
posted 17th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
முஸ்லிம் மாணவிகளை தாதியர் பயிற்சிக்குள்வாங்க ஜனாதிபதிக்குக் கடிதம்
கலைப்பிரிவில் படித்தவர்களையும் தாதியர் பயிற்சிக்கு சேர்த்துக்கொள்ளும் வகையில் விதிமுறைகள் திருத்தப்படவேண்டும் என்ற ஜனாதிபதி திரு. ரணில் விக்கிரமசிங்க பணிப்புரையை ஐக்கிய காங்கிரஸ் கட்சி வரவேற்பதுடன் தாதியர் பயிற்சிக்கல்லூரி முஸ்லிம் மாணவிகள் நீளக்காட்சட்டை அணிய முடியாது என்ற சட்டத்தை நீக்க ஜனாதிபதி முயற்சி எடுக்க வேண்டும் எனவும் வேண்டிக்கொண்டுள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவியால் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதிய கடிதத்திலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதில் அவர் தெரிவித்ததாவது,
திரு. ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்றது முதல் பாரிய பல நல்ல வேலைத்திட்டங்களை ஏற்படுத்தி வருவதை காண்கிறோம். ஜனாதிபதியின் கருத்துக்கள் சராசரி அரசியலுக்கப்பால் துணிச்சலானவை.
அப்படியான ஒரு கருத்தே தாதியர்களாக கலைப்பிரிவில் கற்றவர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதாகும்.
பொதுவாக விஞ்ஞான பிரிவில் கல்வி கற்றவர்களே தாதியர் பயிற்சிக் கல்லூரிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். கலைப்பிரிவில் கற்ற பல மாணவிகள் முறையான தொழில் இன்றித் தவிக்கின்றனர். இவர்களையும் உள்வாங்கி பயிற்சி அளித்தால் அவர்களாலும் தாதியற்கல்வியை கற்று தம் பணியை நாட்டுக்கு செய்ய முடியும் என நம்பலாம்.
அதேவேளை தாதியற்பயிற்சி கல்லூரியில் கல்வி கற்கும் மாணவிகள் குட்டை கவுன் மட்டுமே அணிய வேண்டும் என்ற நிபந்தனை இருப்பதாக எமது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பல முஸ்லிம் மாணவிகள் தாதியற்பயிற்சிக்கல்லூரிக்கு விண்ணப்பிப்பதை தவிர்த்து வருகின்றனர்.
இது பற்றி ஜனாதிபதி அவர்கள் ஆராய்ந்து முஸ்லிம் மாணவிகள் வெள்ளை நிற நீள் காற்சட்டை அணிவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)