
posted 30th June 2022
கிராம அலுவலர்களின் கவனயீர்ப்பு போராட்டம்
சங்கானை பிரதேச செயலகத்தின் 25 கிராம அலுவலர்கள் பிரிவுகளில் கடமையாற்றும் கிராம அலுவலர்கள் தங்களுக்கு எரிபொருள் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என கோரி நேற்று புதன்கிழமை காலை சங்கானை பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
இதன்போது;
அரசு அலுவலர்களை அவமதிக்காதே!
பெற்றோல் மாபியாக்கள் ஒழிக!
கிராம அலுவலர்கள் புறக்கணிக்கப்படுவது நியாயமா!
தங்களின் பொறுமையை சோதிக்கவேண்டாம்!
கிராம அலுவலர்கள் அத்தியாவசிய சேவையில் உள்ளடங்கவில்லையா!
அரச அதிபரின் உத்தரவை மீறுவது சரியா!
கிராம அலுவலர்கள் புறக்கணிக்கப்படுவது ஏன்!
சங்கானை எம்.பி.சி.எஸ் எரிபொருள் நிரப்பு நிலையம் யாருடைய கட்டுப்பாட்டில்?
கொரோனா முடக்க காலத்தில் மட்டும் நாம் தேவை இப்போது இல்லையா?
இந்த பதாகைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ்.மாவட்ட கிராம அலுவலர் சங்கத்தின் தலைவர் கணேசலிங்கம்;
கிராம அலுவலர் பிரிவு என்பது ஒரு அத்தியாவசிய சேவையாக காணப்படுகின்றது. கொரோனா உட்பட அனைத்து நெருக்கடியான காலங்களில் உங்களுடைய பங்களிப்பு அளப்பரியது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
எங்கள் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரே ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் மட்டுமே காணப்படுகின்றது. அந்த எரிபொருள் நிரப்பு நிலையம் பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கவேண்டும் என மாவட்ட செயலாளரால் தெரிவிக்கப்பட்டாலும், இற்றைவரை ரௌடிகளாலும், மாபியாக்களாலும் ஆளப்பட்டு எரிபொருள் பெறப்படுகின்றதே. அவ்விடத்துக்கு பணியாற்ற சென்ற நமது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மீது கூட தகாத வார்த்தைப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எங்களுக்கு இது பாரிய சிரமமான நிலை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 25 கிராம அலுவலர் பிரிவுகளிலும் கிட்டத்தட்ட ஆறு உத்தியோகத்தர்களுக்கு மேல் பதில் கடமை ஆற்றுகின்றார்கள்.
ஆகவே தமக்குரிய எரிபொருள் சீராக கிடைக்கப்பெறாது விடின் இனிவரும் காலங்களில் உங்களுடைய கிராம அலுவலர் சங்கத்தோடு சமுர்த்தி மற்றும் ஏனைய அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கங்களையும் இணைத்து வீதிக்கிறங்கி போராட வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.
600 போதை பொருள் பாவனை புனர்வாழ்விலிலுள்ளோர் தப்பியோட்டம்
பொலநறுவை - வெலிகந்தை - கந்தகாடு போதை பொருள் பாவனையிலிருந்து புனர்வாழ்வளிக்கும் முகாமிலிருந்து 600 பேர் வரை தப்பியோடியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், அவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார் என்றும் கூறப்பட்டது.
