எரிபொருள் வழங்க விசேட ஏற்பாடு வேண்டும்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் கடற்றொழில் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதைக் கவனத்தில் கொண்டு, இப்பகுதி கடற்றொழிலாளர்கள் இலகுவான முறையில் எரிபொருள்களை பெற்றுக்கொள்வதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாளிகைக்காடு கிழக்கு அமைப்பாளர் எம்.எச். நாஸர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைத்துள்ள அந்த வேண்டுகோளில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் கணிசமானளவு பங்களிப்பு செய்து வந்த மீன்பிடித்தொழில் கடந்த சில மாதங்களாக பாரிய வீழ்ச்சி கண்டிருக்கிறது. மீன்பிடித்தொழிலில் ஈடுபடுத்தப்படும் இயந்திரப் படகுகளுக்கு டீசல், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருள்கள் போதியளவு கிடைக்காமையினாலேயே இவ்வாறு கடல் வளப்பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

அதிலும் கடற்றொழிலுக்கு பிரசித்தி பெற்ற கிழக்கு மாகாணத்தின் கல்முனைப் பிராந்தியத்தில் இயந்திரப்படகுகள் மூலமான மீன்பிடித்தொழில் முற்றாக செயலிழந்து போகும் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கிறது. இதனால் கடற்றொழிலை ஜீவனோபாயமாகக் கொண்ட மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளதுடன் இப்பிரதேசங்களில் மீன்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக மீன்களின் விலைகள் பன்மடங்காக அதிகரித்திருக்கிறது. தற்காலத்தில் மீன் வாங்குவதென்பது முயற்கொம்பாக மாறியிருக்கிறது.

மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் மரக்கறி வகைகளின் விலைகளும் அதிகரித்திருக்கின்ற சூழ்நிலையில் மீன்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற தட்டுப்பாடு காரணமாக மக்கள் அன்றாட உணவுக்கு திண்டாடி வருகின்றனர். போதியளவு எரிபொருள் கிடைக்குமாயின் மீன்பிடித்தொழிலை சிறப்பாக முன்னெடுக்க முடியுமாக இருக்கும். ஆனால் எரிபொருள்களை பெற்றுக் கொள்வதில் கல்முனைப் பிராந்திய மீனவர்கள் மிகுந்த சிரமங்களையும் சவால்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

மக்களுடன் மக்களாக வரிசைகளில் நின்றே மீன்பிடித் தொழிலுக்கான எரிபொருள்களையும் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வழங்கப்படுகிறது. அதேவேளை, பல நாட்கள் வரிசைகளில் காத்து நின்றும் கூட எரிபொருள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலைமையும் ஏற்படுகிறது.

எனினும் தென்னிலங்கை மற்றும் யாழ் குடா நாட்டின் சில பகுதிகளிலும் கடற்றொழில் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகங்களின் ஏற்பாட்டில் மீன்பிடித்தொழிலுக்கென விசேட முன்னுரிமையளித்து எரிபொருள் வழங்கப்படுவதை ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைக்கிறது.

இவ்வாறு கல்முனைப் பிராந்தியத்திலும் மீன்பிடித் தொழிலுக்கென எரிபொருள்களை பெற்றுக் கொடுப்பதற்கு இலகுவான முறைமையொன்றை அமுல்படுத்த பிராந்திய கடற்றொழில் திணைக்கள காரியாலயம் அவசர நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இவ்விடயத்தில் பிரதேச செயலகங்களும் கூடிய கரிசனை செலுத்த வேண்டும்.

இவ்விடயத்தை பிரதமர், கடற்றொழில் அமைச்சர் மற்றும் எரிசக்தி அமைச்சர் போன்றோரின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கைகளை அவசரமாக முன்னெடுக்கச் செய்வதற்கு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரிதமாக செயற்பட முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

எரிபொருள் வழங்க விசேட ஏற்பாடு வேண்டும்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY