
posted 12th June 2022
மண்முனை தென்மேற்கு கோட்ட தமிழ்மொழித்தின போட்டியின் இறுதி நிகழ்வு கொக்கட்டிச்சோலை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
கோட்டக் கல்விப்பணிப்பாளர் மூ. உதயகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வெற்றி பெற்ற கூத்து, நாடகம், வில்லுப்பாட்டு போன்ற குழு நிகழ்ச்சிகள் நிகழ்த்துகை செய்யப்பட்டன. மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது சுவாமி விபுலானந்தரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, வணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் தமிழுக்கு தொண்டாற்றிய பெரியோர்களை நினைவுகூரும் வகையில் 12 பாடசாலைகளை சேர்ந்த 12 மாணவர்கள் வேடமிட்டிருந்தமையும் குறிப்பி டத்தக்கது. இந்நிகழ்வில், வலயக் கல்விப்பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம், பிரதிக் கல்விப் பணிப்பாளர் சா. சஜீவன், மண்முனை மேற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் க.முருகேசபிள்ளை, ஆசிரியர் மத்திய நிலைய முகாமையாளர் அ. தரணிதரன் உள்ளிட்ட அதிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
உயர்தர பாடசாலைகளில் மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலயம் புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்தினையும், இடைநிலை பிரிவு பாடசாலைகளில் பண்டாரியாவெளி நாமகள் வித்தியாலயம் முதலிடத்தினையும் பெற்றுக் கொண்டன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)