
posted 10th June 2022
உலோக கரண்டியைச் சூடாக்கி, சுட்டு சித்திரவதை செய்தாக அவரது மகளால் தொடுக்கப்பட்ட வழக்கு, இப்போது 14 வயதாகிய அவள், தனது தந்தை குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையிலே சிறை வாசம் அனுபவிக்கக் கூடாதென்று மன்றில் அழுது புலம்பியதைத் தொடர்ந்து சிறைவாசம் தவிர்க்கப்பட்டு தண்டனையுடன் வழக்கு முடிவுக்கு வந்தது.
மன்னார் எருக்கலம்பிட்டியைச் சார்ந்தவர். தனது 9 வயது மகளை உலோகக் கரண்டியை சூடாக்கி சுட்டதாக, அதாவது சித்திரவதை செய்ததாக கூறி இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 308ஏ இன் கீழ் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ் வழக்கு செவ்வாய் கிழமை (07.06.2022) மன்னார் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது.
அப்பொழுது வழக்கை தொடர்ந்து வாதாடா விரும்பாத தந்தை, தான் குற்றவாளி என மன்றுரை செய்ததன் பின்னர், அவரின் மகளாகிய 14 வயது சிறுமியும் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
தந்தை சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிய சட்டத்தரணி எஸ். டினேஸ், மன்றில் எதிரியின் சார்பாக கருத்தை முன்வைக்கையில்;
பாதிக்கப்பட்ட சிறுமி எதிரியின் சொந்த மகள் என்றும், அந்த சிறுமி இன்றைய தினம் தனது தந்தையுடனேயே நீதிமன்றம் வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையென்றும், இவர் கடற்தொழில் செய்தே தனது குடும்பத்தை பராமரித்து வருவதாகவும், இவருக்கு சிறைதண்டணை விதிக்கபடும் சந்தர்ப்பத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த குடும்பம், அந்தச் சிறுமி உட்பட அனைவரும் பாதிக்கப்படுவார்கள் என்றும், ஒத்திவைத்த சிறைதண்டனையைத் தவிர்த்து தண்ட பணத்தினால் தண்டிக்குமாறும் விண்ணப்பத்தினை செய்திருந்தார்.
வழக்குத்தொடுனர் சார்பாக தோன்றிய அரச சட்டத்தரணி குறித்த குற்றச்சாட்டுக்கு தண்டணையாக 2 வருடங்கள் குறையாத 10 வருடங்களுக்கு மேற்படாத சிறைதண்டனை மற்றும் தண்டபணம் மற்றும் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென இலங்கை தண்டணைச்சட்டக்கோவையின் பிரிவு 308யு(2) கூறுவதாகவும், ஆதலினால் கட்டாய சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்றும் ஒத்திவைத்த சிறை தண்டணை வழங்க முடியாது எனவும் உயர் நீதிமன்றத்தின் தீர்க்கப்பட்ட வழக்குகளை மேற்கோள்காட்டியும் சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்பதினை அரசியல் அமைப்பின் உறுப்புரிமை மற்றும் சர்வதேச சிறுவர் பாதுகாப்பு சமவாயத்தினையும் எடுத்துக்காட்டி அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டுமென விண்ணப்பம் செய்திருந்தார்.
இருபக்க விண்ணப்பத்தினையும் செவிமடுத்த கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி அவர்கள் அந்த சிறுமியினை அழைத்து இந்த சம்பவத்திற்கு பிறகு வேறு எது துன்புறுதல் ஏற்பட்டதா? என வினாவினார். அந்த சிறுமி இல்லையென்றும், அப்பா எங்களை நல்லா பார்த்துக் கொள்கின்றார் என்றும் கூறினார்.
அதன்பின்னர் உங்களை யார் பார்த்துக்கொள்கின்றார்? என கேட்க, அச்சிறுமி தனது மழலை மொழியில், அப்பா டோலர் தொழிலுக்குப் போய் உழைக்கின்றார் என்றும், நானும், தம்பி, தங்கைகள் இருக்கின்றார்கள் என்றும் அம்மாவும் வீட்டில்தான் இருக்கின்றோம் என்றும் கூறினாள்.
அனைத்தினையும் ஆராய்ந்த கௌரவ மேல் நீதிமன்ற நீதிபதி அவர்கள் சட்டம் கட்டாயம் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று ஏற்பாட்டினை கொண்டிருந்தாலும், வழக்கின் தன்மை, எதிரியின் குடும்ப நிலை என்பவற்றை கருத்தில் கொண்டு 2 வருட சிறை தண்டனை 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டும் ரூபா 10000 தண்ட பணமும் விதிக்கப்பட்டது.
தண்டப்பணத்தினை செலுத்துவதற்காக எதிரி சிறை கூண்டில் அடைக்கப்பட்டார். தனது தந்தை சிறையில் அடைக்கப்பட்டதினை பார்த்த சிறுமி நீதிமன்றத்தில் சத்தமிட்டு அழத் தொடங்கினாள். அப்பொழுது பெண் பொலிசார் அச்சிறுமியை அழைத்துக்கொண்டு வெளியே சென்றனர்.
அடுத்த வழக்கும் அழைக்கப்பட்டது ஆனால் சிறுமியின் அழுகை நிற்கவில்லை, நீதிபதி அவர்கள் அச்சிறுமியை அழைக்குமாறு கூறினார். ஏன் அழுகின்றீர்கள் என வினாவினார்?
அச் சிறுமி அப்பா வேண்டும் என்று அழுததும், நீதிபதி அழ வேண்டாம் அப்பா வருவார். உங்கள் அப்பாக்கு சிறை தண்டனை வழங்கப்படவில்லையென ஆறுதல் கூறினார்.
அதன் பின்னர் சட்டத்தரணிகளை கண்ணுற்ற நீதிபதி அவர்கள் சட்டத்தில் கட்டாய சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டுமென கூறியிருக்கின்ற போதிலும், இவ்வாறான புற விடயங்களையும் அவதானிக்க வேண்டுமெனவும், சிறைத் தண்டனை விதிக்கபடும் பட்சத்தில் சிறுமியுடன் சேர்த்து குடும்பம் முழுவதுமாக பாதிக்கப்படுமென கூறினார் என இவ் வழக்கில் முன்னிலையாகிய சட்டத்தரனி எஸ். டினேஸ் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)