செய்தித் துளிகள்

இளைஞன் களவெடுத்த பொருட்களுடன் கைது

மானிப்பாயில் வீடுடைத்து இலத்திரனியல் உபகரணங்களைத் திருடிய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் மானிப்பாய் முத்துத்தம்பி வீதியில் புதிததாக கட்டப்பட்ட வீடொன்றை உடைத்து அங்கிருந்த சலவை இயந்திரம், வளிச்சீராக்கி (ஏசி), சிசிரிவி கமரா உள்ளிட்ட 6 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் திருடப்பட்டன.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் மானிப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மானிப்பாய் ரிசி ஒழுங்கையைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டார். சந்தேக நபரினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படை்யில் திருட்டுப் போயிருந்த மின் உபகரணங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.


கச்சத்தீவை தாரைவார்ப்பதா?

கச்சத்தீவை இந்தியாவுக்கு கொடுக்கும் எந்த ஒரு முடிவையும் இலங்கை அரசாங்கம் எடுக்க கூடாதென தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் கோரியுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் இன்று மீனவர் அமைப்புகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், நாடு பொருளாதார ரீதியாக பின்னடைந்து இருக்கின்ற நிலையில் நாட்டின் பகுதிகளை வேறு நாடுகளுக்கு விற்பனைக்கோ குத்தகைக்கு வழங்குகின்ற செயல்பாடுகளை செய்ய வேண்டாம்.

கடற்றொழிலாளர்கள் மண்ணெண்ணையை பெறுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக இந்த கலந்துரையாடப்பட்டதுடன் இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.



சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் தீ

வவுனியா கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு தீப்பரவல் ஏற்பட்டது.

கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் நிலையத்திலேயே திடீரென இவ்வாறு தீப்பற்றியது.

இதன்போது அந்த நிலையத்தில் புதிதாக பொருத்துவதற்கென வைக்கப்பட்டிருந்த சூரிய ஒளி மின் உற்பத்தி உபகரணங்கள் தீப்பற்றி எரிந்தன.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வவுனியா நகரசபை தீயணைப்புப் பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

எனினும் புதிதாக பொருத்துவதற்கென வைக்கப்பட்டிருந்த சூரிய மின்கலங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நகரசபையின் தீயணைப்புப் பிரிவுடன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எரிபொருள் அரிதாகலாம் - எச்சரிக்கும் றனில்

அடுத்த மூன்று வாரங்கள் எரிபொருளுக்குக் கடினமான காலமாக இருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் செவ்வாய்க்கிழமை (07) ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இதனை கூறினர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

நாம் அனைவரும் எரிபொருள் மற்றும் எரிவாயுவை முடிந்தவரை கவனமாக உபயோகப்படுத்த வேண்டிய நேரம் இதுவாகும்.

எனவே, பயணங்களை முடிந்தவரை மட்டுப்படுத்தவேண்டும்.

இந்தக் காலகட்டத்தில் தேவையில்லாமல் எரிபொருள் மற்றும் எரிவாயுவை பதுக்குவதையும் தவிர்க்குமாறு அனைத்து குடிமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

வரப்போகும் கடினமான மூன்று வாரங்களுக்குப் பிறகு, எரிபொருள் மற்றும் உணவைச் சிரமமின்றி வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கடினமான மூன்று வாரங்களை பொறுமையாக எதிர்கொள்வோம்.

நம் நாட்டின் வருடம் ஒன்றுக்கான அரிசியின் தேவை 2.5 மில்லியன் மெற்றிக் தொன் ஆகும். ஆனால் எங்களிடம் 1.6 மில்லியன் மெற்றிக் தொன் அரிசி மாத்திரமே கையிருப்பில் உள்ளது.

இந்த நிலை நெல் மற்றும் பல பயிர்களுக்கும் பொதுவானது. அதனால், சில மாதங்களில் உணவு விடயத்தில் கடும் சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

நமது அன்றாட உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய உணவு பொருட்களை இறக்குமதி செய்யவேண்டும். அதற்கு ஒரு மாதத்திற்கு 150 மில்லியன் டொலர் அளவில் செலவாகும்.

ஆகையால், அழிந்து வரும் விவசாயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளைஉடனடியாக தொடங்க வேண்டும் என்றார்.


11 லட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களைத் திருடியவர் கைது

கோண்டாவிலில் களஞ்சிய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தியை உடைத்து சுமார் 11 லட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களைத் திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வருகிறார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

திருடிய இலத்திரனியல் பொருட்களை நேற்று விற்பனை செய்தபோது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

திருநெல்வேலியில் அமைந்துள்ள இலத்திரனில் பொருட்கள் விற்பனை நிலையத்தின் களஞ்சியம் கோண்டாவிலில் உள்ளது.

