வங்குரோத்து நிலைமைக்கு வந்துள்ளவரை ஜனாதிபதிக் கதிரையில் அமரவைக்கலாமா? - ரவூப் ஹக்கீம்

(ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

இலங்கையின் சூடுபிடித்துள்ள சமகால அரசியல் நிலைமை குறித்து கனடாவிலிருந்து ஒளிபரப்பாகும் தமிழ்வன் / வணக்கம் ஊடகங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், கடந்த 14 ஆம் திகதி வழங்கிய சிறப்புப் பேட்டி.
பேட்டி கண்டவர்: ஊடகவியலாளர் எஸ். தனராஜ்.

கேள்வி: இலங்கையில் அரசியல் மாற்றம் நடந்து கொண்டிருக்கின்றது. கட்சித் தலைவர்கள் கூட்டங்களில் உங்களைக் காண்கின்றோம். இப்போதைய நிலைமை பற்றிச் சுருக்கமாக விளக்க முடியுமா?

பதில்: நாட்டில் ஏற்பட்டிருக்கும் புரட்சிகரமான அரசியல் மாற்றங்களுக்கான அடிப்படைக் காரணம், மக்களின் உணர்வுகளைச் சரிவர புரிந்து கொள்ள முடியாமல், ஆட்சியாளர்கள் தன்னிச்சையாக, மிகவும் மோசமாக அவர்களின் சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்னிறுத்தி, நாட்டின் எதிர்கால சுபீட்சம் சம்பந்தமாக என்னதான் அவர்கள் அவர்களின் விஞ்ஞாபனத்தில் சொல்லி இருந்தாலும், தத்தமது குடும்பங்களை வளர்த்துக் கொள்வதற்காக குறிப்பாக ஒரு குடும்ப ஆட்சி என்ற போர்வையில் கொண்டு வந்த மிக மோசமான நடைமுறை‌களை மக்கள் வெறுத்தொதுக்கியிருக்கின்றார்கள். ஊழல் விவகாரங்கள் என்பனவும் மிக மோசமாக மக்களை இந்த பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளன. அவை குறித்த சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பலவிதமான உணர்வுகளோடும் ஒட்டுமொத்த சிவில் சமூகமும் வீதியில் இறங்கிப் போராடுகின்ற ஒரு நிலைமை உருவாகிய இந்த பிராந்தியத்திலேயே இவ்வாறானதோர் மக்கள் எழுச்சி என்னைப் பொறுத்த மட்டில் இந்தியாவில் அனா அஸாரே ஆரம்பித்த ஓர் இயக்கம் எப்படி வளர்ச்சியடைந்து முன்னேறி வந்ததோ, அதேபோல வித்தியாசமாக, அதைவிடவும் ஒரு படி மேலே போய் ஆட்சியில் இருப்பவர்களை பலவந்தமாக வீட்டுக்கு அனுப்புகின்ற ஒரு பாரிய சா‌தனையாக மாறியிருக்கிறது.

கேள்வி: மார்ச் மாதம் 31ம் திகதியிலிருந்து, ஜூலை மாதம் 9ஆம் திகதி வரையில் மக்கள் போராட்டம் நீங்கள் குறிப்பிட்டது போல மிக வித்தியாசமானதாக இருந்தது. இன்று ஜூலை மாதம் 14 ஆம் திகதி ஜூலை 20ம் திகதி ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட இருக்கின்றார். இவ்வாறானதோர் சூழ்நிலையில், நாட்டின் அரசியலில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது? இப்போதைய அரசியல் நிலைப்பாடுகள் எவை? அடுத்த ஜனாதிபதி எவ்வாறு தெரிவு செய்யப்பட போகின்றார்? நீங்கள் ஒரு சட்டத்தரணியாக இருப்பதால் வெளியில் உள்ளவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

பதில்: தப்பிப்பிழைத்து, நாட்டைவிட்டுத் தப்பியோடி இருக்கின்ற ஒரு ஜனாதிபதி, தன்னுடைய ராஜிநாமாவைக் கொடுக்காமல் தனக்கு புகலிடம் தருவதற்கு ஒரு நாடும் தயார் இல்லை என்ற நிலையில் தத்தளித்துக் கொண்டு இருக்கின்ற ஒரு சூழலில் ராஜிநாமாவை கொடுக்காமல் இருப்பதற்கு பலவிதமான காரணங்கள் சொல்லப்படலாம். அதில் அடிப்படைக் காரணம் என்னவென்றால், ஒரு நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில் அவருக்கு இருக்கின்ற ஒரு சிறப்புரிமையின்படி எதேர்ச்சையாக எங்கும் அவரைக் கைது செய்ய முடியாது. அதாவது, யாரும் அவரை எந்த குற்றத்துக்கும் வெளிநாட்டு பயணங்களில் இருக்கின்றபோது கைது செய்ய முடியாது என்ற ஒரு நிலவரம் இருக்கின்றது. அது ஜெனீவா நடைமுறைகளில் இருக்கின்ற ஓர் ஏற்பாடாகும். அது ஒரு இராஜதந்திர காப்பீடு (Diplometic Protocol). எனவே அது இல்லாமல் போனால், தான் எங்கு போய் இறங்கினாலும் திடீரெனக் கைது செய்யப்பட்டு விடலாம் என்ற அச்சம் அவரை ஆட்கொண்டிருக்கின்றது. இதனால்தான் இன்னும் ராஜிநாமா பண்ணவில்லை என்ற பலத்த ஊகங்கள் பலரிடமும் இருக்கின்றன. அவற்றை விடுத்து அவருக்கு நாட்டிற்கு திரும்பிவரும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தமட்டில் அவர் தன்னுடைய ஆசனத்தை வரிதாக்கி விட்டு போய்விட்டார் என்ற நிலைப்பாடுதான் ஏற்பட்டிருக்கின்றது. உண்மையில் இன்று நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட இருக்கின்றன. அவர் ஆசனத்தை வரிதாக்கி விட்டு போய்விட்டார். எனவே அந்த இடம் வெற்றிடமாகி விட்டது. நீதி மன்றம் ஓர் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை சில வேளை நீதிமன்றத்தின் ஊடாக ‌வைக்கப்படலாம். அவர் மாலைத் தீவுக்கு தப்பியோடிவிட்டு, பதவியில் இருக்கின்ற பிரதமரை பதில் ஜனாதிபதியாக நியமிப்பதாக வர்த்தமானியில் அறிவித்து விட்டு போய் இருந்தார்.

