
posted 13th June 2022
யாழ். - பாண்டிச்சேரி இடையில் போக்குவரத்து சேவை: அமைச்சர் டக்ளசின் முயற்சிக்கு அமைச்சரவை பச்சைக் கொடி
யாழ்ப்பாணத்திற்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் பயணிகள் மற்றும் சரக்கு படகுகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கும்,
பலாலி - திருச்சி விமான நிலையங்களுக்கு இடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்குமான சாதகமான முடிவுகள் இன்று (13.06.2022) நடைபெற்ற அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், விரைவில் குறித்த போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதனூடாக மண்ணெண்ணை, டீசல் போன்ற எரிபொருட்களையும், உரம், பால்மா, மருந்துப் பொருட்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களையும் தேவையானளவு பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுதொடர்பான முயற்சிகளுக்கு பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்கிவருகின்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் துறைசார் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு நாட்டு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் என அமைச்சரின் ஊடகப் பிரிவு திங்கட்கிழமை (13.06.2022) தெரிவித்துள்ளது
முன்னுரிமை வழங்கப்பட வேண்டியவர்கள்
விவசாய மற்றும் வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் காணிகளை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கையை தாங்கள் முன்னெடுக்க இருப்பதால் அவைகளை அந்தந்த மாவட்டத்தவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இது தொடர்பான அமைச்சருக்கு தனது மடலின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
செல்வம் அடைக்கலநாதன் விவசாய மற்றும் வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர ரூபன் அவர்களுக்கு திங்கள் கிழமை (13.06.2022) அனுப்பிவைத்துள்ள மடலில் தெரிவித்திருப்பதாவது;
தங்களின் அமைச்சின் கீழ் வரும் காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளிப்பதாக பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளீர்கள்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இப் பிரிவின் கீழ் நீங்கள் பகிர்தளிக்கும்போது கீழ்வரும் நடைமுறைகளை கவனத்தில் எடுத்துக்கொள்வது சிறந்ததாகும்.
அதாவது, அந்தந்த மாவட்டத்தில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு முதல் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
விவசாயிகள் இளைஞர்கள் மற்றும் விவசாய நிலம் இல்லாத விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இரு சகோதரர்களையும் வாளால் வெட்டி கொண்றவர்களில் ஒருவர் கைது
மன்னார் நொச்சிக்குளத்தில் இரு சகோதரர்கள் வாள் வெட்டுக்கு இலக்காகி மரணித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக ஆரம்ப விசாரணையில் தெரியவருவதாவது;
கடந்த சனிக்கிழமை (04.06.2022) அன்று நீலாசனை மாட்டு வண்டி சவாரி தடாகப் பகுதியில் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், இப் போட்டியில் கலந்து கொள்வதற்காக நொச்சிக்குளத்திலுள்ள இரு சகோதரர்கள் இச் சவாரியில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருந்தபொழுது உயிலங்குளப்பகுதியிலுள்ள ஒரு குழுவினர் இவர்களைத் தாக்கியதாகவும், இதனால் அவர்கள் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் திரும்பியதாகவும், இதில் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக பாதிப்பு அடைந்திருந்தவர் பொலிசாருக்கு புகாரிட்டும் பொலிசார் எந்தவித நடவடிக்கையும் எடுத்தாக தெரியவில்லையென பாதிப்படைந்தவர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.
மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடிருந்தவர் வியாழக்கிழமை (09.06.2022) வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
.