கடந்த மாதம் வர்த்தக நிலையத்துக்கு எடுத்து வருவதற்காக பாரவூர்தியில் பொருள்கள் ஏற்றப்பட்ட நிலையில் டீசல் இல்லாமை காரணமாக தரித்து விடப்பட்டிருந்தது. அதன்போதே இரவு வேளை பாரவூர்தி உடைக்கப்பட்டு சுமார் 11 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருள்கள் திருடப்பட்டன. சம்பவம் தொடர்பில் வர்த்தகரினால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுதொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கோண்டாவிலைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய இருவரே இந்த திருட்டை மேற்கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக 4 வழக்குகளில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பதுக்கலைத் தடுக்க சுற்றிவளைக்கப்பட்ட வியாபார நிலையங்கள்

யாழ். மாவட்டத்தில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை விலை கூட்டி விற்றல் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை விற்பனை செய்யாது சேமித்து வைத்திருத்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் பொதுமக்களால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் கீழ் யாழ்.மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் இன்று சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ்.மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை இணப்பாளர் விஜிதரனின் நெறிப்படுத்தலில் யாழ். குடாநாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள், வர்த்தக நிலையங்கள் சோதனையிடப்பட்டதோடு எரிபொருள் விற்பனை நிலையங்களின் எரிபொருள் கொள்கலன்களும் கண்காணிக்கப்பட்டன.


அவுஸ்திரேலியாவுக்கு கடல் மார்க்கமாக செல்லவிருந்த 91 பேர் கைது

கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 91 பேர் மாறவில மற்றும் சிலாபத்தில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விரு இடங்களிலும் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மாறவில ஓய்வு விடுதியில் இருந்து 13 ஆண்கள், ஒன்பது வயது சிறுவன் மற்றும் கடத்தல்காரர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சிலாபம் கடற்பரப்பில் பல நாள் மீன்பிடி இழுவை படகு ஒன்றை கடற்படையினர் கண்காணித்து 58 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் 7 சிறுவர்கள் மற்றும் ஆறு கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, புத்தளம், கல்பிட்டி, சிலாபம், மாறவில மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

குறித்த குழுவினர் மேலதிக நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


பதவியைத் துறந்து முழுநேர அரசியல்வாதியாகும் பசில்

முன்னாள் நிதியமைச்சரான பஸில் ராஜபக்ஷ தனது பாராளுமன்ற உறுப்புரிமையை துறக்கவுள்ளார் என்று சிறீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மிகமுக்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, பாராளுமன்ற உறுப்புரிமையைத் துறக்கும் பஸில் ராஜபக்ஷ இந்த வார இறுதியில் அமெரிக்கா செல்லவுள்ளார் என்று பிரபல சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறுவுநரான பஸில் ராஜபக்ஷ இரட்டைப் பிரஜாவுரிமையை கொண்டிருந்தமையால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாத நிலை காணப்பட்டது. 20ஆம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கான தடை நீக்கப்பட்டு தேசியப் பட்டியல் அவர் பாராளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றார். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 8 ஆம் திகதி எம். பியான அவர் நிதியமைச்சராகவும் பதவியேற்றார்.

நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமைகளை தொடர்ந்து அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் கடந்த ஏப்ரல் 3ஆம் திகதி நிதியமைச்சு பதவியை துறந்தார். இந்த நிலையில், 21ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் பாராளுமன்ற உறுப்புரிமையை பெறுவதற்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 21ஆம் திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பில் சிறீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் குழப்பங்கள் காணப்படுகின்றன. இந்நிலையிலேயே அவர் பாராளுமன்ற உறுப்புரிமையை துறக்கவுள்ளார் என்று கூறப்படுகின்றது. இதையடுத்து, இந்த வார இறுதியில் அமெரிக்கா செல்லும் அவர் மீண்டும் நாடு திரும்புவார் என்றும், இதைத் தொடர்ந்து கட்சியை மறுசீரமைப்பதுடன், முழுநேர அரசியலிலும் ஈடுபடுவார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.


களவாடப்பட்ட முச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டன

யாழ் போதனா வைத்தியசாலை பகுதியில் திருடப்பட்ட முச்சக்கரவண்டி பருத்தித்துறை பொலிஸ் விசேட அணியினரால் பருத்தித்துறை பகுதியில் மீட்பு ஒருவர் கைது!

கடந்த மே மாதம் யாழ் போதனா வைத்தியசாலையின் பின் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி திருடப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசேட பொலிஸ் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது யாழ் போதனா வைத்தியசாலை பின் வீதியில் திருடப்பட்ட பச்சைநிற முச்சக்கரவண்டி பருத்தித்துறை பகுதியில் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளதோடு, துன்னாலை பகுதியை சேர்ந்த ஒருவர் பருத்தித்துறை பொலிஸ் விசேட அணியிரலால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் ஒரு முச்சக்கர வண்டி பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த முச்சக்கர வண்டிக்கு இலக்கத் தகட்டை மாற்றி பாவித்தமை தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


செய்தித் துளிகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)