செவ்வாய்க்கிழமை (28) இரவு, ஒருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்தார். அது தொடக்கம் புனர்வாழ்வு பெறும் சுமார் ஆயிரம் பேர் முகாமுக்குள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று புதன்கிழமை காலை 8 மணியளவில், புனர்வாழ்வு நிலையத்தின் பாதுகாப்புக்கு இருந்த பொலிஸார், இராணுவத்தினர் மீது கலவரக்காரர்கள் கற்களை வீசித் தாக்கிவிட்டு பாதுகாப்பு வேலிகளை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். 600 பேர் வரையானவர்கள் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
இதேவேளை, கலவரக்காரர்கள், இறந்தவரின் உடல் அருகே காவலர்களையோ, படையினரையோ அனுமதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. எனினும், உயிரிழந்தவர் 36 வயது நபர் என்றும், கொழும்பு - முகத்துவாரம் (மோதர) பகுதியை சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இராணுவம் - பொலிஸார் இணைந்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். தப்பியோடியவர்களில் நேற்று மாலை வரை 200 பேர் வரையானவர்கள் பிடிக்கப்பட்டு மீளவும் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தப்பியோடியவர்களை தேடும்பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் தொடர்ந்து வருகின்றனர். தவிர, அந்தப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி விடுதலையான கைதிக்கு முதன்முதலாக அரசால் வழங்கப்பட்ட நட்டஈடு
12 வருடங்களின் பின்னர் நிரபராதி என்று விடுதலையான கைதிக்கு நட்டஈடு வழங்கக் கோரி அரசுக்கு எதிராக சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவால் மனித உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து 55 இலட்சம் ரூபா இழப்பீடு அரச தரப்பால் வழங்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட கைதிக்கு நட்டஈடு வழங்கப்பட்ட முதல் வழக்கு இதுவாகும்.
கொழும்பு-8, பொரளை பொலிஸ் நிலையத்துக்குப் பின்புறமாக இரகசியமாக இயக்கப்பட்ட புலனாய்வுப் பிரிவில் புலனாய்வு அதிகாரியாகச் சேவையாற்றி வந்த துர்யலாகே தர்மதாச 2007ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 7ஆம் திகதி பயங்கரவாதத் தடைப் பிரிவுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்ட அரச புலனாய்வுத்துறை அதிகாரியை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை நடத்திய பின்னர் அவருக்கு எதிராக ஆர்.டி.எக்ஸ் 23 கிராம் தனி உடைமையில் வைத்திருந்தமை, 35 துப்பாக்கி ரவைகள் மற்றும் 8 சயனைட் வில்லைகளை தனி உடைமையில் வைத்திருந்தமை மற்றும் பாதுகாப்பு இரகசியங்களை தமிழீழ விடுதலைப்புலிகளின் உளவுத் துறைக்கு வழங்கியமை என மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச் சாட்டுப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
12 வருடங்களாக நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் அரச தரப்பினதும், எதிராளி தர்மதாச சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசாவினதும் வாதப் பிரதிவாதங்களை செவிமடுத்த மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டி ஆராச்சி, தனது தீர்ப்பில் எதிராளி தரப்பு வாதத்தை கவனத்தில் கொண்டு எதிராளி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அரச தரப்பு நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்க தவறியுள்ளமையால் எதிராளியான முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரியை 2019ஆம் ஆண்டு விடுதலை செய்து அறிவித்தார்.
2019ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட தர்மதாச சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா பொலிஸ்மா அதிபர், களனி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் டயஸ், சிறைச்சாலைப் பொறுப்பதிகாரி, சிறைச்சாலை அத்தியட்சகர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரைப் பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிட்டு அரசமைப்பின் 17 மற்றும் 126 ஆம் உறுப்புரைகளுக்கு அமைய உயர்நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், "சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த தர்மதாச சிறுநீரகக் கோளாறால் அவஸ்தைப்பட்டுள்ளார். ஆனால், அதனைச் சிறை அதிகாரிகள் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. சிகிச்சை அளிக்காமல் கைதியை நோயில் துடிக்க விடுவது கூட கோரமான சித்திரவதைதான். விளக்கமறியலில் இருந்தபோது தர்மதாச அடிக்கடி சுகவீனம் அடைந்துள்ளார்.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது உரிய சிகிச்சைகள் வழங்கப்படாமையாலேயே அவரின் நோய் தீவிர நிலைமைக்குச் சென்றுள்ளது. இப்போது அவரின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து இரத்தச் சுத்திகரிப்புச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
மனுதாரருக்கு உரிய சிகிச்சையும், பராமரிப்பும் வழங்கப்பட்டிருந்தால் இவ்வாறான மோசமான நிலையை அடைந்திருக்கமாட்டார். தர்மதாசவின் இந்த நிலைக்குப் பொலிஸாரும், சிறைச்சாலை தரப்பினரும், சட்டமா அதிபருமே காரணம். எனவே, நீதியான நிவாரணம் வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.
