
posted 24th June 2022
ஒழித்து வைத்த எரிபொருள் மக்களால் கண்டுபிடிக்கப்பட்டு பகிரப்பட்டது
கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக சண்டிலிப்பாய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் விநியோகிக்கப்படாமையினால் மக்கள் தங்கள் முச்சக்கர வண்டிகளை 82 வழித்தடப் பகுதியில் நிறுத்தி குறித்த பகுதியிலேயே இரவு நேர நித்திரையையும் கழித்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகியும் எரிபொருள் விநியோகிக்கப்படாமையினால் குழப்பமடைந்த மக்கள், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாங்கிகளை சோதனைக்கு உட்படுத்தவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனையடுத்து சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரின் தலைமையில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த உத்தியோகத்தர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாங்கிகளை சோதனைக்கு உட்படுத்தியவேளை 1150லீற்றர் பெற்றோல் இருப்பது தெரியவந்தது.
அத்தியாவசிய இருப்பான 300 லீற்றரை கையிருப்பில் வைத்துக் கொண்டு ஏனைய 850 லீற்றரை விநியோகம் செய்வதற்கு பணிக்கப்பட்டது.
இதன் பிறகு முச்சக்கர வண்டிகளுக்கும், கார்களுக்கும் ஆயிரம் ரூபாய் வீதமும், மேலும் மோட்டார் சைக்கிள்களுக்கு 500 ரூபாய் வீதமும் எரிபொருள் வழங்கப்பட்டது.

எரிபொருள் வழங்காமல் சுகாதார சேவையை ஸ்தம்பிக்க வைக்க முயற்சிக்கும் சிலர்
எரிபொருள் கிடைப்பதற்கு ஒத்துழைக்காவிடில் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாகிய சுகாதார சேவை ஸ்தம்பிக்கப்படுவதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலைமை ஏற்படுமென யாழ்.போதனா வைத்தியசாலையின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
வடக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் அனைவருக்குமான ஒரே ஒரு போதனா வைத்தியசாலையாக இருக்கும் எமது வைத்தியசாலை ஆளணிப் பற்றாக்குறை இருந்தபோதும் சிறப்பாக சேவையாற்றி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் அண்மைக் காலமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையானது எல்லோரையும்போல் எம்மையும் வெகுவாகப் பாதித்துள்ளது.
அதிலும் எரிபொருளின்மை காரணமாகவும், அதன் சீரற்ற வழங்கல் காரணமாகவும் வைத்திய சேவை முடங்கும் ஆபத்து உருவாகியுள்ளது. இதை அனைவரும் உணரத் தலைப்பட்டுள்ளனர். ஆனாலும் சில குறுகிய நோக்கம் உள்ள, மனிதநேயம் அற்ற சிலர், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பங்களை உருவாக்கி வைத்தியசாலை ஊழியர்கள் எரிபொருள் பெறுவதை தடுப்பதன் மூலம் இன்பம் காண்கின்றனர்.
இருப்பினும் சுகாதார அமைச்சு வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யும் முகமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வைத்தியசாலை மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு மாத்திரம் எரிபொருளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கும் முடிவை எடுத்துள்ளது.
இது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாக இருப்பினும், அதற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கு அரச அதிபரும், பிரதேச செயலர்களும், போலீஸ் மற்றும் பாதுகாப்பு துறையினரும் மனப்பூர்வமாக முன்வரவேண்டும்.
அவ்வாறு இல்லையெனில், அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாகிய சுகாதார சேவை ஸ்தம்பிக்கப்படுவதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலைமை ஏற்படும். எனவே பொது மக்களையும் உரிய தரப்பினரையும் உணர்ந்து செயற்பட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது.

பாதுகாப்புப் படைகளோ அதிகம்! போதைப் பொருள் வினியோகமோ அமோகம்!
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போதைப்பொருள் விநியோகத்தில் இராணுவத்தினரதும், பொலிஸாரினதும் பங்களிப்பு உள்ளது. தமிழ் இளைஞர்கள் திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக்கப்படுகின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் 22 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற சுகாதார நெருக்கடிகள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றஞ்சாட்டிய அவர், மேலும் கூறுகையில்;
நாட்டின் மொத்த இராணுவத்தினரது எண்ணிக்கையில் 70 சதவீதமானோர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளனர். பொலிஸாரும் ஆயிரக்கணக்கில் உள்ளனர். இருப்பினும் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனை கட்டுக்கடங்காமல் இருப்பது யாவரும் தெரிந்தது.
வடக்கு, கிழக்கில் போதைப்பொருள் விநியோகத்தில் இராணுவத்தினரதும், பொலிஸாரினதும் பங்களிப்பு உள்ளது. வடக்கு, கிழக்கு தமிழ் இளைஞர்கள் திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக்கப்படுகின்றார்கள்.
இவ்வாறான போதைப்பொருள் அடிமைகளால் வடக்கு, கிழக்கு மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றார்கள். ஆகவே, இவ்வாறான சுகாதாரச் சீர்கேட்டை தடுக்கும் வகையில் ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.

நொச்சிமோட்டையில் விபத்து - நடுவயதினர் கொல்லப்பட்டார்
வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
வவுனியா பறனட்டகல் கிராமத்தை சேர்ந்த 42 வயதுடையவர் தனது மைத்துனருடன் அறுவடை இயந்திரத்துக்கு எரிபொருள் பெறுவதற்காக அதனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நிறுத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தபோதே விபத்து ஏற்பட்டுள்ளது.
ஓமந்தையில் இருந்து பறன்நட்டகல் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தவரை அதே திசையில் பயணித்த கார் மோதியதில் 42 வயதுடைய பாலகிருஸ்ணன் என்ற நபர் பலியானதுடன் மைத்துனர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய கார் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் ஓமந்தை பொலிஸார் காரின் இலக்கத்தை அறிந்து அதனைக் கைப்பற்றி ஓமந்தை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கழுத்தறுத்த கள்ளச்சந்தை
கிளிநொச்சி மாவட்டத்தில் கள்ள சந்தையில் எரிபொருள் வாங்க ஆசைப்பட்ட 3 பேர் சுமார் 77 ஆயிரம் ரூபாய் பணத்தினை பறிகொடுத்துள்ளனர்.
குறித்த சம்பவங்கள் கனகாம்பிகை குளம், பாரதிபுரம், மலையாளபுரம் பகுதிகளில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கனகாம்பிகை குளத்தில் 12 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு டீசல் வாங்கிய நபருக்கு டீசலுக்கு பதிலாக தண்ணீர் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பாரதிபுரத்தில் 35 ஆயிரம் ரூபாய்க்கு டீசல் வாங்கிய நபருக்கும் டீசலுக்குப் பதிலாக தண்ணீர் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் மலையாளபுரம் பகுதியில் 30 ஆயிரம் ரூபாய்க்கு டீசல் வாங்குவதற்கு பணம் கொடுத்த நிலையில் பணத்துடன் திருடர்கள் தப்பி ஓடியிருக்கின்றனர்.
இவ்வாறு தினசரி கள்ள சந்தையில் எரிபொருள் வாங்க முயற்சித்து தினசரி பொதுமக்கள் ஏமாற்றப்பட்டுவரும் நிலையில் பொதுமக்கள் இனியும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY