
posted 27th June 2022
சரணடைந்த, அல்லது கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்கள் விடயத்தில் காணாமல் போனோர் அலுவலகம் நீதியான விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில் நேர்மையாக செயல்படவில்லை என ஐக்கிய காங்கிரஸ்- உலமா கட்சி குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளது.
இது சம்பந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்துக்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீதினால் எழுதப்பட்ட கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது;
நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் வாழ்ந்த பல முஸ்லிம்கள் 1983 முதல் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று இன்றுவரை எவருக்கும் தெரியவில்லை.
அதே போல் 1990களில் முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசா, விடுதலைப்புலிகள், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் ஆகியோர் தேனிலவு கொண்டாடிய காலத்தில் பலநூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் புலிகளால் கைது செய்யப்பட்டனர்.
அதே போல் பல இளைஞர்கள் சரணடையாவிட்டால் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை கைது செய்வோம் என புலிகள் சொன்னதால் கல்முனை, மட்டக்களப்பு போன்ற ஊர்களில் இருந்த விடுதலைப்புலிகளின் முகாம்களில் முஸ்லிம் இளைஞர்கள் சரணடைந்தனர். தமது மகன்மாருக்காக அவர்களின் தந்தை, சகோதரர்களும் பிணையாக சரணடைந்தனர். இவர்களில் எனது சகோதரர் அக்றம் ரிழாவும் ஒருவர். அவரை புலிகள் எமது வீட்டுக்கு வந்து கைது செய்தனர். ஆகவே, இவை பற்றிய பூரண அறிவு எனக்கு உண்டு.
இவர்களுக்கு என்ன நடந்தது என்று இன்று வரை தெரியவில்லை.
அதே போல் 1990ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கல்முனையில் இருந்து காத்தான்குடி நோக்கி சென்ற 125 முஸ்லிம்கள் களுவாஞ்சிக்குடியை தாண்டியதும் குருக்கள் மடம் என்ற இடத்தில் வைத்து கடத்தப்பட்டனர். இவர்களில் எனது தந்தை அப்துல் மஜீத் மௌலவியும் ஒருவர். இவர்களுக்கும் என்ன நடந்தது என்றும் தெரியவில்லை என்பதுடன் யுத்தம் முடிந்த பின்னரும் இவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டு விசாரணை நடத்தப்படவில்லை.
நல்லாட்சி காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினால் கல்முனையில் நடத்தப்பட்ட விசாரணையின் போது நானும் கலந்து கொண்டு முறையிட்டிருந்தேன். குறைந்தது குருக்கள் மடத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் அடக்க ஸ்தலத்திற்கு பாதுகாப்புடன் சென்று அவர்களுக்காக கடவுளிடம் பிரார்த்திக்கும் மனிதாபிமான வசதிகளையாவது செய்து தரும்படி விசாரணைக் குழுவிடம் கேட்டிருந்தேன். ஆனாலும் எதுவித நடவடிக்கையும் இன்று வரையும் எடுக்கப்படவில்லை.
ஆகவே, இது விடயத்தில் மேற்படி அலுவலகமும் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், கௌரவ நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் தலையிட்டு கடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கென தனியான அலுவலகம் திறக்கப்பட்டு எமக்கான நீதி கிடைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY