
posted 5th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு - ஆன்மாக்களின் மனநிறைவு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
அதிரடி நடவடிக்கை
காரைதீவு பிரதேசத்திற்குட்பட்ட மாளிகைக்காடு கிராமத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடலரிப்பை தடுக்க அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீமினால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாளிகைக்காட்டில் ஏற்பட்ட கடலரிப்பின் காரணமாக கடற்கரை மிக வேகமாக பாதிக்கப்பட்டு அண்மித்த கட்டடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுவிடயமாக மீனவர் அமைப்புக்கள் மற்றும் மாளிகைக்காடு கிழக்கு வட்டார முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் எம்.எச் நாஸர் ஆகியோர் அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீமின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் குறித்த இடத்துக்கு விஜயம் செய்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீமுடன் அம்பாறை மாவட்ட கரையோரப் பாதுகாப்புத் திணைக்களப் பொறியியலாளர் எம். துளசிதாஸன், காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன், கல்முனை மாவட்ட கடற்றொழில் உதவி ஆணையாளர் எஸ். ஸ்ரீரஞ்சன் மற்றும் கரையோரப் பாதுகாப்பு வெளிக் கள உத்தியோகத்தர் காரைதீவு பிரதேசத்திற்குப் பொறுப்பான தஸ்தகீர், சாய்ந்தமருது பிரதேசத்திற்குப் பொறுப்பான நுஸ்றத் அலி ஆகியோரும் வருகை தந்தனர்.
உயர்மட்டக் குழுவினர் சேதமடைந்த இடங்களைப் பார்வையிட்டதும், மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகம், ஜனாஸா நலன்புரி அமைப்பு, மொத்த மீன் வியாபார வர்த்தக சங்கம், ஆழ்கடல் மீன்பிடிச் சங்கம், சிறு படகு உரிமையாளர் சங்கம், ஆகியவற்றின் பிரதிநிகள் மற்றும் பொது மக்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் பைசல் காசீமின் வேண்டுதலுக்கிணங்க முதற்கட்ட தற்காலிக ஏற்பாடாக லியோ பேக்கில் மண் நிரப்பி கரையோரத்தை அரிப்பிலிருந்து பாதுகாப்பதற்கும் பின்னர் நிரந்தத் தீர்வொன்றை துரித கதியில் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த வேலை நாளை (06) வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படும் எனவும் கரையோரப் பாதுகாப்பு திணைக்களப் பொறியியலாளர் எம். துளசிதாஸன் இங்கு குறிப்பிட்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)