
posted 25th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
மாற்றம் தேவைப்படாத மாகாண சபை தேர்தல்
ஜனாதிபதி ரணில், இந்திய பிரதமர் மோடி சந்திப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக வடக்கும் கிழக்கும் பிரிந்துள்ள மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்றே வலியுறுத்தப்பட்டுள்ளதால் இந்த யதார்த்ததை தமிழ் கட்சிகள் உணர்ந்து வடக்கு கிழக்கில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முன்வரவேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி இந்தியப்பிரதமர் அதிகம் அழுத்தம் கொடுப்பார் என்றே பலரும் எதிர் பார்த்தனர். ஆனால், ஜனாதிபதி ரணிலின் சரியான அணுகுமுறை மூலம் நாடு தற்சமயம் எதிர் நோக்கும் பொருளாதார பிரச்சினை பற்றி மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை இந்தியா சொல்லியுள்ளதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வாக இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாகாண சபை முறையையே இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது என்பதைப் புரியலாம். அத்துடன் பொலிஸ் அதிகாரம் வழங்குவது பற்றி பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் ஒருமித்த கருத்தை ஏற்றே முடிவெடுக்க முடியும் என ஜனாதிபதி ரணில் சொல்லியுள்ளமை மிகவும் துணிச்சலான வரவேற்புக்குரிய கருத்தாகும்.
இந்த யதார்த்தத்தை தமிழ், முஸ்லிம் கட்சிகள் புரிந்து வடக்கு கிழக்கு இணைப்பு, பொலிஸ் அதிகாரம் என்பவற்றை கேட்டு மேலும் சிக்கலை ஏற்படுத்தாமல் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு வழியமைக்க வேண்டும்.
மாகாண சபைத்தேர்தலை பல வருடமாக நடத்த முடியாதபடி நல்லாட்சியில் தமிழ் கூட்டமைப்பும் பாராளுமன்றில் உள்ள மற்ற முஸ்லிம் கட்சிகளும் சேர்ந்து பணத்துக்காக தேர்தல் திருத்தத்தை நிறைவேற்றி அதனை இல்லாதொழித்து விட்டனர்.
மீண்டும் மாகாண சபை தேர்தல் நடத்த வேண்டுமானால் இந்த தமிழ், முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்தினதும் மொட்டு கட்சியினதும் காலில் விழுந்து கெஞ்ச வேண்டி வரும்.
எது எப்படியிருப்பினும் மாகாண சபைத்தேர்தல் தற்போதுள்ள திருத்த சட்டப்படி நடத்தப்பட வேண்டும் என்பதே ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் எதிர்பார்ப்பாகும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)