மடுத்திருவிழாவில் சுகாதார முறைப்படி அமைய நடவடிக்கை - அரச அதிபர்

மருதமடு ஆடி மாத பெருவிழாவுக்கு அதிகமான உணவகங்கள் அமைக்க நடவடிக்கை. இவ் உணவகங்களில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்கும் தன்மையும், விலைகள் தொடர்பாகவும் கவனிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் யாத்திரை ஸ்தலமாக விளங்கும் மடு அன்னையின் ஆடி மாதத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (10.06.2022) அரசாங்க அதிபர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதைத் தொடர்ந்து மன்னார் அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்;

மடு அன்னை ஆடி மாத திருவிழாவினை கொண்டாடும் முகமாக வெள்ளிக்கிழமை (10.06.2022) சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டோம்.

கடந்த இரண்டு வருடங்கள் கொரோனா தொற்று நோய் காரணமாக அதிகமான பக்தர்கள் விழாவுக்கு வருகை தர முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.

ஆனால், இம்முறை ஆயரின் கருத்தின்படி 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இவ் ஆடி மாதத் திருவிழாவுக்கு வருகை தர இருப்பதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகவே, இது தொடர்பாக நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் நாங்கள் சுகாதாரம் மின்வசதி போக்குவரத்து நீர் வசதி மற்றும் பாதுகாப்பு சம்பந்தமாகவும் இராணுவம் போலீசாருடனும் திணைக்கள அதிகாரிகளுடனும் நாங்கள் இக்கூட்டத்தில் கலந்துரையாடினோம்.

இவ் ஆலய திருவிழாவை முன்னிட்டு இக்காலப் பகுதியில் அதிகமான உணவுக் கடைகள் அமைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகின்றது.

அத்துடன், இவைகள் சம்பந்தமாகவும் உணவகங்களில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்கும் தன்மையும் விலைகள் தொடர்பாகவும் கவனிப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகின்றது.

இவற்றைக் கவனிப்பதற்கு சுகாதார பகுதியினரும், நுகர்வோர் அதிகார சபையினரும் இதில் முழுமையாக ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

மேலும், இப்பகுதியில் அமைக்கப்படும் கடைகளுக்கு பிரதேச சபையினால் இம்முறை வரி அறவிடப்படாவிட்டாலும், இனிவரும் திருவிழாக்களில் வரி அறவிடப்படுவதைப்பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.

ஆகவே திருவிழாவுக்கு கடைகள் அமைக்கும் உரிமையாளர்கள் பிரதேச சபையின் இந்த வேண்டுகோளுக்கு எதிர்காலத்தில் ஒத்துழைப்பு தருவீர்களென எதிர்பார்க்கின்றோம்.

எனவே, பெருவிழாவில் பங்குபெற வரும் அனைவரும் தேவைக்கதிகமான பொருட்களைக் கொண்டுவருவதைத் தவிர்த்துக் கொள்ளவும். இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக சோதனைச் சாவடிகளில் ஏற்படும் தடங்கலைத் தவிர்த்துக் கொள்ளமுடியுமென அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மடுத்திருவிழாவில் சுகாதார முறைப்படி அமைய நடவடிக்கை - அரச அதிபர்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)