
posted 10th June 2022
ஆடி மாத மருதமடு ஆலய பெருவிழாவானது ஆனி மாதம் 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆடி மாதம் 2ஆம் திகதி பெருநாள் திருப்பலியுடன் நிறைபெறவுள்ளது.
இலங்கையில் வாழ் கத்தோலிக்கரின் முக்கிய யாத்திரை ஸ்தலமாக விளங்கும் மன்னார் மாவட்டத்தில் மடு அன்னையின் ஆடி மாதப்பெருநாள் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (10.06.2022) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தின் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, குருமுதல்வர் அருட்பணி பி. கிறிஸ்துநாயகம் அடிகளார், மடு ஆலய பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளார், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வினோதன், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்கள உயர் அதிகாரிகளும் இவ் ஆலோசனை கூட் டத்தில் கலந்து கொண்டனர்.
கடந்த இரு வருடங்கள் மருதமடு அன்னையின் ஆடி மாத பெருவிழாவில் கொரோனா தொற்று நோய் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டபோதும் இவ் வருடம் இந்நிலை மாறி பக்தர்கள் கலந்து கொள்ள முடியும் எம் நாட்டுக்காக மருதமடு அன்னையிடம் நாம் கையேந்துவோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.
இக் கூட்டத்தைத் தொடர்ந்து ஆயர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்;
வருடந்தோறும் இவ் விழாவுக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றபோதும் கடந்த இரு வருடங்களாக நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று நோயின் காரணமாக பக்தர்கள் வருகை மட்டுப் படுத்தப் பட்டிருந்தது
அன்றைய காலத்தில் சுகாதார நடைமுறைக்கு ஏற்ப குறிப்பிட்ட பக்தர்கள் மட்டுமே விழாவில் கலந்து கொள்வதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன.
2020ஆம் ஆண்டில் இவ்விழாவில் கலந்துகொள்வதற்கு அதாவது ஒரு திருப்பலியில் 30 பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்வதற்கான அனுமதி அன்று வழங்கப்பட்டிருந்தது. ஆனால், 2021ஆம் ஆண்டு திருப்பலிக்கு 100 பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
கடந்த இரு வருடங்களைப் போல் அல்லாது இவ்வருடம் இத்திருவிழாவில் கலந்து கொள்ள கலந்து கொள்ள கட்டுப்பாடு இல்லாத நிலையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மருதமடு ஆலயத்தில் அமைந்துள்ள 380 வீடுகளும் தற்பொழுது பக்தர்கள் ஒதுக்கிக் கொண்டனர்.
இவ் விழாவுக்கு இனி வரும் பக்தர்கள் முன்னைய நாட்கள் போன்று திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் வந்து போகக்கூடிய மாதிரியும், கூடாரம் போட்டு தங்கி போகக்கூடிய மாதிரியும் வசதிகள் உள்ளன.
ஆண்டுதோறும் மடு பெருவிழாவை முன்னிட்டு நடைபெறும் நவ நாட்களும் அதற்கு முன் நடைபெறுகின்ற ஆராதனைகளும் பெருவிழாவும் வழமைபோன்று இத் திருவிழாவிலும் நடைபெறும்.
நடைபெறும் திருவிழாவின் போது எமது நாட்டுக்காக விசேடமாக மருதமடு அன்னையை நோக்கி வேண்டுவதற்காக யாவரையும் அழைத்து நிற்கின்றோம்.
தற்பொழுது எம் நாட்டு மக்கள் கஷ்டப்படும் அவதிப்படும் ஒரு காலமாக இது அமைந்திருக்கின்றது.
இந்நாட்டிலே பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் பல பிரச்சனைகள் தலைதூக்கி காணப்படுகின்றன.
இவ் வருடம் எமது நாட்டு மக்களுக்கு துன்பம் நிறைந்த ஒரு ஆண்டாக இருக்கின்றது. பொருள்களின் விலைவாசிகள் உச்சகட்டத்தில் இருப்பதினாலும், எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலும், வீட்டின் தேவைகளுக்கு மண்ணெணெய் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலும் மக்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையும் நாட்டிலேயே காணப்படுகின்றது.
எனவே இந்நிலை நாட்டிலிருந்து விலக வேண்டும். மக்களின் துன்பம் நீங்க வேண்டும். நாட்டிலே பொருளாதாரப் பிரச்சனை நீங்க வேண்டும் என்று மருதமடு அன்னையிடம் நாம் அனைவரும் ஒன்றித்து கையேந்தி நிற்போம்.
விசேடமாக திருவிழா காலங்களில் நாம் எமது நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் மருதமடு அன்னையை நோக்கி பயணிப்போம் என நான் இந் நேரத்தில் உங்களிடம் வேண்டி நிற்கின்றேன்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)