கேள்வி: சட்ட ரீதியாக அதற்கு ஏற்பாடு இருக்கின்றதா?

பதில்: வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டு இருக்கின்றது. குறித்த சரத்து ஒன்றைப் பாவித்து அதன் மூலமாகத்தான் செய்திருக்கின்றார். ஒரு ஜனாதிபதி வெளிநாட்டுக்கு போய் இருக்கும் சந்தர்ப்பத்திலோ அல்லது தனது கடமைகளுக்கு தற்காலிக இடர்கள் இருக்கின்ற சந்தர்ப்பத்திலோ பிரதமரைப் பதில் ஜனாதிபதியாக நியமிக்கலாம் என்ற ஏற்பாட்டைத்தான் அவர் பாவித்து இருக்கின்றார்.

எனவே, இன்னும் அவரின் இராஜிநாமா நடக்கவில்லை. இன்னும் அவர் ஜனாதிபதியாக இருந்து கொண்டிருக்கின்றார் என்ற ஒரு நிலைப்பாடுதான் சட்ட ரீதியாக இருக்கிறது. (பேட்டி வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் போது) பிரதமரும் பதவி விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று பெரிய கலேபரத்தை உருவாக்கி இருக்கின்றார்கள். ஆர்ப்பாட்டக்காரர்கள் மட்டுமல்லர், சகல எதிர்க்கட்சிகளும் சேர்ந்து அதை பலமானதோர் கோரிக்கைகளாக முன்வைத்திருக்கின்றோம். இருந்தும் அவர் விலகுவதாக இல்லை. அவர் நாட்டில் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தி இருக்கின்றார். ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தி இருக்கின்றார். எனவே எதிர்க்கட்சிகள் நாங்கள் கூடி இனிமேலும் அவரிடத்திலே பதவி விலகுமாறு கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே நாங்களாக ஒரு தீர்மானத்துக்கு வரவேண்டும் என்று மிக நீண்ட நேரமாக கலந்தாலோசித்தோம். எங்களுக்கு மத்தியில் யார் எந்த பதவியை வகிப்பது போன்ற குறிப்பாக பிரதான அந்த இரண்டு பதவிகள் பதில் ஜனாதிபதியாக எஞ்சியிருக்கின்ற காலத்திற்கு இருப்பது யார்? பிரதமராக பொறுப்பேற்பது யார்? போன்ற விவகாரங்களில் வேறுபட்ட நிலைப்பாடுகள் உள்ளன. ஆகக் கூடிய உறுப்பினர்களை கொண்ட பொதுஜன பெரமுன(SLPP) என்கின்ற கட்சி ஒரு சவாலாக இருக்கின்றது. இவர்களில் பின்வரிசை உறுப்பினர்களும் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள். முன்னாள் அமைச்சர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் பதவிப் போட்டி நிலவினாலும், நாட்டின் நலன் கருதி தன்னுடைய சொந்த நலன்களைச் சற்றுப் பின்னிறுத்தி முடிவுகளுக்கு வரவேண்டும் என்ற விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவரும் பல உடன்பாடுகளை ஏற்றுக் கொண்டிருக்கின்றார். அந்த அடிப்படையில் நாளை காலை 10.00 மணிக்கு பாராளுமன்றத்தில் கட்சி தலைவர்கள் கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு இன்று சபாநாயகரை கேட்டிருக்கின்றோம். அதனை அவர் கூட்டுவதாக அறிவித்திருக்கின்றார்.

கேள்வி: உங்களை பார்க்கின்ற போது மிகவும் வெளிப்படையாக அரசியல் விமர்சனங்களை முன் வைக்கின்றீர்கள். இப்போது பாராளுமன்றத்தில் ஓர் அரசியல் சூதாட்டம் அல்லது சதுரங்க ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கட்சியில் எதிர்கால பார்வை என்ற நோக்கில் தீர்மானங்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். பொதுவாக ரணில் விக்கிரமசிங்கவாக இருக்கலாம் அல்லது ஏனைய கட்சிகளாக இருக்கலாம். சட்ட ரீதியான ஏற்பாடுகள் இருக்கத்தக்கதாக, ஜனாதிபதி பதவி விலகுவாராக இருந்தால் ராஜிநாமா கடிதம் கிடைக்குமாக இருந்தால் அரசியல் யாப்பின்படி பிரதமர் இயல்பாகவே ஜனாதிபதியாக கூடிய வாய்ப்பு இருக்கின்றதா? அதற்கான எதிர்ப்புகள் எவ்வாறு இருக்கின்றன? 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் என்ன நடக்கும்?

