
posted 13th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பெரும்பாக உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் கமநல சேவைகள் பெரும்பாக உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் உரிய வேளைக்கு தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருவதாகக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பற்றாக்குறை காரணமாக கடமையிலுள்ள பெரும்பாக உத்தியோகத்தர்கள், மேலதிகமாக இரண்டு அல்லது மூன்று நிலையங்களைப் பொறுப்பேற்று கடமை செய்ய வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்கள் நேரத்தை வரையறை செய்து கடமை செய்ய வேண்டிய நிலைக்குள்ளாவதால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருவதாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் (ஈ.பி.ஆர்.எல்.எப்) இரா துரைரெத்தினம் கவலை தெரிவித்துள்ளார்.
துரைரெத்தினம் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் மேலும் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாக உத்தியோகத்தர்களுக்கு வேலைப்பழு காரணமாக இரவு பகலாக தன்னலம் பாராது சேவை அடிப்படையில் கூட கடமைகள் செய்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
பல வருடகாலமாக பெரும்பாக உத்தியோகத்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகுவது ஆரோக்கியமானதாக இருக்க முடியாது. இதனால் விவசாயிகள் உரிய நேரத்திற்கு தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பல சிரமங்களுக்கு உள்ளாக்கப்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. பெரும்பாக உத்தியோகத்தர்கள் தங்களது நேரத்திற்கு ஏற்றவாறு இரண்டு மூன்று நிலையங்களை கையாழுவது சேவையாக இருந்தாலும் இந்த சேவைச்சுமை பல விவசாயிகளை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.
விவசாயிகளைப் பொறுத்தவரையில் கடந்த காலத்தைப் போல் அல்லாது முழுமூச்சாக நின்று தங்களது வேலைகளை ஒருநாள் செலவழித்து காலையில் வந்து மாலையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தங்களது வேலைப்பழு காரணமாக இவர்கள் இரண்டு, மூன்று நிலையங்களை பொறுப்பெடுத்து கடமை செய்வதால் இவர்கள் தங்களது நேரத்தை வரையறை செய்யும் போது விவசாயிகள் நேரடியாக பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இதேவேளை, விவசாயிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அரைகுறையில் தங்களது வீடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதோடு, சில வேலைகளை முடிப்பதற்கும் காலதாமதம் ஏற்படுகின்றது. இது புதிய யுகத்தில் பொருத்தப்பாடாக இருந்துவிட முடியாது.
வருடங்களாக பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்ற, தாமதமாகின்ற வேலைகளை விரைவாக விவசாயிகளுக்கு செய்து கொடுப்பதற்கு மாவட்டத்திற்கு தேவையான பெரும்பாக உத்தியோகத்தர்களின் நியமனங்களை வழங்குவதற்கோ அல்லது அவர்களின் கடமைகளை செய்வதற்கோ உத்தியோகத்தர்களை நியமிக்க ஆவன செய்ய வேண்டும்.
பல வருடங்களாக இப் பதவிகளுக்கு உத்தியோகத்தர்களை நியமிக்க தாமதம் அடைவதால் இவ்வேலைகளைச் செய்வதற்கு ஏதோ ஒருவகையில் பொறுப்புக்களை வழங்க ஆவன செய்ய வேண்டும். இதற்குரிய பொறுப்புக் கூறலை உதவி ஆணையாளர், அரசாங்க அதிபர், அபிவிருத்திக்குழுத் தலைவர், அமைச்சர், விவசாய அமைச்சின் செயலாளர் பொறுப்புக் கூற வேண்டும். கடமைகளைச் செய்வதற்கு தொழில்நுட்ப ரீதியான செயற்பாடுகள் பலமடைந்த நிலையில் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் நியமனங்களைப் பெற்று அலுவலகங்களில் வேலை இல்லாமல் உள்ள நிலையில் இக் கடமைகளைச் செய்வதற்கு ஏன் இதுவரை நியமனங்கள் தற்காலிகமாகவேனும் வழங்கப்பட வில்லை.
மாவட்ட விவசாய அமைப்புக்கள், சம்மேளனங்கள், விவசாயிகள் ஏன் மௌனமாக இருக்க வேண்டும். புதிய தொழில் நுட்பங்கள் வளர்ச்சி அடைந்த நிலையில் ஒரு விவசாயி ஒரு அலுவலகம் வந்து வேலைகள் முடியாமல் திரும்பிச் செல்வதென்பது எந்தளவிற்கு நியாயமானதாக இருக்கும்.
பல வருடங்களாக சேவை செய்து வருகின்ற பெரும்பாக உத்தியோகத்தர்களின் வேலைப்பழுக்களைக் குறைக்கவும், விவசாயிகளின் வேலைகளை துரிதப்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)