
posted 7th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு - ஆன்மாக்களின் மனநிறைவு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஹக்கீம் ஆதரவளிக்க வேண்டும்
இஸ்லாம் அனுமதிக்காத பெண் காதி விடயத்தில் ரவூப் ஹக்கீம் தனது பிடிவாதத்தை மாற்றி ஏனைய முஸ்லிம் எம்பிமாருடன் இணைந்து அமைச்சர் ராஜபகச முன் வைத்த திருத்தத்துக்கு மாற்றமான திருத்தத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி (உலமா கட்சி) தெரிவித்துள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சி த்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்ததாவது,
முஸ்லிம் திருமண சட்டத்தில் எத்தகைய திருத்தமும் கூடாது என்பதே எமது கட்சியின் முடிவாகும். ஆனாலும் அண்மையில் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களால் முஸ்லிம் திருமண சட்டத்தில் உள்ள, நிகாஹ் என்ற வசனம், முஸ்லிம் என்ற சொற்பதம் போன்றவற்றை நீக்கி, பெண் காதி, பெண் பதிவாளர் போன்ற பல தான்தோன்றித்தனமான திருத்தங்களை முன் வைத்து இதற்கு பாராளுமன்ற முஸ்லிம் எம்பீக்களின் ஒப்பத்துக்காக முன் வைத்திருந்தார்.
இதனை ஏற்காத முஸ்லிம் எம்பீக்கள் ஜம்மிய்யத்துல் உலமாவுடன் இணைந்து வேறு திருத்தங்கள் கொண்ட புதிய திருத்த பொதியை முன் வைத்துள்ளதாகவும் அதை பதினேழு எம்பீக்கள் ஏற்றுக்கொண்டதாகவும் அதில் பெண் காதி நீக்கப்பட்டிருப்பதால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சித்தலைவர் ரவூப் ஹக்கீம் மட்டும் அதை ஏற்காது பெண் காதி வேண்டும் என அடம்பிடிப்பதாகவும் தகவல்கள் சொல்கின்றன. இந்தப்பொதியின் முழு அம்சமும் எமது கட்சிக்கு இன்னமும் கிடைக்கவில்லையாயினும் இது பற்றிய ஊர்ஜிதமான தகவல்கள் கிடைத்துள்ளன.
பெண் காதிக்கு இஸ்லாத்தில் இடமில்லை என்பது இஸ்லாத்தின் ஆரம்ப கால உலமாக்கள் ஏகோபித்த முடிவாகும்.
முஸ்லிம் என்ற பெயர் கொண்ட கட்சித்தலைவரான ரவூப் ஹக்கீம் அவர்கள் முஸ்லிம் திருமண சட்டத்தில் எந்த திருத்தமும் வேண்டாம் என கூறியிருந்தால் அவரை நாம் மிகவும் வரவேற்றிருப்போம். மாறாக இஸ்லாம் ஏற்காத பெண் காதி விடயத்தில் முஸ்லிம்களின் அதிக வாக்குகளைக்கொண்ட ரவூப் ஹக்கீம் அடம் பிடிப்பது இஸ்லாத்துக்கும் அவரது கட்சிக்கு வாக்களித்த இலங்கை முஸ்லிம்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்துவதாகும்.
ஆகவே ரவூப் ஹக்கீம் அவர்கள் பெண்காதி விடயத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை நயமாக கேட்டுக்கொள்கிறோம்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)