
posted 12th June 2022
மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 34வது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.
1988ஆம் ஆண்டு ஜுன் மாதம் 06ஆம் திகதி இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக்குழு ஒன்றினால் மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் வைத்து அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ சுட்டுக்கொல்லப்பட்டார்.
அன்னாரது சமாதியானது புனித மரியாள் பேராலயத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஞாயிறு அன்று (12.06.2022) நினைவேந்தலும் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டிலும், எகட் ஹரிதாசின் அனுசரணையுடனும் இந்நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் தலைவர் அருட்தந்தை ஜெகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அருட்தந்தை எ.தேவதாசன் அடிகளார் மற்றும் எகட் ஹரித்தாசின் இயக்குனர் அருட்தந்தை ஏ. ஜேசுதாசன் மற்றும் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் சகோதரர்கள், உறவினர்கள், பல்சமய ஒன்றிய பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது சமாதியில் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அன்னாரின் உருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அஞ்சலி உரைகளும் நடைபெற்றன.
தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் இலக்கு நோக்கி பயணிக்க ஆரம்பித்த காலத்தில், ஆக்கிரமிப்புப் படையினரால் மக்கள் அழிக்கப்பட்டார்கள். சுற்றிவளைப்புக்கள், கைது செய்து விசாரணையின்றி அடைத்து வைத்தல் போன்ற பல்வேறு மக்களின் துன்ப துயரங்களிற்கு துணிந்து களமிறங்கி சேவை செய்த அருட்தந்தை சந்திரா அவர்கள் தமிழ் தேசிய விடுதலையை உள்ளுணர்வோடு நேசித்ததனால் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஏற்றுக் கொண்டவராக காணப்பட்டார்.
அதனால் மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட மக்கள் அமைப்பு பலம் பொருந்தியதாகவும், அனைத்து விடயங்களிலும் தகமைசார் செயற்பாட்டாளர்களை கொண்டிருந்ததற்கும், வண. பிதா சந்திரா அதிபர் வணசிங்க போன்ற தன்னலமற்ற உன்னத மனிதர்களின் செயற்பாடுகளே காரணமென போற்றப்படுகின்றது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)