பதில்: ஜனாதிபதி பதவி விலகுவாராக இருந்தால் சட்ட ஏற்பாடுகளின்படி இருக்கின்ற பிரதமர் தற்காலிகமாக பதில் ஜனாதிபதியாக பதவி ஏற்றதாக ஏற்றுக் கொள்ளப்படும். அதற்கு பதவி பிரமாணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதுதான் சட்டத்தின் ஏற்பாடு. அப்படி இருந்த போதிலும், அப்படி அவர் பதவியேற்று 30 நாட்களுக்குள் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும். எனவே அவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தால் மாத்திரமே பதில் ஜனாதிபதி என்ற பதவியை ஜனாதிபதியின் எஞ்சிய காலத்திற்கு பதவி வகிக்க முடியும். இல்லையென்றால் ஆகக் கூடியது 30 நாட்கள். எங்களை பொறுத்த மட்டில் 30 நாட்கள் கூட பதில் ஜனாதிபதியாக பதவிவகிக்க ரணில் விக்கிரம சிங்கவை அனுமதிக்க முடியாது. ஏன் என்றால், ஒட்டு மொத்த மக்களின் கோரிக்கையும் ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையும் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த அரசியல் மற்றும் பொருளாதார சீரழிவுக்கு காரணம் என்பதுதான். அதுவும் குறிப்பாக ராஜபக்ஷக் குடும்பத்தை காப்பாற்றுவதற்குத்தான் அவர் பிரதமர் பதவியை எடுத்தார் என்ற ஆத்திரமும், ஆவேசமும் இந்த ஆர்ப்பாட்டக்காரர்களை வெகுவாகப் பாதித்து இருக்கிறது. எனவேதான் பிரதமரும் பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

கேள்வி: சமூக வலைதளங்களில் பேசிப்பட்டுக் கொண்டிருக்கின்ற விடயங்களை உங்களிடம் உறுதிப்படுத்திக் கொள்ள கூடிய வாய்ப்பு இருக்கின்றது. இப்போது ஜனாதிபதி சிங்கப்பூர் சென்றிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. அவர் சிங்கப்பூருக்கு சென்றதும் ராஜிநாமா கடிதத்தை அனுப்ப இருப்பதாகத்தான் சொல்லப்படுகின்றது (பேட்டி காணப்பட்டுக்கொண்டிருக்கும் போது). அவ்வாறு அனுப்பப்படுகின்ற போது, 20ஆம் திகதி வரை ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக இருக்கக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. 20ஆம் திகதி பாராளுமன்றம் கூடுகின்ற போது ஒருவருக்கு மேற்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்களது விருப்பத்தைத் தெரிவிப்பார்களானால், வாக்களிப்பு நடக்கின்ற சந்தர்ப்பம் இருக்கும், இரகசிய வாக்களிப்பு என்ற நடைமுறையை சற்று தெளிவு படுத்துங்கள்.