அத்துடன், அந்த மனுவில் மேலும், "ஒரு நிரபராதியான நேர்மையான பொலிஸ் உத்தியோகத்தரை 12 வருடங்கள் சிறை வைத்திருந்து அவரின் எதிர்காலத்தையே இருளாக மாற்றிவிட்டது அரசு. தர்மதாச குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்ட போதும் அவரை மீளவும் பொலிஸ் பதவியில் அமர்த்தவோ நஷ்டஈடு வழங்கவோ எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
அவர் சிறையில் இருந்தபோது மாமியாரின் ஓய்வூதியப் பணமே தர்மதாசவின் பிள்ளைகளுக்கும், மனைவிக்கும் வாழ்க்கையைக் கொண்டு செல்ல உதவியது. தர்மதாச விடுவிக்கப்பட்ட பின்னரும்கூட பொலிஸ் வேலை மீளக் கிடைக்காமையால் தொடந்தும் அவரது குடும்பம் மாமியாரின் ஓய்வூதியப் பணத்தையே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியிருக்கவேண்டிய அவலம் தொடர்கின்றது" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தர்மதாச 2021ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் மரணமடைந்ததையடுத்து தர்மதாசவின் மனைவியான சந்தியா தமயந்தி மனுதாரராக பெயரிடப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்றில் விசாரணைக்குத் திகதி குறிப்பிடப்பட்டிருக்கையில், இம்மாதம் 24ஆம் திகதியிடப்பட்டு தர்மதாசவின் மனைவிக்கு 55 இலட்சத்து 23 ஆயிரத்து 808 ரூபாவுக்கான காசோலை அரச தரப்பால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழா வழமைபோல நடைபெறும்
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் புதன்கிழமை (29) யாழ் மாநகர சபையின் சுகாதார மருத்துவ அதிகாரிகள் பணிமனையில் இடம்பெற்றது.
ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற நல்லூர் பெருந்திருவிழா வழமைபோன்று அதாவது 2018ஆம் ஆண்டுக்கு முன்பு எவ்வாறு உற்சவம் நடந்ததோ அதேபோல இம்முறை இடம்பெறுமென யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்தார்.
கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையாலே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்;
ஓகஸ்ட் 1ஆம் திகதி காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, ஆகஸ்ட் 29 ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும். ஆலய வெளிவீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும், வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட்செல்ல முடியாது. அதேபோல வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் எந்தவிதமான வியாபார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது. ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவுசெய்ய முடியாது.
காலணிகளுடன் ஆலய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது. ஆலயத்துக்கு நேர்த்திக் கடன்களைக் கழிப்பதற்காக வருகின்ற தூக்குக் காவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும். அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும். ஆனால், இரதோற்சவம் மற்றும் சப்பைரதத் திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும்.
சுகாதார கட்டுப்பாடுகள் இம்முறை திருவிழாவின் போது காணப்படாது. ஆனாலும் ஒவ்வொரு தனி மனிதனும் தங்களது சுகாதாரத்தில் கவனம் எடுத்து செயல்பட வேண்டும். இவை தவிர, எதிர்வரும் காலங்களில் தேவைப்படும்போது கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவோம் என்றார்.
இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர், மாநகர பிரதிமுதல்வர், நல்லூர் ஆலய பரிபாலகரின் பிரதிநிதிகள், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உட்பட சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)