
posted 13th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
முக்கிய தீர்மானங்கள்

- இராணுவ முகாம் இடமாற்றல்,
- தோணா சுத்திகரிப்பு,
- பொலிவேரியனுக்கு மையவாடி,
- படகு, தோணிகளுக்கு விசேட தளம்
- பீச் பார்க் பாதுகாப்புக்கு விசேட பொறிமுறை
முதலான முக்கிய தீர்மானங்கள் சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது
சாய்ந்தமருது பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் புதன்கிழமை (12) பிற்பகல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையில் பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் சாய்ந்தமருது பிரதேசத்தின் முக்கிய பல விவகாரங்கள் குறித்து ஆராயப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் பிரதேச செயலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன. இதன்போது சாய்ந்தமருது தோனா ஆற்றை சுத்தப்படுத்தும் வேலைத் திட்டத்தை அவசரமாக முன்னெடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு நிதி அனுசரணை வழங்குவதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தயாராக இருப்பதாக அதன் அம்பாறை மாவட்டப் உதவிப் பணிப்பாளர் முஹம்மட் றியாஸ் அறிவித்தார்.
அத்துடன் சாய்ந்தமருதில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள பொலிவேரியன் கிராமத்தின் நீண்ட காலத் தேவையாக இருக்கின்ற மையவாடி ஒன்றை அமைப்பதற்குப் பொருத்தமான இடம் அடையாளப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
சாய்ந்தமருது கடற்கரை வீதியில் பொதுத் தேவைகள், ஒன்றுகூடல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த இடத்தில் இயங்கி வருகின்ற இராணுவ முகாமை இங்கிருந்து அகற்றி வேறு இடத்தில் அமைக்குமாறு கோருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கடல் கொந்தளிப்பு மற்றும் கடலரிப்பு என்பவற்றைக் கருத்தில் கொண்டு, படகுகள், தோணிகளை தரிக்கச் செய்வதற்குரிய தளமாக கூபா பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள இடத்தை விசேடமாக ஒழுங்கு செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
சாய்ந்தமருது பீச் பார்க் (கடற்கரைப் பூங்கா) சேதப்படுத்தப்படுவதைக் கருத்தில் கொண்டு அதன் பாதுகாப்பு, புனரமைப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டு மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட வேண்டிய விசேட பொறிமுறைகள் குறித்தும் இதன்போது தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இக்கூட்டத்தில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, சாய்ந்தமருது உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ. முவஃபிகா, பிரதேச செயலக திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் கே.எல்.ஏ. ஹமீட், கணக்காளர் நுஸ்ரத் பானு, சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன், மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள், திணைக்களங்கள், பள்ளிவாசல் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)