
posted 12th June 2022
எதிர் காலத்தில் இனவாத சிந்தனையில் இருந்து விலகி சகல இனங்களையும் ஏற்றுக்கொள்கின்ற ஆட்சியாளர்களை தெரிவு செய்வதுடன் வாக்களித்த மக்கள் மீது பழிபோடும் தரப்பிற்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இவ்வாறு தெரிவித்தார்.
சபா குகதாஸ் ஊடக செய்தியில் தெரிவித்திருப்பதாவது;
பாராளுமன்ற உறுப்பினர் பஸில் ராஐபக்ச தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இராஐனாமாச் செய்த பின்னர், ஊடகவியலாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கும் போது நாட்டின் தற்போதைய நிலைக்கு பொதுஐனப் பெரமுன கட்சிக்கு வாக்களித்த மக்களும் பொறுப்புக் கூற வேண்டும் என மொட்டுக்கு வாக்களித்த மக்களுக்கு சாட்டையடி கொடுத்துள்ளார். அத்துடன் ராஐபக்சாக்களுக்கு மூன்று தடவை மக்கள் வாக்களித்துள்ளனர். இனியும் வாக்களிப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
சிங்கள மக்கள் மத்தியில் 49 லட்சம் மக்கள் கடந்த ஐனாதிபதித் தேர்தலில் சஐித் பிறேமதாஸவிற்கு வாக்களித்தனர். இவர்கள் இனவாத கோசத்தை முன்நிலைப்படுத்த விரும்பவில்லை. ஆனால் கோத்தாவிற்கு 69 லட்சம் மக்கள் வாக்களித்தனர். அவர்கள் அனைவரும் பௌத்த சிங்கள கோசத்தை முன்னநிலைப்படுத்தினர். இதன் விழைவை தற்போது முழு நாட்டு மக்களும் அனுபவிக்க வழி ஏற்படுத்தியுள்ளனர் .
எதிர் காலத்தில் இனவாத சிந்தனையில் இருந்து விலகி சகல இனங்களையும் ஏற்றுக் கொள்கின்ற ஆட்சியாளர்களை தெரிவு செய்வதுடன் வாக்களித்த மக்கள் மீது பழிபோடும் தரப்பிற்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும்.
சிங்கள மக்கள் தமக்கு இனவாத நச்சு விதையை விதைத்து ஆட்சி அதிகாரத்தில் ஏறி நாட்டை கொள்ளை அடிக்கும் கொள்ளையரை விரட்டும் வரை இலங்கைத் தீவை அமைதியான, சுபீட்சமான நாடாக மாற்ற முடியாது என குகதாஸ் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)