
posted 8th July 2022
மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஒன்பது கிராம அலுவலகப் பிரிவுகளுக்கு முருங்கன் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில்; குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் பெற்றோல் வழங்கப்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கிராம அலுவலகர்களுக்கு ஊடாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மரத்திலிருந்து விழுந்தவனை மாடு ஏறிய கதையாக நானாட்டான் பிரதேச செயலக பிரிவு மக்களுக்கு நிலைமை ஏற்பட்டதாக கவலை தெரிவிக்கின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள குறிப்பிடப்பட்ட ஒன்பது கிராம அலுவலகப் பிரிவுகளுக்கு குறிப்பிட்ட நேரங்களுக்கு அமைவாக முருங்கன் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில்; புதன்கிழமை (06.07.2022) பெற்றோல் வழங்கப்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கிராம அலுவலகர்களுக்கு ஊடாக தெரிவித்திருந்தார்.
இதற்கமைய குறிப்பிடப்பட்ட நேரங்களுக்கு சம்பந்தப்பட்ட கிராம அலுவலகர் பிரிவிலுள்ள வாகன சொந்தத்காரர்கள் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக குறிப்பிட்ட எரிபொருள் நிலையத்துக்கு சென்றதாகவும் ஆனால் எரிபொருள் தீர்ந்து விட்டதாக எரிபொருள் வழங்காது கைகழுவி விட்டதாக ஏமாற்றப்பட்டவர்கள் கவலை தெரிவித்தனர்.
ஒரு திட்டமிடல் இல்லாமல் தாங்கள் ஏமாற்றப்பட்டது மாத்திரமல்ல தங்கள் வாகனங்களில் இருந்த சொற்ப பெற்றோலையும் வீனாக்கி விட்டோம் என கவலை தெரிவித்துள்ளனர்
ஒரு சிலர் இருந்த பெற்றோலுடன் வந்து பெற்றோலை பெற முடியாத நிலையில் வீட்டுக்கு திரும்பிச் சென்றபொழுது வாகனங்களை உருட்டிக் கொண்டு சென்ற சம்பவங்களும் இடம்பெற்றதாகவும் பாதிப்படைந்தவர்கள் தெரிவித்தனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)