பதில்: முதலில் ஜனாதிபதி சிங்கப்பூர் சென்றதும் ராஜிநாமா செய்வார் என்ற ஊகம் சம்பந்தமாக பேசுவதாக இருந்தால், அது வெறும் ஊகம் மாத்திரம்தான். அடுத்த விமானத் தளத்தில் இறங்கியவுடனேயே கடிதம் தருவார் என எதிர் பார்க்கின்றேன் என்று சபாநாயகர் கூறுகின்றார். என்னை பொறுத்தமட்டில் சிங்கப்பூரில் அவர் ஒரு இடைமாறு பயணி (Transit Passenger ) ஆக மட்டுமே இருக்கக் கூடும். இப்போது வந்திருக்கும் தகவல்களின் படி அவர் ச‌வூதி அரேபியாவில் ஜித்தா நகருக்கு போகவிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. சவூதி அரேபியா அவருக்கு அரசியல் புகலிடம் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்து கொண்டிருக்கின்றது. ஏன் என்றால், சில நாடுகளின் முன்னாள் அரசியல் தலைவர்களுக்கு சவூதி அரேபியா புகலிடம் கொடுத்து இருக்கிறது. ஆனால் அதே போல இலங்கை ஜனாதிபதிக்கு அந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுமா? என்ற ஒரு கேள்வி எழுந்து கொண்டிருக்கின்றது. எங்களால் அது பற்றி ஊகம் ஒன்றும் சொல்ல முடியாது. ஒன்றை மட்டும சொல்ல முடியும். அவர் இருந்த அணியும், அவர் சார்ந்திருந்த அரசியல் கொள்கைகளும் அரபு நாடுகளை முழுமையாகவே புறத்தொதுக்கியிருந்தன. அவர்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொள்ளாமல் அரபு நாடுகள் வேண்டிக்கொண்ட போதும், இந்த நாட்டில் இருக்கின்ற முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட படு பாதகமான கொடூரச் செயல்கள் பற்றி அலட்சியமாக இருந்த ஒருவருக்கு ஈற்றிலே ஓர் அரபு நாட்டில் தஞ்சம் புக வேண்டிய நிலைமை ஏற்படும் என்பது இறை நியதியாக இருக்கலாம். அதைவிடவும் கூடுதலாக சொல்ல முடியாது. ஆனால் அங்கும் அவருக்கு புகலிடம் கிடைக்குமா என்பது ஒருவருக்கும் தெரியாத விடயம். அங்கிருந்து அவர் ஐக்கிய அமெரிக்காவுக்குச் செல்வார் என்றுதான் எதிர்பார்த்தார்கள். அங்கும் அவருக்கு புகலிடம் கிடைக்காத நிலைமை இருக்கின்றது. எல்லோரும் பயப்படுகின்றார்கள் அடுத்து வருகிற இலங்கையின் ஆட்சியாளர்களும் அப்படியாக செயல்படுகின்ற போது, இந்த நாடு சம்பந்தமாக விவகாரத்தில் ஒரு எதிர்ப்பு உருவாகி விடலாம். பலமான நாடுகள் ஒருவாறு உதவலாம். என்னை பொறுத்தமட்டில் சர்வதேச ரீதியாக உகண்டா போன்ற நாடுகள் சிலருக்கு புகலிடம் கொடுத்திருக்கின்றன. உகண்டாவிலும் ஒருவிதமான சர்வாதிகாரம் தான் நடை‌முறையில் இருக்கின்றது. கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக ஒரே ஒருவர் ஆட்சியில் இருந்து கொண்டிருக்கின்ற நாடு. எனவே அப்படியான நாடுகள்தான் உதவி செய்ய முன்வரும். இவர்களின் முதலீடுகளும் அங்கு நிறைய இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

கேள்வி: நீங்கள் குறிப்பிட்டது போன்று அவர் வெளிநாடு சென்று திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. அவ்வாறு பேச்சு அடிப்பட்டாலும் கூட அதற்கான வாய்ப்பு இல்லை. 20ம் திகதி பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றதா?

பதில்: நிச்சயமாக அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அது மாத்திரமன்றி அது நடைபெற்று ஆக வேண்டும். ஏனென்றால், சபாநாயகர் இந்த விடயத்தை இன்னும் இழுத்தடிக்க முடியாது. சபாநாயகரே இந்த விவகாரம் சம்பந்தமாக சட்டமா அதிபரிடம் பதவி விலகாமல், தொடர்ந்தும் இந்த ரணில் விக்கிரம சிங்கவுடைய பதில் ஜனாதிதி நியமனத்துடன் காலத்தை இழுத்தடித்துக் கொண்டு போனால் அதுபேரம் பேசும் உத்தியாகத்தான் கருதப்படும். மனித உரிமை காரணமாக, அதாவது ஒரு நாட்டின் அதிபராக இருக்கின்றவரை எதேர்ச்சையாக வேறு நாடொன்றில் கைது செய்யப்பட முடியாது. இந்த ஜெனீவா சாசன அடிப்படையிலான ‌ராஜதந்திர நியமங்களுக்கு ஏற்ப அதை இவர் ஒரு பேரம் பேசும் விடயமாக வைத்துக் கொண்டு ஒவ்வொரு விமானத் தளத்திலும் இருந்து எங்காவது ஒரு நாட்டுக்கு புகலிடம் கிடைக்குமா என்று ஆராய்ந்து கொண்டு திரிகின்ற ஒரு விடயமாகத்தான் இருக்கின்றது. எனவே ஏதாவது ஒரு பலமான நாடு தலையிட்டு, அவர்களின் அரசியல் பலத்தை பயன்படுத்தி இன்னொரு நாட்டில் தற்காலிகமாக அவருக்கு வசிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வார்களா என்ற விடயத்தை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அப்படி நடப்பதற்கு சாத்தியப்பாடுகள் மிகவும் குறைவு என்றே நான் நினைக்கின்றேன்.

கேள்வி: இந்த கேள்விக்கு நீங்கள் விரும்பினால் பதில் தரலாம் அல்லது தவிர்த்து விடலாம். பாராளுமன்றத்தில் பல பெயர்கள் முன் வைக்கப்படுகின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு யாருக்கு என்று கூற முடியுமா?

