
posted 27th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
இரண்டாவது பட்டமளிப்பு விழா
சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் மெளலவி எஸ்.எச். ஆதம்பாவா மதனி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டை சேர்ந்த கொடைவள்ளல் ஐயூப் அஸ்ஸர் ஊனி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் மற்றும் சில அரேபிய பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.
இவர்கள் பொல்லடி, கஸீதா, பைத் உள்ளிட்ட முஸ்லிம் கலாசார பாரம்பரியங்களுடன் கல்லூரி நிர்வாகத்தினரால் வரவேற்கப்பட்டனர்.
காத்தான்குடி ஜாமியா சித்தீக்கியா அரபுக் கல்லூரி முதல்வர் அஷ்ஷெய்க் எம்.ஐ. அப்துல் கபூர் மதனி அவர்கள் பட்டமளிப்பு பிரசங்கத்தை நிகழ்த்தினார்.
இதன்போது 31 மாணவிகள், மெளலவியா பட்டத்தை பெற்றுக் கொண்டனர். இவர்கள், அதிதிகளினால் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
அத்துடன் இக்கல்லூரியில் இருந்து பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கல்விக் கல்லூரி என்பவற்றுக்கு அனுமதி பெற்று, உயர் கல்வி கற்கும் 19 மாணவிகள், விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், கல்லூரி மட்ட பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட மாணவிகள் பலர், பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இதன்போது சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.
நிகழ்வின் பிரதம அதிதி ஐயூப் அஸ்ஸர் ஊனி மற்றும் அரேபிய பிரமுகர்கள், கல்லூரி அதிபர் மற்றும் நிர்வாகத்தினரால் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
மெளலவியா பட்டம், விருது மற்றும் பரிசுகள் பெற்ற மாணவிகள் உட்பட இக்கல்லூரியில் கல்வி கற்கும் மாணவிகள் அனைவருக்கும் அவர் நிதி அன்பளிப்பு வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் உட்பட அரச அதிகாரிகள், கல்வியியலாளர்கள், உலமாக்கள், பாடசாலைகளின் அதிபர்கள், பள்ளிவாசல்களின் தலைவர்கள், நிறுவனங்களின் பிரதிநிதிகள், தைபா அரபுக் கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் பங்கேற்றிருந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)