
posted 26th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
வெள்ளிக்கிழமை (28) ஹர்த்தால்; பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (28) நடைபெறவுள்ள போராட்டத்துக்கும் வடக்கு, கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை (25) நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
இதில், கருத்து தெரிவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அழகராசா விஜயகுமார், வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் அழைப்பின் பேரில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தாலை மேற்கொள்வதுடன் அன்றையதினம் வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியொன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவை வழங்குகின்றது.
அதனுடன் அன்றைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலுக்கும் எமது ஆதரவை தெரிவிக்கின்றோம். கறுப்பு ஜுலை வாரத்தை அனுஷ்டித்து கொண்டிருக்கின்ற வேளையிலும் எங்களுடைய தமிழ் மக்களுக்கு பாரதூரமான பிரச்சினைகள் காணப்படுகின்றன.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியில்கூட பொலிஸார் மட்டுமே காணப்படுகின்றனர். சர்வதேச அமைப்புகள் ஒன்றுமே காணப்படவில்லை. இந்த அரசு எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மேலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
எங்களுடைய பிரச்சினையை வெளியுலகுக்கு தெரியப்படுத்தாது தங்களுக்குள்ளே மறைத்து கொண்டிருக்கின்றது. அந்த வகையிலே தமிழ் மக்களான எங்கள் பிரச்சினைகளுக்கு வெளிப்படையான தீர்வு தேவை.
சரணடைந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டும். அந்த வகையிலே அனைத்து மக்களும் கட்சி பேதமின்றி தமிழ் தேசிய பாதையில் பயணிக்கும் அனைத்து கட்சிகளும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)