குளத்தில்  நீராடிய இரு மாணவர்கள் உயிரிழந்தனர்

குளத்தில் நீராடிய இரு மாணவர்கள் உயிரிழந்தனர்

வவுனியா ஈரட்டைபெரிய குளத்தில் நேற்று வியாழக்கிழமை நீராடிய நான்கு மாணவர்களில் இருவர் உயிரிழந்தனர். மற்றைய இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது,

15, 16 வயதுடைய குறித்த நான்கு மாணவர்களும் தமது வளர்ப்பு நாயுடன் குளத்துக்கு சென்றுள்ளனர். நாயைக் குளிப்பாட்டி நீந்திக் கொண்டிருந்த நால்வரும் நீரில் மூழ்கியுள்ளனர்.

குளத்தில் நீராடிக்கொண்டிருந்த ஏனையோர் நீரில் மூழ்கிய மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ஆபத்தான நிலையில் உடனடியாக வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஏனைய இருவரையும் பொலிஸார், இராணுவத்தினரும் இணைந்து தேடினர். இதில், மற்றைய இரு மாணவர்களின் சடலங்களுமே மீட்கப்பட்டன.

சடலமாக மீட்கப்பட்ட இரு மாணவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து வருகின்றனர்.


டெங்கு தொற்று வேகமாக பரவுகின்றது

இலங்கையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு தொற்று வேகமாக பரவி வருகிறது. மே மாதம் மட்டும் 6,483 டெங்கு நோயாளர்கள் பதிவாகினர் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டில் மட்டும் 24,523 பேர் டெங்கு தொற்றுக்கு இலக்காகினர். இவர்களில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மட்டும் 313 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிகளவிலான தொற்றாளர்கள் கொழும்பில் பதிவாகியுள்ளனர். அடுத்த இடங்களில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, கேகாலை, கண்டி, காலி, இரத்தினபுரி மாவட்டங்கள் உள்ளன.

கடந்த 3 மாதங்களாக டெங்கு நோயாளர் தொகை அதிகரித்து வரும் நிலையில், தென்மேற்கு பருவ மழையால் எதிர்வரும் நாட்களில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும். எனவே பொதுமக்கள் நோய் வராமல் தடுக்க வீடுகள், அலுவலக வளாகங்கள், பொது இடங்களில் நுளம்பு பெருகும் இடங்களை அழிக்க வேண்டும்.

பொருளாதார நெருக்கடி, கோவிட் 19 தாக்கம் காரணமாக டெங்கு கட்டுப்பாடு புறக்கணிக்கப்பட்டது. இதன் விளைவே டெங்கு தொற்று அதிகரிப்பு. 24 மணி நேரத்துக்கு மேலாக காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவதும் அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.


இருசாராரும் பேசித்தீர்கப்பட வேண்டியது

“கச்சதீவை தமிழகம் மீள பெறுவதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படையும் என்பதனை தமிழக முதல்வர் அனுதாபத்துடன் அணுகி கச்சதீவை மீளப்பெறுவதற்கான விடயங்களை வலியுறுத்தாது இரு சாராரிடமும் பேசித் தீர்த்து செயல்பட வேண்டும்”, என வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார் .

யாழ்ப்பாணத்தில் அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

மேலும், இலங்கை தமிழர்களுடைய பிரச்னைகளில் கூடுதலான கரிசனை எடுக்கின்ற தலைவர்களில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினையும் ஒருவராகக் கருதுகின்றோம்.

தமிழக மீனவர்களின் மீன்பிடியானது கச்சதீவு வரை செல்லவேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், கச்சதீவை மீண்டும் வழங்குமாறு கேட்டுள்ளார்கள் .

வட, கிழக்கு மீனவர்கள் தொழில் புரியும் கடற்கரையோரங்களில் , சிங்கள மீனவ தொழிலார்களின் சுரண்டல் மற்றும் தமிழக மீனவர்களின் சுரண்டலால் தமிழ் மக்கள் பெரும் பிரச்னைகளை எதிர்நோக்குகின்றனர். எனவே, இரண்டு பக்கங்களிலும் உள்ள பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் எடுப்பதுடன் , இலங்கை வாழ் தமிழர்களையும் தனது தமிழ் மக்களாக பார்க்க வேண்டும்.

