
posted 12th June 2022
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் மூலிகைத்தோட்டம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை தான் எடுப்பதாக, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்தார்.
நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு சினேக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் இங்கு கருத்து தெரிவித்த ஆளுநர்;
கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், இந்த மூலிகைத் தோட்டம் உருவாக்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம். அத்துடன் ஆயுர்வேத மருந்து உற்பத்திக்காக வெளிநாடுகளிலிருந்து பல்வேறு வகையான மூலிகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால், இவ்வாறு தோட்டங்களை அமைத்து மூலிகைகளை நாம் உற்பத்தி செய்தால் இறக்குமதி செலவுக்கான செலவீனங்களை குறைத்து, அந்நியச் செலாவணியை நாம் மீதப்படுத்த முடியும்.
எனவே பொத்துவில் பிரதேசத்தில் இந்த தோட்டத்தினை அமைப்பதற்காக விவசாயிகளுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து, அவர்கள் மூலம் இதனை உற்பத்தி செய்வதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்.
மேலும், கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தரிசு நிலங்களில் மூலிகைத் தோட்டங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு பெரிய மூலிகைத்தோட்டம் ஒன்று உருவாகுமானால், நோயற்ற ஆரோக்கியமான சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கு இது மிகப்பெரும் வரமாக அமையும்.
எனவே, இந்தத் திட்டத்தினை மேற்கொண்டு வெற்றி காண்பதற்கும், கிழக்கு மாகாணத்தில் ஆயுர்வேத வைத்தியத் துறையினை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல, சகல ஆயுர்வேத வைத்தியர்களும், மற்றும் ஊழியர்களும் தயாராக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ், நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் நபீல் அலியார், நிந்தவூர் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் வை.எல். சுலைமாலெவ்வை உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை, இந்த விஜயத்தின் ஞாபகார்த்தமாக, கிழக்கு மாகாண ஆளுநரினால் பிங்க் நிறத்தில் காய்க்கும் மாமரம் ஒன்றும் நடப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)