
posted 12th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
நிந்தவூரில் ஆளுநருக்குப் பெருவரவேற்பு
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நிந்தவூருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தந்த போது பெரு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ், பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் உலக வங்கியின் நிதி உதவியுடன் எல்.டி.எஸ்.பி. நிகழ்ச்சித்திட்டத்தினூடாக 9.46 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நிந்தவூர் பிரதேச சபையின் முன்பள்ளிப் பாடசாலைக் கட்டிட மேல்தளத்தை இந்த விஜயத்தின்போது ஆளுநர் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
இந்த விழாவிற்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் வருகை தந்த போது நிந்தவூர் பிரதேச சபைச் செயலாளர் திருமதி. ரி. பரமேஸ்வரன் தலைமையில், சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொது மக்களெனத் திரண்டு பெருவரவேற்பளித்தனர்.
விசேடமாக நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் மற்றும் முன்னாள் உறுப்பினர்களும் இணைந்து ஆளுநரை வரவேற்றனர். விழா நடைபெற்ற பாலர் பாடசாலைக் கட்டிட நுழைவாயிலில் வைத்து சபைச் செயலாளர் திருமதி பரமேஸ்வரன், முன்னாள் தவிசாளர் அஸ்ரப் தாஹிர் ஆகியோர் மலர் மாலைகள் அணிவித்து ஆளுநரை வரவேற்றதுடன்,
ஆரத்தி எடுக்கப்பட்டும் வரவேற்கப்பட்டார். இதேவேளை இந்த திறப்பு விழா நிகழ்வில் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு பென்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், குறித்த செயற்பாட்டுக்கு மூல காரணமாக அமைந்த முன்னாள் தவிசாளர் அஸ்ரப் தாஹிரும் கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் செந்தில் தொண்டமான், கிடைக்கப்பெற்ற நிதியை பயனற்ற வேலைத் திட்டங்களுக்குப் பயன்படுத்தாது எதிர்கால கல்வி முன்னேற்றம் தொடர்பிலான சிறந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்த சபையின் முன்னாள் தவிசாளர் மற்றும் முன்னாள் சபை உறுப்பினர்களையும் வெகுவாகப் பாராட்டினார்.
விழாவில் பல உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (11) நிந்தவூருக்கான இந்த விஜயம் உட்பட அம்பாறை மாவட்டத்தில் வேறு சில பொது நிகழ்வுகளிலும் ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)