கச்சதீவை தமிழகம் மீள பெறுவதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படையும் என்பதை தமிழக முதல்வர் அனுதாபத்துடன் அணுகி, கச்சதீவை மீளப்பெறுவதற்கான விடயங்களை வலியுறுத்தாது இரு சாராரிடமும் பேசி தீர்த்து செயல்படுவது என்பது அவரால் மாத்திரமே முடியும்.

இதேவேளை 21ஆம் திருத்தத்தில் ஆரம்பத்தில் உள்ள மொழி, மத உரிமை , மனித அடிப்படை உரிமை அப்படியே இருக்கத்தக்கதாக 20ஆவது திருத்தத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீள பாராளுமன்றத்திற்கு போகிற வேலையே தவிர, தமிழ் மக்களுக்கு சார்பான, தீர்வான எந்த விடயங்களும் 21ஆம் திருத்தத்தில் இல்லை.

மக்களுக்கு சார்பான விடயமாக எந்த விடயங்களும் 21ஆம் திருத்தத்தில் இல்லை. இது அபரீவிதனமான அதிகாரங்களை தொடர்ந்தும் தக்க வைப்பதற்கான ஏற்பாடுகளாவே நான் பார்க்கிறேன்.
எனவே 20ஆவது திருத்தமோ 21ஆவது திருத்தமோ வரப்போவதில்லை என்பது எனது சொந்தக்கருத்து, என்றார் .


குளத்தில்  நீராடிய இரு மாணவர்கள் உயிரிழந்தனர்

அரச உத்தியாகத்தர்களுக்கு விதைப்பொதிகள்

விதைப்பொதிகள், பயன்தரு மரக் கன்றுகள் மற்றும் இயற்கை உரப்பொதிகள் என்பனவற்றை அரச உத்தியாகத்தர்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு விதைப் பொதிகளையும் பயன்தரு மரக்கன்றுகளையும் சம்பிரதாய பூர்வமாக வழங்கினர்.

நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு வீட்டில் தோட்டங்களை உருவாக்கி அதன் மூலம் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் இந்த விதைப் பொதிகள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படவுள்ளன.


ஐந்து மாதங்களில் மட்டும் 288,645 பேருக்கு கடவுச்சீட்டு!

இலங்கையில் முதல் ஐந்து மாதங்களில் 288,645 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்ல இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 288,645 பேர் தமது கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளனர் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் பியூமி பண்டார தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து பலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடியுள்ளனர் என்றும், இதனால் அதிகமானோர் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

இந்த வருடம் ஜனவரியில் 52,278, பெப்ரவரியில் 55,381, மார்ச் மாதம் 74,890, ஏப்ரலில் 53,151, மே மாதம் 52,945 ஆகிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

நாளாந்தம் முன்பதிவு செய்யாதவர்களால் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தைச் சுற்றி பல கிலோமீற்றர் தூரம் வரிசைகள் காணப்படுவதாகவும், நாளாந்தம் 1500க்கும் அதிகமானோர் சேவையாற்றி வருகின்றனர் என்றும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, 2021 ஆம் ஆண்டில் 382,506 கடவுச்சீட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.


21ஆவது திருத்தச் சட்டம்

முன்மொழிவுகளை வழங்கினர் சுயாதீன எம். பிக்கள் குழுவினர்.
இலங்கையில் 21ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான விளக்கமளிப்பு கூட்டம் ஒன்று நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பாராளுமன்றில் தனித்து இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தமது யோசனைகள், திருத்தங்களை நீதி அமைச்சரிடம் நேற்று சமர்ப்பித்தது.

இந்தத் திருத்தத்தில் பாதுகாப்பு அமைச்சை மட்டும் ஜனாதிபதி வைத்திருக்கவும், பிரதமர் தேசிய பாதுகாப்பு சபையில் உறுப்பினராக இருக்கவும் யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், எந்தவோர் அரசாங்கத்துடனும் இலங்கை அரசாங்கம் உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் சந்தர்ப்பத்தில் பாராளுமன்றின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்த யோசனையில் விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார உதய கம்மன்பில உள்ளிட்ட 9 கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.


குளத்தில்  நீராடிய இரு மாணவர்கள் உயிரிழந்தனர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY