
posted 26th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
மீண்டும் பணிப்பாளராக நவநீதன்
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக சரவண முத்து நவநீதன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மேற்படி பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக சரவண முத்து நவநீதனை மீண்டும் நியமனம் செய்துள்ளமையை அடுத்து, அவர் கடந்த திங்கட் கிழமை (24) திருகோணமலையிலுள்ள தமது திணைக்கள அலுவலகத்தில் மீண்டும் பணிப்பாளர் கடமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
ஏற்கனவே கிழக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக அரும்பெரும் சேவையாற்றிவந்த சரவண முத்து நவநீதன் சிறிது காலம் கிழக்கு மாகாண சபையின் மற்றொரு திணைக்களத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
முன்னைய ஆளுநரின் காலத்தில் இடம்பெற்ற இவரது இடமாற்றம் தொடர்பில் கிழக்கிலுள்ள கலை, இலக்கியவாதிகள், கலை, இலக்கிய மன்றங்கள், இலக்கிய ஆர்வலர்கள் பெரும் அதிருப்தி தெரிவித்து வந்ததுடன், கிழக்கின் கலை இலக்கிய, பண்பாட்டு வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பல்வேறு காத்திரமான செயற்திட்டங்களை முன்னெடுத்து வந்த பணிப்பாளர் நவநீதனை மீண்டும் நியமிக்க வேண்டுமெனவும் தொடர்ச்சியமான கோரிக்கைகளையும் விடுத்து வந்தனர்.
இதன் பயனாக கிழக்கின் புதிய ஆளுநர் செந்தில் தொண்டமான் கிழக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக மீண்டும் சரவணமுத்து நவநீதனை நியமித்துள்ளமை பெரும் வரவேற்பைப் பெறற்றுள்ளதுடன், பல்வேறு கலை இலக்கிய அமைப்புகளும், கலை இலக்கியவாதிகளும் ஆளுநரின் இந்த நடவடிக்கைக்ககுப் பாராட்டுதல்களையும், நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
பணிப்பாளர் நவநீதன் ஏற்கனவே, பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளராக விருந்த பணிக்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் கலாச்சார பண்பாட்டியல்சார் விடயங்களை அடையாளப்படுத்துதல், பேணுதல், ஆவணப்படுத்துதல் போன்ற காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இவரது காலத்தில் வெளியிட்ட “கிழக்கின் 100 சிறு கதைகள்” எனும் பெருந்தொகுப்பு நூல் பணிப்பாளர் நவநீதனின் அளப்பரிய சேவைக்கு எடுத்துக்காட்டாகும்.
இதே போன்று கிழக்கு மாகாணத்தவர்களின் படைப்புக்களையும், படைப்பாளிகளையும் கொண்ட மற்றொரு தொகுப்பையும் வெளியிடும் இலக்கில் முனைப்பு காட்டிய வேளையில் தான் மற்றொரு திணைக்களத்திற்கு இடமாற்றப்பட்டார்.
எனினும் மீண்டும் சந்தரப்பம் கிடைத்திருக்கிறது. அவரது பணிகள் தொடர வேண்டுமென வாழ்த்துக்களும் கலை, இலக்கியவாதிகளிடமிருந்து தெரிவிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)