
posted 8th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்புத் தேவை
மனிதப் புதைகுழிகள் தோண்டப்படும் போது வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயிலிருந்து பல மனித எச்சங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ள நிலையில் அதில் தமது உறவுகளும் இருக்கலாமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சர்வதேச விதிமுறைகளை கடைப்பிடித்து வெளிநாட்டு நிபுணர்கள், தடயவியலாளர்கள் ஆகியோரின் உதவிகளையும் புதைகுழிகள் தோண்டும்போது பெறவேண்டும்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விடயத்தில் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த பொலிஸார் தயக்கம் காட்டியுள்ளனர். இதேநேரம் மனிதப் புதைகுழி தொடர்பில் விடுதலை புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால், அதற்காக கருணா அம்மன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)