சிலசெய்தித் துளிகள்

சமுர்த்திப் பயனாளிகளுக்கு 5000 ரூபா கொடுப்பனவு

யாழ். மாவட்டத்தில் உள்ள 78 ஆயிரத்து 442 சமுர்த்திப் பயனாளிகளுக்கு அரசாங்கத்தின் 5ஆயிரம் ரூபா கொடுப்பனவுகள் வங்கிகளில் வைப்பிலிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;
சமுர்த்தி பயனாளிகளுக்கு 5ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் அதே நேரம் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 27 ஆயிரத்து 978 பேருக்கு அரசாங்கத்தின் 5ஆயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் 1-2 நபர்களை கொண்ட குடும்பத்துக்கு 5ஆயிரம் ரூபாவும், மூன்று நபர்களை கொண்ட குடும்பத்துக்கு 6400 ரூபாவும், நான்குக்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட குடும்பங்களுக்கு 7500 ரூபாவாக சமூர்த்திக் கொடுப்பனவுடன் வழங்கப்படவுள்ளது.

அதேநேரம், யாழ் மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் வயது முதிர்ந்தவர்கள் பட்டியலில் காணப்படும் நிலையில் அவர்களுக்கும் கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

யாழ்.மாவட்டத்தில் எரிவாயு விநியோகத்தை முறையாக மேற்கொள்வதற்கு உரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ள நிலையில், எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்தளவிலேயே கிடைக்கப் பெறுகின்றன.

ஆகவே கிடைக்கப் பெறுகின்ற எரிவாயு சிலிண்டர்களை தேவையின் அடிப்படையில் பகிரந்தளிப்பதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் அவசியம், என்றார்.


மண்ணெண்ணெய் வழங்க இந்திய தூதரகம் நடவடிக்கை

வடக்கு, கிழக்கு மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைக்கு அமைய அவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்க இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மண்ணெண்ணெய்க்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. கள்ளச் சந்தையில் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 400 ரூபாய் வரையில் விற்பனையாகிறது.

இந்த விடயம் குறித்து யாழ். இந்திய துணைத் தூதரகத்துக்கு சுட்டிக் காட்டப்பட்டதையடுத்து விவசாயிகள், மீனவர்களுக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் லீற்றர் மண்ணெண்ணெயை இலவசமாக வழங்க துணைத் தூதரகம் முயற்சிகளை எடுத்துள்ளது.

இந்த மண்ணெண்ணெயை காங்கேசன்துறை ஊடாக அல்லது கொழும்பு ஊடாக எடுத்து வருவதற்கான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அறிய வருகின்றது.



வயோதிபப் பெண்ணின் சங்கிலியை அறுத்த கள்வன்
சாவகச்சேரி - கோவில் குடியிருப்பு கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் ஆலயத்தை நேற்று திங்கட்கிழமை காலை வலம்வந்து வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வயோதிபப் பெண்ணின் சங்கிலியை இனந்தெரியாத நபர் ஒருவர் அறுத்துக்கொண்டு தப்பித்துச் சென்றுள்ளார்.

குறித்த வயோதிபப் பெண் ஆலயத்தை வலம் வந்து வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் ஆலய வாசல் பகுதியில் நின்று ஆலயத்தை இரு கை கூப்பி வணங்கிய வேளையில் பின்புறமாக வந்த திருடன் பெண்ணின் ஒன்றரைப் பவுண் சங்கிலியை அறுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பித்துச் சென்றுள்ளார்.

பெரியமாவடி சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த 67வயதான பெண் ஒருவரின் சங்கிலியே இவ்வாறு அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


சகாயராசாவுக்கு எமனாக வந்த குளவி
பருத்தித்துறை பகுதியில் நேற்று திங்கட்கிழமை காலை வீட்டு வளவில் வேலை செய்து கொண்டிருந்த போது குளவிக் கொட்டுக்கு இலக்கானவர் மயக்கமடைந்த நிலையில், வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

சக்கோட்டையைச் சேர்ந்த சூசைப்பிள்ளை சகாயராசா (வயது 64) என்பவரே உயிரிழந்தவராவார்.

இவரது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.


அவுஸ்திரேலிய கிரிக்கெட் சுற்றுப்பயண ரிக்கெட் விற்பனை வருமானம் இலங்கை மக்களுக்கு
இலங்கை மக்களுக்கு நன்கொடையாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய சுற்றுப்பயண கிரிக்கெட் தொடருக்கான ரிக்கெட்டுகள் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தையும வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா, அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை எதிர்பார்த்துள்ளதாகவும், ரிக்கெட்டுகள் விற்பனை மூலம் கிடைக்கும் முழுப் பணத்தையும் பொதுமக்களுக்கு வழங்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்தோடு, இலங்கைக்கான அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிந்தவுடன் பாகிஸ்தான் விரைவில் நாட்டுக்கு வரும் என்றும் அதன் பின்னர் கொழும்பில் ஆசிய கிண்ணத் தொடர் இடம்பெறவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே இந்த போட்டிகளை ஆதரிக்கவேண்டுமென அனைவரையும் கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் கூறினார்.


உணவு தவிர்ப்புப் போராட்டத்திலுள்ள தமிழர்களை விடுதலை செய்யபட கஜேந்திரன் வேண்டுகோள்

இந்தியாவின் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விடுதலை செய்யவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கோரியுள்ளார்.

இதற்கான நடவடிக்கையை தமிழக முதலமைச்சர் எடுக்கவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கூறினார்.

