உணவு உற்பத்திக்கான போட்டி

மன்னாரில் உணவு உற்பத்தியை முன்னெடுப்பதற்கு திணைக்களங்களுக்கு இடையே பயிர் செய்கை போட்டியை முன்னெடுத்துள்ளோம். இதற்கான விதைகளும் ஆலோசனைகளும் உங்களுக்கு வழங்கப்படுமென என அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.

'பசுமையான நாடு ஆரோக்கியமான நாளை எனும்' தொனிப்பொருளில் மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்டத்தின் திணைக்களங்களின் உயர் அதிகாரிகளிடம் வீட்டுத் தோட்ட செய்கைக்கான விதைகள் வழங்கும் நிகழ்வு அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையில் .இடம்பெற்றது.

வியாழக்கிழமை (09.06.2022) நடைபெற்ற இந் நிகழ்வில் திட்டமிடல் பணிப்பாளர் விவசாய போதனாசிரியர் மற்றும் மன்னார் மாவட்டத்தின் திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது. அரசாங்க அதிபர் உரையாற்றுகையில்;

இன்றைய நாட்டின் பொருளாதார நிலையை கவனத்தில் எடுத்து இது தொடர்பான கலந்துரையாடலையும், விழிப்புணர்வையும் எமது செய்கை மூலம் மக்களுக்கு காண்பிக்கவும் இன்றையத் தினம் திணைக்கள தலைவர்கள் நாம் ஒன்றுகூடியுள்ளோம்.

இன்றைய சூழ்நிலையைப்பற்றி திணைக்கள தலைவர்களாகிய உங்களுக்கு நான் தெளிவுப்படுத்த வேண்டிய அவசியமில்லையென நினைக்கின்றேன்.

இன்று நாம் நாட்டின் நிலையை சாதாரண மனிதர்கள் தொடக்கம் எந்த துறை சார்ந்த உத்தியோகத்தர்களாக இருந்தாலும் நாம் யாவரும் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம்.

எதிர்வரும் காலங்களில் உணவு பற்றாக்குறை ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆகவே, மாவட்டத்திலே பணியாற்றுகின்ற ஒவ்வொருவருக்கும் நாமும் மக்களை இதிலிருந்து மீட்பு அடைவதற்கு எமக்கு பாரிய பொறுப்பு இருக்கின்றது.

ஆகவே, எமது மாவட்டத்தில் என்னென்ன வளம் இருக்கின்றது அவற்றைக் கொண்டு நாம் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்.

தற்பொழுது எமது மாவட்டத்தில் பயிர் செய்கை தொடர்பான ஒரு போட்டியை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளோம். இது மாவட்ட செயலக அலுவலர்களுக்கிடையே வீட்டுத்தோட்ட போட்டியாகும்.

இப் போட்டியில் சிறந்து விளங்குபவர்களுக்கு பரிசில்கள் வழங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்டத்திலுள்ள எல்லா திணைக்களங்களிலும் திணைக்கள ரீதியாக இவ்வாறான போட்டியை நடாத்தும் நோக்குடனே திணைக்கள அதிகாரிகளான உங்களையும் இன்று அழைத்துள்ளோம்.

இதனால் உணவு உற்பத்தியை பெருக்குவதுடன் எதிர்கால சந்ததினருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவதாக அமையும்.

இந் நிகழ்வில் உங்களுக்கு விதைகள் வழங்குவோம். நீங்கள் உங்கள் திணைக்களங்களில் கீழுள்ள அலுவலகங்களுக்கும் மற்றும் உங்களுக்கு சாத்தியமான இடங்களை தெரிவு செய்து உங்கள் திணைக்கள தோட்டங்களை அமைக்க வேண்டும்.

உங்கள் திணைக்களங்களுக்கும் இடையே ஒரு போட்டியாகவும் இது அமையும்.

பின் ஒரு குழு வந்து உங்கள் தோட்டங்களை பார்வையிட்டு அதற்கான பரிசில்களும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

உணவு உற்பத்திக்கான போட்டி

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)