வாக்குறிதிக்கமைய எரிபொருட்கள் வழங்கப்படாதால் சேவை தவிர்த்துத் தடங்கல் போராட்டம்

எரிபொருள் அமைச்சரின் வாக்குறிதிக்கமைய மன்னார் இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பேருந்து போக்குவரத்து சங்கத்துக்கு வழங்கப்படும் எரிபொருள் வழங்காமையால் செவ்வாய்க்கிழமை (05.07.2022) மன்னார் தனியார் பேருந்து சபை தங்கள் சேவையை இடைநிறுத்தியதுடன், இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளையும் சேவையில் ஈடுபடாத தன்மையில் வீதியை மறித்து தங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று காலை தொடக்கம் மேற்கொண்டிருந்தனர்.

இந்தத் திடீர் போராட்டத்தை தொடர்ந்து, தூரத்து பயணிகளும், உள்ளூர் பயணிகளும் தங்கள் பிரயாணங்களை மேற்கொள்ள முடியாத நிலையில் பெரும் அசெளரியங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.

இதைத் தொடர்ந்து மன்னார் அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இது தொடர்பான விஷேட கலந்துரையாடல் இன்று காலை இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் தனியார் பேரூந்து சங்க நிர்வாகிகள், இலங்கை போக்குவரத்து மன்னார் சாலை நிறைவேற்று அதிகாரி, மன்னார் மேலதிக அரசாங்க அதிபர், மன்னார் பிரதேச செயலாளர், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி அரச நிலைப்பாட்டிற்கு அமைய மன்னார் இலங்கை போக்குவரத்து சபை சாலைக்கு வரும் டீசலில் 6600 லீற்றர் வரும் பட்சத்தில் 2500 லீற்றர் டீசலும், 13,200 லீற்றர் வரும் பட்சத்தில் 5000 லீற்றர் டீசலும் மன்னார் தனியார் பேரூந்து சங்கத்துக்கு வழங்குவது என ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் நடைபெற்ற போராட்டம் சுமூக நிலைக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து போக்குவரத்து தடைகள் நீக்கப்பட்டு காலை 11 மணி முதல் மன்னாரில் இரு தரப்பினரினதும் போக்குவரத்து சேவைகள் நடைபெற ஆரம்பித்தன.

காலையில் அலுவலகங்களுக்கும் மற்றும் உள்ளுர் வெளியூர் செல்ல வேண்டியவர்கள் காலை தொடக்கம் போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கும் வரை பஸ் நிலையங்களில் நீண்ட நேரங்களாக காவல் நின்றதும் குறிப்பிடத்தக்கது.

வாக்குறிதிக்கமைய எரிபொருட்கள் வழங்கப்படாதால் சேவை தவிர்த்துத் தடங்கல் போராட்டம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)