இதழியல் டிப்ளோமா சான்றிதழ்

“மக்களை அச்சப்படுத்தாத, உண்மை, நேர்மை மிக்க செய்திகளை ஊடகங்கள் வெளியிட வேண்டும். கவர்ச்சிக்காகவும், கிளர்ச்சிக்காகவும் செய்திகள் வெளியிடப்படும் நிலை மாற வேண்டும்”

இவ்வாறு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தகைசார் பேராசிரியர் கலாநிதி ஏ.சண்முகதாஸ் கூறினார்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், 2017 – 2018 வருட இதழியல் டிப்ளோமா பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், இணைய வழி மூலம் அதிதி உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் இன்று (ஞாயிறு) நடைபெற்ற மேற்படி இதழியல் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர், கலாநிதி ஏ. ரமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார் சகிதம், பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்து சித்திபெற்ற மாணவர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ்களையும் வழங்கினார்.

பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவரும், இதழியல் பயிற்சி நெறியின் இணைப்பாளருமான பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா, முகாமைத்துவ மற்றும் தகவல் தொழில் நுட்பத்தின் தலைமைப் பேராசிரியரும், வெளிவாரி கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளருமான பேராசிரியர் எம்.எச். தௌபீக் ஆகியோரின் நெறிப்படுத்தலில் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் இணைய வழி மூலம் அதிதி உரையாற்றிய தகைசார் பேராசிரியர் கலாநிதி சண்முகதாஸ் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“பயணம் செய்வதற்கான எரிபொருள், பற்றாக்குறை, தட்டுப்பாடு பொன்ற இடர்கள் காரணமாக இந்த நிகழ்வில் நேரில் வந்து கலந்து கொள்ள முடியாமல் போனமை கவலையளிக்கின்றது.

எனினும் இணையவழி மூலம் நிகழ்வில் பங்கு கொண்டு உரையாற்றக் கிடைத்தமை ஆறுதலளிக்கின்றது.

தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மின்னியல் சமூக ஊடகங்களின் நன்மை, தீமைகளை அனுபவிக்கும் இக்கால கட்டத்தில், நேர்மையான ஊடகவியலாளர்களை உருவாக்கும் இதழியல் பயிற்சி நெறியைத் தென் கிழக்கு பல்கலைக்கழகம் தெடர்ந்துவருவது பெரிதும் நன்மை பயக்கத்தக்கதும், பாராட்டத்க்கதுமாகும்.

மக்களை அச்சப்படுத்தும் வகையிலான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள், சமூக வலைத்தளங்களும் ஊடுருவி எதிர் மறைவுச் செய்திகளை வழங்கும் நிலையில் இத்தகைய பயிற்சி நெறிகளின் அவசியம் உணரப்பட்டுள்ளது.

இதன் நிமித்தம் காலத்திற்கு ஏற்ற உண்மையான, நேர்மை மிக்க ஊடகவியலாளர்கள் உருவாக்கப்படுவதுடன், மொழிப் பயன்பாடுமிக்கவர்களாகவும் அவர்கள் திகழ வேண்டும்.
இந்த வகையில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இந்த பயிற்சி நெறியைத் தொடர்வதன் மூலம், நாட்டுக்கும், சமூகத்திற்கும் பொறுப்புள்ள பணியை ஆற்றிவருகின்றது.

இதன் மூலம் மிகச் சிறந்த ஊடகவியலாளர்களை, இதழியல் பயிற்சி பெற்றவர்களை இந்த பல்கலைக்கழகம் உருவாக்கிவருவது சிறந்த பாராட்டுக்குரிய சேவையாகும்” என்றார்.

வெளிவாரி கற்கைகள் நிலையத்தின் பிரதி பணிப்பாளர் சிவகுமார் உட்பட பயிற்சி நெறியின் வளவாளர்கள், பல்கலைக்கழக பீடாதிபதிகள், உயர் உத்தியோகத்தர்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதழியல் டிப்ளோமா சான்றிதழ்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)