பதில்: எங்களை பொறுத்த மட்டில் நாங்கள் மிகத் திறந்த மனதோடு இருக்கின்றோம். குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு சிநேகக் கட்சியினர். நாங்கள் ஒரே கூட்டணியில் இருப்பவர்கள். எனவே அதன் சார்பில் ஒரு வேட்பாளரை முன் வைப்பார்களானால், அவருக்கு ஆதரவு அளிப்பதையே எங்களின் முதன்மை கடமையாக கருதுவோம். இது சம்பந்தமாக கட்சி மட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவேண்டும். இந்த விவகாரம் தொடர்பில் இன்று காலை நடந்த பேச்சு வார்த்தையில் தியாக மனப்பான்மையோடு சில முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதாவது இந்த பதவிப் போட்டி என்ற விவகாரத்தை விட்டு விட்டு பிரதான பதவிகள் இரண்டில் ஒன்றை எடுப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த பதவிதான் வேண்டும், ஜனாதிபதி கதிரை என்பதும், அதனால் 20ஆம் சட்டத்திருத்தத்துக்கு இருக்கும் அதிக பட்ச அதிகாரங்களைப் பாவிக்கலாம் என்ற நப்பாசையும் ஒரு சிலருக்கு இருந்திருக்கலாம். எதுவாகவிருந்தாலும், மக்கள் போராட்டத்துக்கு பின்னர் இந்த அதீதமான அரசியல் பலத்தை ஒரு தனி நபராக இருந்து கொண்டு பிரயோகிக்கலாம் என்ற சூழ்நிலை இப்பொழுது இல்லை. அப்படிச் செய்யப்போனால் ஜனாதிபதிக்கு நடந்ததுதான் நடக்கும். ஆகவே, இந்த விவகாரத்தில் யாரும் பதவி ஆசையில் தான் கதிரையில் அமர வேண்டும் என்பதற்காக ரணில் விக்கிரமசிங்க மாத்திரம்தான் இருப்பதாக நான் காணுகின்றேன். அவர் மட்டுமே நாட்டில் இருக்கின்ற கள நிலவரங்களைக் கண்டுகொள்ளாமல், யதார்தத்தைப் புரிந்து கொள்ளாமல் ஏதோ தனக்குக் கிடைத்திருக்கும் இந்த அதிர்ஷ்டத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற ஒரு விதமான முரட்டுப் பிடிவாதத்தில் இருந்து கொண்டிருக்கின்றார். இதனால் அவருக்கு தனிப்பட்ட இழப்புகளும் நடந்தாகி விட்டன. ஆனால், அது முடிந்த பிறகு இன்னும் இரட்டிப்பு மடங்காக இந்த விடயத்தில் ஆர்வமாக இருந்து கொண்டிருப்பதும், இந்த விடயத்திற்காக ஆளும் கட்சியில் இருக்கின்ற இன்று அரசியல் வங்குரோத்து நிலைமைக்கு வந்திருக்கின்ற ஒரு கும்பலை வைத்துக் கொண்டு "உங்களின் பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் அளிக்கின்றேன். நீங்கள் எல்லோரும் எனக்கு ஆதரவாக இருப்பீர்களேயானால், நான் ஜனாதிபதி ஆகிவிட்டு உங்களை பாதுகாப்பது மட்டுமன்றி இந்த நாட்டு பொருளாதார பிரச்சினைகள் சர்வ சாதாரண விடயம்" என்கிறார். இவ்வளவு காலம் இருந்து செய்ய முடியாத ஒருவர் இனியும் சாதிப்பாரா என்பதில் எந்த எதிர் பார்ப்பும் இல்லை.

அவரிடம் சில திறமைகள் இருந்தன. திறமைகள் இருந்து மட்டும் போதாது. மக்கள் அங்கீகாரம் வேண்டும். மக்களின் உணர்வுகளை மதிக்க தெரியாத ஒருவர் இப்படி பிடிவாதமாக கதிரையில் இருந்து கொண்டு அவரின் வீட்டை எரித்தவுடன் நான் போட்ட ட்விட்டர் பதிவுதான் அதற்குக் காரணம் என்று சொல்லுகின்ற அளவுக்கு மிகவும் மோசமான வங்குரோத்து நிலைக்கு வந்திருக்கின்ற ஒருவரைதான் இந்தக் கதிரையில் பிடிவாதமாக அமர்ந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். எனவே அவருடைய அரசியல் ஆயுள்காலம் ஒரு சில நாட்களுக்குதான் நீடிக்கும் என்பது எனது ஊகம்.

கேள்வி: ரவூப் ஹக்கீம் அவர்களே, நீங்கள் குறிப்பிட்டது போல ஜனாதிபதி கதிரையில் அமர்வதற்கு பெரிதாக யாரும் ஆசைப்படவில்லை என்கிறார்கள். ஆனால் ரணில் விக்கிரசிங்க போலவே இன்னும் சிலரைக் களத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. சரத் பொன்சேகா உள்ளிட்ட சிலர் களத்தில் இருந்து பேசும் போது இவ்வாறான ஒரு ஆசை ஆர்வம் இருக்கின்றது. வெளியில் சொல்லாமல் நிறைய பேர் இருக்கின்றார்கள். நான் கேட்க வந்த விடயம்,
இம்முறை ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களாக பாராளுமன்றத்தில் வந்தால் குறிப்பாக 3 பேர் வந்தால் நிச்சயமாக தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளின் வாக்குகள் யார் ஜனாதிபதியாக போகின்றார்கள் என்ற விடயத்தை தீர்மானிப்பதாக இருக்கும். தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு இடையில் ஏதாவது கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருக்கின்றனவா?