தமிழக சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களது விடுதலையை வலியுறுத்தி நேற்று திங்கட்கிழமை 17ஆவது நாளாகவும் தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், அவர்களது உடல் நிலையை கருத்திற்கொண்டு தமிழக முதலமைச்சர் உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என செல்வராசா கஜேந்திரன் கேட்டுக்கொண்டார்.


பிச்சையாக சில்லறை வீசிக்கொண்டு கச்சதீவைச் சூறையாடத் திட்டமிடும் இந்தியா
கச்சதீவு என்பது ஒரு மீனவர்களின் பிரச்னை அல்ல. எமது நாட்டிலுள்ள வளமிக்க ஒரு தீவு. எனவே எமது நாட்டில் உள்ள ஒரு தீவை கையகப்படுத்துதை, சூறையாடுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என அகில இலங்கை தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் வீ. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட இலங்கை தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் இந்தியாவிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சூழ்நிலையில் தொப்புள்கொடி உறவான தமிழ்நாடு அரசு எமக்கு உதவி செய்வதுபோல் உதவிப் பொருட்களை அன்பளிப்பாகக் கொடுத்து விட்டு, அந்த சந்தர்ப்பத்தில் கச்சதீவு பிரச்னையை ஒரு முக்கியமாக எடுத்துக்கொண்டு இருப்பது கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். மோடி தமிழகத்துக்கு வந்தபோது தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அங்கு ஒரு வேண்டுகோளையும் வைத்திருந்தார். கச்சதீவை மீளப் பெறுவதற்கு இது ஒரு தகுந்த தருணம் என்று அவர் கூறியிருந்தார். அப்படியானால், நமது நாடு வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றது. செய்வதறியாமல் தவித்து கொண்டு இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எரிகிற வீட்டில் பிடுங்குவது போல மு. க. ஸ்டாலின் இந்த கச்சதீவு விடயத்தை பிடுங்கி எடுக்கலாம் என யோசிக்கிறார். அதை ஒருபோதும் ஏற்க முடியாது. அது ஒரு மிகவும் மோசமான முடிவாகும்.

மு.க. ஸ்டாலின் தனது கருத்தை முழுமையாக பரிசோதனை செய்து இலங்கை-இந்திய மீனவர்களுக்கிடையிலான இழுவைமடி பிரச்னையை கையில் எடுத்து அதற்கு முதல் தீர்வு காணவேண்டும், என்றார்.


செவ்வாய்க்கிழமை முதல் எரிபொருள் அட்டைக்கு வழங்கப்படும் - மகேசன்

யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் எரிபொருள் அட்டைக்கு விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படும் என்று அரசாங்க அதிபர் க. மகேசன் அறிவித்துள்ளார்.

கமநல சேவைகள் திணைக்களத்தால் யாழ். மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் அட்டைகளுக்கே மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளது. மாவட்ட செயலர் க. மகேசனின் அறிவுறுத்தலில் கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுதுள்ளன.

முதல் கட்டமாக விவசாயிகளின் தேவையின் (பயிர் நிலங்களின் அளவின் பிரமாணம்) அளவில் 25 சதவீத மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளது.

எரிபொருள் அட்டை இல்லாத விவசாயிகள் தமது பிரதேச கமநல சேவைகள் நிலையத்தில் விண்ணப்பித்து எரிபொருள் அட்டையை பெற்று மறுநாள் முதல் மண்ணெண்ணெயைப் பெற முடியும் என்றும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.



பணத்தைக் காட்டினால் ஏதோ வாய் திறக்குமாம் - அப்போ இவன்?
மிருசுவிலில் பெண் ஒருவரை வாளினால் வெட்டிக் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் 2 ஆண்டுகளின் பின் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து வழங்கப்பட்ட பணத்துக்காக அந்தப் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சாவகச்சேரியைச் சேர்ந்த 26 வயதுடையவரே நேற்று சனிக்கிழமை (04) கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மிருசுவில் வடக்கைச் சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இச் சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதுதொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

மேதிகமாக யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணையில், 2 ஆண்டுகளின் பின்னர் முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து அலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் வெளிநாட்டிலிருந்து வழங்கப்பட்ட பணம் மற்றும் அறிவுறுத்தலில் இந்த தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஒட்டுசுட்டான் மற்றும் பாலாவி பகுதிகளில் 3 மாதங்களுக்கு முன் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடனும் சந்தேக நபருக்கு தொடர்புள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


அனலைதீவு கடற்கரையில் கரையொதுங்கிய மனித எச்சங்கள்

அனலைதீவு கடற்கரையில் மனித எச்சங்கள் கரையொதுங்கியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அனலைதீவு கடற்கரையிலேயே மனித எச்சங்கள் இவ்வாறு கரையொதுங்கியுள்ளன.

இது தொடர்பில் பிரதேசவாசிகள் கருத்து தெரிவிக்கையில்,

மனித எச்சங்கள் கரையொதுங்கிய கடற்கரைக்கு அருகாமையில் மயானம் காணப்பட்டதாகவும் அதிலிருந்து மனித எச்சங்கள் கடலரிப்பின் மூலம் வெளிவந்திருக்கலாம் எனத் தெரிவித்தனர். வேறு சிலர், கடலில் காணாமல் போனவரின் மனித எச்சங்கள் நீண்ட காலத்துக்குப் பின்னர் கரை ஒதுங்கி இருக்கலாம் என்று கூறினர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து பொலிஸார் அந்தப் பகுதிகளில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிலசெய்தித் துளிகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY