
posted 17th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கடலரிப்பினால் காவு கொள்ளப்படும் பீச் பார்க்
சாய்ந்தமருது பிரதேசத்தில் மீண்டும் உக்கிரமடைந்துள்ள கடலரிப்பினால் பீச் பார்க் (கடற்கரைப் பூங்கா) கிழக்குப் பகுதி சுற்றுமதில் வீழ்த்தப்பட்டிருப்பதுடன் மீனவர் நூலக கட்டிடமும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறது.
கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ள கடலரிப்பு காரணமாக சனிக்கிழமையன்று (15) இச்சுவர் வீழ்த்திருப்பதுடன் பீச் பார்க்கின் பெரும்பகுதி கடலுக்கு இரையாகக் கூடிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
இந்த பீச் பார்க்கிற்கு கிழக்குப் புறமாக இருந்த கடற்கரை நிலப்பகுதி கடலால் முற்றாக காவு கொள்ளப்பட்டிருக்கிறது. மக்கள் ஓய்வு, பொழுது போக்கிற்காக கூடுகின்ற இக்கடற்கரைப் பகுதியின் இழப்பு ஈடுசெய்ய முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இக்கடலரிப்பினால் சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் இயற்கை மற்றும் கடற்றொழில் வளங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. மீன்பிடித் தொழிலாளர்களின் வாடிகள் கடல் அலைகளினால் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. மீனவர் சமூக பல்தேவைக் கட்டிடங்கள் சிலவும் சேதமடைந்துள்ளன.
இதனால் வலைகள் மற்றும் மீன்படி உபகரணங்களைப் பாதுப்பாக வைத்துக் கொள்வதற்கும், மீனவர்கள் ஓய்வெடுப்பதற்கும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
படகுகள், தோணிகள் தரித்து வைக்கப்படுகின்ற கரையோரப் பரப்புகள் கூட கடல் அலைகளினால் காவு கொள்ளப்பட்டிருப்பதால் அவற்றை நிறுத்தி வைப்பதில் பாரிய சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றன. இந்த நிலைமையினால் இப்பகுதியில் கடற்றொழில் பாதிக்கப்பட்டிருப்பதாக மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட கடலரிப்பினால் சாய்ந்தமருது பெளசி விளையாட்டு மைதானத்தின் கிழக்குப் பகுதி சுற்றுமதில் வீழ்த்தப்பட்டதுடன் மைதானம் பெரும்பாதிப்புக்கு இலக்காகியிருந்தது. எனினும் அது இன்னும் புணரமைப்பு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)