பதில்: நிச்சயமாக. எமக்கு மத்தியில் நிறையக் கருத்து ஒருமைப்பாடு இருக்கின்றது. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் நாங்கள் கூடி ஒரு முடிவுக்கு வரலாம். ஆனால், என்னை பொறுத்த மட்டில், ஒரு சர்வ கட்சி ஆட்சி அமைவது என்பது எல்லா கட்சிகளும் சேர்ந்து அமைந்தால்தான் இன்று இருக்கின்ற பொருளாதார சிக்கல்களில் இருந்து மீளுவதற்கு மிக வசதியாக இருக்கும். ஏன் என்றால், எங்களுக்குள் இருக்கின்ற இந்த மாமூல் அரசியல் போட்டியினால் அடுத்து வருகின்ற காலத்தில் ஏற்படக்கூடிய மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு மிக கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி வரும். எனவே, இந்த முடிவுகள் எடுக்கப்படுகின்ற போது பாராளுமன்றத்துக்குள்ளேயே அதிக பட்ச கருத்தொற்றுமையாவது இல்லை என்றால், இந்த நாட்டின் பொருளாதாரம் இன்னும் சீரழிந்துவிடும். எனவே எங்களுக்குள் முதலில் கட்சிகளை விடுத்து, நாட்டைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. நாம் இந்த கட்சி அரசியலை தேர்தல்கள் வரும் போது பார்த்துக் கொள்ளலாம். இதைதான் நான் தொடர்ந்தும் சொல்லி வருகின்றேன். யாரும் பதவிகளுக்கு ஆசைப்படாமல் நாங்கள் சில விட்டுக் கொடுப்புகளைச் செய்து எப்படியாவது நாட்டை மீட்டெடுப்பதற்கு, நாட்டு மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய வகையில் எங்களின் தெரிவுகள் இருக்க வேண்டும். நாட்டு மக்களும் அவர்களுக்கு மத்தியில் இருக்கின்ற எதிர்பார்ப்புக்கள் எல்லாம் அப்படியே பாழடையக் கூடிய நிலையில் ஒரு விரக்தி நிலைக்கு வந்திருக்கின்றார்கள்.
இந்த விரக்தி நிலையில் உச்சக்கட்டம்தான் இந்த ஆர்ப்பாட்டத்தின் ஆவேசமும் அதன் எதிர் விளைவுகளுமாகும். எனவே, இதை நாம் அனைவரும் புரிந்து கொண்டு இப்போதாவது மாமூல் அரசியலைக் கொஞ்சம் பின்னால் வைத்து விட்டு நாட்டை முன்னிலைப்படுத்தி எப்படியாவது நாட்டை பொருளாதார சிக்கலில் இருந்து விடுவிப்பதற்கு முயற்சிப்போம். பொருளாதார ஸ்திரத் தன்மையை ஏற்படுத்துவதற்கு அரசியல் ஸ்திரத் தன்மை அதி பிரதானமாகும். அது இல்லாமல் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வார்த்தைகளும் பெரிதாக வெற்றியைத் தரப்போவது இல்லை. இவற்றை உணர்ந்து கொண்டு, நட்பு நாடுகளிடமிருந்து கிடைக்கின்ற உதவிகளை சரிவர பெற்றுக் கொள்வதற்கு நாம் எதாவது செய்ய வேண்டும். வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் வெளிநாட்டு செலாவணியை, அவர்கள் ஈட்டுகின்ற பணத்தை அனுப்புவதற்கு அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.
நாட்டை முன்னிறுத்தி ஒரு அர்ப்பணிப்புடனான அரசியலை செய்வதற்கு இன்று பாராளுமன்றத்தில் இருக்கின்ற அரசியல் வாதிகள் முன் வருவார்களா என்ற ஏக்கம் அவர்களிடம் இருக்கின்றது. அது நடந்தாலதான் இவை அனைத்தும் நடக்கும். முதலீடுகள் கூட வரலாம். இந்த பிரளாட்சியில் இருந்து மீள்வது பெரும் சிக்கல் நிறைந்தது. நீண்ட காலம் எடுக்கும். இவ்வளவு காலம் தாழ்த்தியதால் சிக்கல் கூடி விட்டது. இருந்தாலும் இந்த நாடு சகல வளங்களையும் கொண்ட நாடு. மிக முக்கியமான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இந்து சமுத்திரத்தில் இருக்கின்ற நாடு .

எனவே நாங்கள் இந்த கேந்திர முக்கியத்துவத்தையே சந்தைப்படுத்தி பல விடயங்களை சாதிக்கலாம். இப்படியெல்லாம் இருக்கும் போது நாம் பெரிதாக அச்சப்பட வேண்டியதில்லை. ஆயினும், சிரமங்களை நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், அதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். மனம் திறந்து அவர்களுடன் பேச வேண்டும். அதை செய்வதற்கு எங்களுக்குள் ஒற்றுமை வேண்டும். இன்று பெருமளவு நம்பிக்கையொன்று ஏற்பட்டிருக்கின்றது. நாளை 10 மணிக்குள் குறைந்த பட்சம் வேறு யாரும் சவாலுக்கு உட்படுத்த முடியாதவாறு ஒரு நபரின் பெயரை நாம் அனைவரும் கூடி பிரேரிக்கலாம். அது சர்வ கட்சி சுயேற்சையாக அமையக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. அப்படி அமையா விட்டாலும், ஓரிரு கட்சிகள் மாத்திரம் உடன் பாட்டில் இருந்து தவிர்ந்து கொண்டாலும், அதிக பட்ச பாராளுமன்ற ஆசனங்கள் அந்த ஒருவருக்கு வரலாம் என்ற நம்பிக்கை இருக்கின்றது. காரணம் யாரும் அந்த ஜனாதிபதி பதவியை தவிர வேறு எந்த பதவியும் தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்து ஒரு மாற்றம் ஏற்பட்டு இருக்கின்றது. இதுதான் இதற்கான முக்கியமான காரணம். எனவே பிரதமருக்கான பெயரைப் பிரேரிப்பது சிக்கலை தாராது என்று நான் நினைக்கின்றேன்.