இதைத் தொடர்ந்து நொச்சிக்குளத்தில் திருமணம் செய்திருக்கும் உயிலங்குளத்தை சார்ந்த ஒருவர் தனது வயல் பகுதியில் நின்றபொழுது நொச்சிக்குளத்தை சார்ந்த ஒரு கோஷ்டினர் தர்க்கப்பட்டு அவரை வெள்ளிக்கிழமை (10) காலையில் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவத்தை தொடர்ந்து அதே தினம் காலையில் உயிலங்குளத்திலிருந்து ஒரு கோஷ்டினர் நொச்சிக்குளத்துக்கு வந்து இச் சம்பவத்தில் தொடர்புடைய நபரின் வீட்டுக்குச் சென்று அவரை தாக்கியதாகவும், இதைத் தொடர்ந்தே அங்கு இரு குழுவினருக்குமிடையே வாள் வீச்சு கலவரம் ஏற்பட்டதாகவும், இதில் உயிலங்குளத்தைச் சார்ந்த இரு சகோதரர்கள் யேசுதாசன் தேவதாஸ் (வயது 33), யேசுதாசன் றோமையா (வயது 42) வாள் வெட்டுக்கு இலக்காகி அவ்விடத்திலே மரணத்தை தழுவிக் கொண்டனர்.
இது தொடர்பாக நொச்சிக்குளத்தைச் சார்ந்த தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நபர் ஒருவர் சந்தேகத்தின் நிமித்தம் பொலிசாரல் கைது செய்யப்பட்டு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இம்மானுவேல் கயஸ் பல்டானோ முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் ஆஐர்படுத்தப்பட்டார்.
சந்தேக நபர் சார்பாக மன்னார் சட்டத்தரனி எம். ரூபன்ராஜ் பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலையாகி இருந்தார்.
இச் சந்தேக நபரை பதில் நீதவான் எதிர்வரும் 24.06.2022 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மன்னாரில் கோஷ்டி மோதலின் எதிரொலி வைத்தியசாலையில் நோயாளிக்கு மீண்டும் கத்தி குத்து
மன்னார் நொச்சிக்குளத்தில் இடம்பெற்ற கோஷ்டி மோதலால் இரு சகோதரர்கள் உயிர் இழந்த நிலையில், இக் கோஷ்டினரின் மோதலின் தொடர் கதையாக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நோயாளியின் மீது மீண்டும் கத்திக்குத்து.
இச் சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது;
கடந்த வெள்ளிக்கிழமை (10.06.2022) மன்னார் நொச்சிக்குளத்தில் உயிலங்குளத்தை சார்ந்த ஒரு கோஷ்டினருக்கும், நொச்சிக்குளத்தை சார்ந்த ஒரு கோஷ்டினருக்கும் இடையே இடம்பெற்ற கோஷ்டி மோதலில் உயிலங்குளத்தைச் சார்ந்த இரு சகோதரர்கள் வாள் வீச்சுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே மரணித்து இருந்தனர்.
அத்துடன் இக் கோஷ்டி மோதலின் போது இரு பக்கங்களிலிருந்தும் மூவர் படுக்காயங்களுக்கு உள்ளாகி மன்னார் பொது வைத்தியசாலையில் கடந்த 10ந் திகதி (10.06.2022) அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், இதில் இவ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடிருந்த நொச்சிக்குளத்தைச் சார்ந்த ஸ்ரீதரன் (வயது 52) என்ற நபரும் ஒருவராவார்.
இம் மூவரும் திங்கள் கிழமை (13.06.2022) வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட இருந்தாகவும், இந்த நிலையில் திங்கள் கிழமை (13) அதிகாலை 2 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடிருந்த நொச்சிக்குளத்தைச் சார்ந்த ஸ்ரீதரன் (வயது 52) இவர் மீது கழுத்தில் கத்திக்குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், இவர் உடன் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
கோஷ்டி மோதலில் காயப்பட்டிருந்தவர்களுக்கு துணையாக வந்து சென்றவர் ஒருவரே இத் தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் எனவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவத்தை தொடர்ந்து தங்கள் பாதுகாப்பை கருதி இச் சம்பவம் தொடர்புடைய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடிருந்த மூவரும் தங்கள் சொந்த விருப்பத்தின்படி வைத்தியசாலையை விட்டு வீட்டுக்குத் திரும்பி விட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரம் மேலும் தெரிவிக்கின்றது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY