
posted 25th June 2022
நாட்டில் எரிபொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்ற சூழ்நிலையில், கல்முனை மாநகர பிரதேசங்களில் அவற்றை விநியோகிக்கும் நடவடிக்கைகளை முறையாக ஒழுங்குபடுத்தி, சுமுகமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று கல்முனை மாநகர சபையில் இன்று சனிக்கிழமை (25) நடைபெற்றது.
மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், ஆணையாளர் எம்.சி. அன்சார், கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், மாநகர சபை உறுப்பினர்களான சி.எம். முபீத், ஹென்றி மகேந்திரன், சட்டத்தரணி ரொஷான் அக்தர், எம்.எஸ்.எம். சத்தார், எம்.எஸ்.எம். றபீக், எம்.எம். பைரூஸ், கல்முனை பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் அப்துல் வாஹித் உட்பட கல்முனை மாநகராட்சி எல்லையினுள் இயங்கி வருகின்ற 10 எரிபொருள் நிரப்பு நிலையங்களினதும் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
இக்கலந்துரையாடலில் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விநியோகத்தின்போது ஏற்படுகின்ற குளறுபடிகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாகவும், அவற்றை நிவர்த்தி செய்து, விநியோக நடவடிக்கைகளை சீராக முன்னெடுப்பதற்குரிய பொறிமுறைகளை வகுப்பதற்கான ஆலோசனைகளும் கருத்துகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
எரிபொருள்கள் விநியோகத்தின்போது உரிய மக்களுக்கு அவை கிடைப்பதை உறுதி செய்தல், பதுக்கல் மற்றும் முறைகேடான செயற்பாடுகளை முறியடித்தல், குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்த்தல் போன்றவற்றை மையமாகக் கொண்டு ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்டன.
இதன்போது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் ஏ.எம். றகீப் அவர்கள், அரசாங்க அதிபரின் ஆலோசனைகளையும், அறிவுறுத்தல்களையும் பெற்றுக் கொண்டதுடன், முதல்வர் தலைமையிலான குழுவினர் அவரை சந்தித்து கலந்துரையாடுவதற்கும் இணக்கம் காணப்பட்டது.
இதற்கமைவாக எரிபொருள் விநியோக பிரச்சினைகளுக்கு அவசரத் தீர்வு காணுமுகமாக அனைத்து தரப்பினரதும் இணக்கப்பாட்டுடன் இங்கு சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
கல்முனை மாநகராட்சி எல்லையினுள் சுமார் 45ஆயிரம் குடும்பங்கள் வாழ்கின்ற நிலையில், தேவையான ஒவ்வொரு குடும்பமும் மாதமொரு முறையாவது மண்ணெண்ணையை பெற்றுக் கொள்ளும் பொருட்டு விசேட குடும்ப அட்டையை மாநகர சபை மற்றும் பிரதேச செயலகங்கள் இணைந்து வழங்குதல்.
அவ்வாறே கல்முனை மாநகராட்சி எல்லையினுள் பாவனையிலுள்ள வாகனங்கள் அனைத்துக்கும் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு வாகனத்திற்கும் எரிபொருள் பாஸ் வழங்க நடவடிக்கை எடுத்தல்.
இதற்காக முதற்கட்டமாக அனைத்து முச்சக்கர வண்டிகளும் கல்முனை மாநகர சபையில் பதிவு செய்யப்பட வேண்டும். குறித்தொதுக்கப்படும் நாட்களில் வருகை தந்து மோட்டார் திணைக்கள பதிவுப் புத்தகத்தின் பிரதியை சமர்ப்பித்து, பதிவு செய்து கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களும் ஏனைய வாகனங்களும் பதிவு செய்யப்படும்.
கடற்றொழில், விவசாயம், கைத்தொழில் துறைகளுக்கும், உணவுப் பண்டங்கள் உற்பத்தியாளர்களுக்கும் தேவையானளவு மண்ணெண்ணெய், டீசல் போன்றவற்றை அந்தந்த திணைக்களங்களின் சிபாரசுகளுக் கேற்ப விநியோகிக்க நடவடிக்கை எடுத்தல்.
சுகாதாரத்துறையினர், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கு பெற்றோல் வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சரியாக நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விநியோக நடவடிக்கைகளில் நிச்சயமற்றதன்மை காணப்படுவதால் தமக்குக் கிடைக்கின்ற எரிபொருள்களைக் கொண்டே மக்களுக்கு அவற்றை விநியோகிக்க முடியுமாக இருக்கும் என எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.
இதன்போது பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கிழக்குப் பிராந்திய முகாமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர், விநியோக நிலைவரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
இதன் அடிப்படையில் எதிர்வரும் காலங்களில் கல்முனை பிராந்தியத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள்களை அதிகரித்துப் பெற்றுத்தருவதற்கான உயர்மட்ட முயற்சிகள் தன்னால் மேற்கொள்ளப்படும் என முதல்வர் ஏ.எம். றகீப் உறுதியளித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY