குளம் நானாட்டான், சிலாபத்துறை ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் மிக குறைவாகவே எரிபொருள் வருவதால் மன்னார் பெருநிலப்பரப்பு பகுதியிலுள்ள விடத்தல்தீவு, மூன்றாம்பிட்டி, கள்ளியடி, இலுப்பைக்கடவை, தேவன்பிட்டி, அந்தோனியார்புரம் இப்படியான கிராபுர மீனவர்கள் உயிலங்குளம், திருக்கேதீஸ்வரம் எரிபொருள் நிலையத்தில் மண்ணெணெயை பெற்று வருகின்றபோதும் இவர்களும் மாதத்தில் மூன்று தொடக்கம் ஐந்த லீற்றர் எரிபொருளையே பெற்று வருகின்றனர்.

இதனால் இம் மீனவர்கள் வெளிச் சந்தையில் ஒரு லீற்றருக்கு 500 ரூபா தொடக்கம் 600 ரூபா வரை பணம் கொடுத்தே எரிபொருள் பெற்று தங்கள் மீன்பிடி தொழிலை முன்னெடுக்கின்றனர்.

தற்பொழுது மன்னார் பகுதியில் மீன்பிடி காலம். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சர் மன்னாருக்கு அதிகமான மண்ணெணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு நிற்கின்றேன்.

இந்திய இலுவைப் படகுகளின் வருகையும் மன்னார் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது என இவ்வாறு தெரிவித்தார்.

பூச்சிய நிலைக்கு தள்ளப்படும் மன்னார் மீனவ குடும்பங்கள்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)