கேள்வி: சர்வ கட்சி பொறுப்புக்களை கூறுவீர்களா?

பதில்: சர்வ கட்சி‌ பொறுப்புக்களை எடுக்க இயலாது என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் நாங்கள் எல்லோரும் பொதுவாக கட்சி தலைவர்கள் விட்டுக் கொடுப்பபுக்களை செய்ய வேண்டும் என்றுதான் நான் சொல்லுகின்றேன். எங்களை விடவும் தகுதியானவர்கள் இருந்தால், அல்லது "எங்களால் குறித்த விடயத்தை சாதிக்க முடியும்; எங்களுக்கு தாருங்கள்" என்று கூறுவார்களாக இருந்தால் விட்டுக் கொடுப்பது என்பதுதான் இன்று இருக்கின்ற நிலைமையில் பொருத்தமானது. ஏன் என்றால் யாரும் பதவிக்கு அவசரப்பட வேண்டிய அவசியம் இல்லை. அனைவருக்கும் மக்கள் ஆணை வரிதாகி இருக்கின்ற நிலவரம். யாரிடத்திலும் மக்கள் ஆணை இல்லை. மக்கள் ஆணையை பெற்று விட்டு வந்து செய்வதுதான் சாலப் பொருத்தமானதாக இருக்கும். இப்போது எதிலும் அவசரப்படாமல் பொருத்தமானவர்கள் பிடிவாதமாக இருப்பார்களானால் அவர்களுக்கு ‌விட்டுக் கொடுத்துவிட்டு, நாம் அனைவரும் ஒன்றாக நின்று அவர்களுக்கும் ஆதரவை கொடுத்து விட்டு சகல கட்சிகளை சேர்த்து தலைவரின் நெறிப்படுத்தில் அமைச்சரவை தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்ற விடயத்தை தீர்மானித்து இருக்கிறோம்.
எனவே நாங்கள் அமைச்சரவைக்குள் இருந்து கொண்டுதான் செய்ய வேண்டும் என்ற நியதியும் கிடையாது. நாங்கள் நாட்டின் பொருளாதாரத்தை சுமூக நிலைக்கு கொண்டு வருவதற்கான ஒரு தீவிர முயற்சியை கட்சி தலைவர்கள் செய்யக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. அப்படியான பொறி முறையை நாம் ஏற்படுத்தி இருக்கின்றோம். எனவேதான் இதில் நாங்கள் யாரும் தனிப்பட்ட முறையில் எமது விருப்பு வெறுப்புக்கு அப்பால் இந்த விடயத்தை அணுகுவதுதான் இந்த காலகட்டத்தில் நாங்கள் இந்த போராட்டத்தைச் செய்த பாராளுமன்றத்துக்கு வெளியில் இருக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு கௌரவம் அளிப்பதாக அமையும் என்பதுதான் எனது நிலைப்பாடு. அதன்படி நாம் செயல்படுவோம்.
கேள்வி: புலம் பெயர் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையற்ற நிலை இருக்கின்றது. எங்கே தவற விட்டோம். எவ்வாறு தவறை திருத்திக் கொள்வது என்பதை சுருக்கமாக விளக்குங்கள்.

