
posted 23rd July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
யானைகள் பயன்படுத்த உரிய அனுமதி அவசியம்
யாழ். மாவட்டத்தில் ஆலய உற்சவங்கள் மற்றும் ஏனைய விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்த உரிய அனுமதிகள் அவசியம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஆ. சிவபாலசுந்தரன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்;
அண்மைக் காலமாக யாழ். மாவட்டத்தில் ஆலய உற்சவங்களின்போது வேறு மாவட்டங்களில் இருந்து யானைகள் வரவழைக்கப்பட்டு அவற்றை எந்த விதமான பாதுகாப்பு நடைமுறைகளும் இன்றி ஆலயச் சடங்குகளிலும் ஊர்வலங்களிலும் ஈடுபடுத்துகின்றனர்.
இதன்போது உரிய பாதுகாப்பு நடைமுறைகள் ஏதும் பின்பற்றப்படாமல் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் இவ்வாறு யானைகளைப் பயன்படுத்தவது சட்டவிரோதமானதும் பொதுமக்களுக்கு எதிர்பாராதவிதமான ஆபத்துகளை விளைவிக்கக்கூடியதாகும்.
வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களப் பணிப்பாளரின் அறிவுறுத்தலின்படி இவ்வாறு யானைகளை பயன்படுத்தவதற்கான அனுமதி வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்திடம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் யானைகளை கையாள்வதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அதற்கான ஆளணி ஆகியவை பேராதனை கால்நடை வைத்திய பீடத்தில் மட்டுமே உள்ளதுடன் மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் தொழில் பரப்பினுள் அவற்றுக்கான ஏற்பாடுகள் ஏதும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே இவ்வாறு உரிய அனுமதி பெறப்படாமலும், உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாது யானைகளை உற்சவங்களில் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஆலய நிர்வாகத்தினர் மற்றும் உற்சவங்களை நடத்துவோரை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)