பதில்: மிக விநயமாக சொல்லுகின்ற விடயம், நிறைய சோதனைகளை நாம் சந்தித்து இருக்கின்றோம். 30 வருட கால யுத்தத்தின் பின் விளைவுகளை மிக மோசமாக சந்தித்த சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் நிறைய பேர் இருக்கின்றீர்கள். இந்த நாட்டு மண் வாசனையை மறக்காது. உங்களுடைய பிறந்த பூமி சுபீட்சமான ஒரு நிலைமைக்கு வர வேண்டும் என்ற ஆர்வம் உங்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் இருப்பது நான் அறியாத விடயம் அல்ல. எனவே, அதுவும் குறிப்பாக இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த புரட்சி கரமான மாற்றம் எங்களை பொறுத்தமட்டில் பிரஞ்சுப் புரட்சிக்கு சமமானது. பிரஞ்சுப் புரட்சி எப்படி நடந்ததோ அந்த பஸ்டில் சிறையை உடைத்து சிறையில் இருந்தவர்களை வெளியில் எடுத்ததை போல, இன்று சிறையில் இருக்கின்ற அரசியல் கைதிகளும் வெளியில் வருகின்ற ஒரு புதிய ஆட்சி மலரவிருக்கின்றது. அதுதான் மிக நிம்மதிக்குரிய விடயம். என்னை பொருத்தமட்டில் கடந்த கால அநீதிகளுக்கு நீதி நியாயம் என்பது நடப்பதற்கு புதியதாக அமைய போகின்ற ஆட்சி வழிவகுக்கும் என்று நாங்கள் அனைவரும் மிக உளப்பூர்வமாக எதிர் பார்க்கின்றோம். அதற்கான அந்த போராட்டத்தில் நாம் அனைவரும் இருப்போம். நாட்டில் ஒரு புதிய அரசியல் யாப்பு அமைகின்ற போது சகல மக்களுக்கும் சமத்துவமான ஒரு பூமியாக மாற்றுகின்ற ஓர் அரசியல் கலாசாரத்துக்கு வழிகோலுகின்ற புதிய யுகம் பிறந்திருக்கிறது. எனவே அதில் நம்பிக்கை வைத்தவர்களாக உங்களுடைய தாய் நாட்டை சுபீட்சமாக மாற்ற உங்களால் எதை செய்ய முடியுமோ, பொருளாதார ரீதியாக முதலீடு செய்வதாக இருந்தாலும் சரி, உங்கள் உறவுகளை வளமாக வாழவைக்க நீங்கள் அந்நிய செலாவணியாக அனுப்புவதாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு சாதாரண உல்லாச பயணியாக வந்து நாட்களை இந்த சொந்த பூமியில் கழிப்பதாக இருந்தாலும் சரி அதற்கு நீங்கள் தயாராக வேண்டும். இயன்றவரை தொழில் முயற்சியாளர்கள் மட்டுமல்லர், எல்லோரும் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதில் புதிய அரசாங்கத்திற்கு ஒத்தாசையாக இருப்பதற்கு நீங்கள் அனைவரும் முன்வர வேண்டும். இந்த நாட்டில் நடந்த எல்லா அநியாயங்களுக்கும் ஒரு விடிவு காலத்தை தருவதற்கு இந்த நாட்டைச் சூழ்ந்திருந்த இனவாத, மதவாத மேகங்கள் அகன்று இருக்கின்றன. அதை பலவந்தமாக புரட்சியாளர்கள் அகற்றி இருக்கின்றனர். அவர்களின் புரட்சி கோஷங்களில் அதுவும் ஒன்றாக இருந்திருக்கின்றது.

முள்ளி வாய்க்கால் நினைவு கூரல் என்பது ஜனாதிபதி செயலகத்தின் முன்றலில் சகலரும் சேர்ந்து நடத்துகின்ற ஒரு நிலவரம். ஒரு வருடத்துக்கு முன் யாரும் கனவு கூட கண்டு இருக்க முடியாது. முள்ளி வாய்க்காலிலும், கிளிநொச்சியிலும் வெறும் மெழுகு திரிகளை ஏற்றிக் கொண்டிருந்தவர்களை கூட பலவந்தமாக கைது செய்து கொண்டு போன படையினர் இந்த விடயம் ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் நடந்த போது கைகட்டி பார்த்து கொண்டு இருக்க வேண்டிய ஒரு நிலவரம் ஏற்பட்டது என்பது ஒரு யுக மாற்றத்தின் அறிகுறியாகும். எனவே, இப்படியான ஒரு சூழல் உருவாகி இருப்பதை பற்றி நாங்கள் அனைவரும் சந்தோசப்பட வேண்டும்.

அதே போல, முஸ்லிம் மக்களும் மிகப் பெரும் இன்னல்களை யுத்தம் முடிவடைந்த காலத்தில் இருந்து ஆனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களை எதிரிகளாக வரித்துக் கொண்டு 30 வருடத்தை கடத்தி விட்டார்கள். அதன் பின்னர் முஸ்லிம்களை எதிரிகளாக காட்டி தங்களின் ஆட்சியை கொண்டு போகலாம் என்ற ஒரு விதமான வங்குரோத்து அரசியலை கொண்டு சென்றவர்கள், எங்களுக்கு இழைத்த அநியாயத்துக்கு இறைவன் சகலரையும் மிகைத்த சதிகாரன் நான் என்ற வகையில் இவர்களை அம்பலப்படுத்திக் காட்டியிருப்பது மட்டுமல்ல, அவமானப்படுத்தி விட்டான். இதைவிட அவமானமடைய ஒன்றுமே இல்லை. இந்த ஆட்சியாளர்களுக்கு நேற்று நடந்த சம்பவங்களுக்கு பின்னால் தாங்கள் இன்னும் இன்னும் அவமானப்பட்டுக் கொண்டிருப்பதில் எது விதமான பிரச்சினையும் இல்லை என்பதை போலத்தான் ஒரு சிலர் நடந்து கொண்டிருக்கின்றார்கள். இதுதான் எங்களுக்கு கவலையாக இருக்கின்றது. ஆனால், இவை அனைத்தும் வரும் சில நாட்களில் முடிவுக்கு வரும் வந்து விடும் என்று நம்புகிறோம்.

இது நீங்கள் பிறந்த பூமி மீண்டும் செழிப்பான, சுபீட்சமான பூமியாக மலரட்டும். அதற்கு உங்கள் ஆசிகளும், உதவிகளும் கிடைக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

எல்லா நாடுகளிலும் வாழ்கின்ற புலம் பெயர் உறவுகளுக்கு எனது அன்பு வணக்கம். அஸ்ஸலாமு அலைக்கும். ஆயுபோவன்.

(ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

வங்குரோத்து நிலைமைக்கு வந்துள்ளவரை ஜனாதிபதிக் கதிரையில் அமரவைக்கலாமா? - ரவூப் ஹக்கீம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY