பல்வகைச் செய்தித்துணுக்குகள்
பல்வகைச் செய்தித்துணுக்குகள்

சைக்கிள் திருடன் கைது

யாழ்ப்பாணம் மாநகர பகுதிகளில் வண்டிகளைத் திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பெருங்குற்றத் தடுப்பு பிரிவினரால் வெள்ளிக்கிழமை (15) முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் சந்தேக நபரிடமிருந்து 18 சைக்கிள்கள் முழுமையாகவும் உதிரிப்பாகங்களாகவும் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

நாவற்குழியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யபட்டடுள்ளார்.

சந்தேக நபர் சைக்கிள்களைத் திருடி அவற்றை உதிரிப்பாகங்களாக்கி விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சைக்கிள்கள் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ளன. உரிமையாளர்கள் அவற்றை அடையாளம் காட்டுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

அண்மைய நாள்களாக யாழ்ப்பாணத்தில் பல்வேறு பிரதேசங்களில் சைக்கிள்கள் திருட்டு அதிகரித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.



எரிபொருள் பதுக்கல் நபர் கைது
முள்ளியவளையில் வீடு ஒன்றில் டீசல் மற்றும் மண்ணெண்ணையைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட பெருங்குற்றப்பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலக்கு அமைய முள்ளியவளை 4ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை சோதனை செய்தவேளை, 4 பரல்களில் பதுக்கி வைத்திருந்த 830 லீற்றர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் 30 லீற்றர் என்பன கைப்பற்றப்பட்டன.

இதன்போது ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

கைதானவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், அவரை எதிர்ரும் 21ஆம் திகதி நீதிமன்றில் முற்படுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.



போதைப்பொருள் வைத்திருந்ததாக இருவர் கைது

முல்லைத்தீவு - கள்ளப்பாட்டில் கடந்த வியாழக்கிழமை ஐஸ் எனப்படும் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 23 வயதுடைய கள்ளப்பாடு வடக்கை சேர்ந்த ஒருவரும், 20 வயது வெள்ளப்பள்ளம் வடக்கு உடையார் கட்டைச் சேர்ந்த ஒருவரும் கள்ளப்பாடு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

இதன்போது கள்ளப்பாடு வடக்கைச் சேர்ந்த 23 வயதுடைய நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.



மணல் கடத்தியவர்களை கைப்பற்ற முயலுகையில் பொதுமக்கள் 7 பேர் படுகாயம்

மணல் கடத்தலை தடுக்க பொலிஸார் டிப்பரை விரட்டிச் சென்றபோது ஏற்படுத்தப்பட்ட விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர். இதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அறிய வருகின்றது.

வெள்ளிக்கிழமை (15) பின்னிரவு ஒரு மணியளவில் வடமராட்சி - நெல்லியடி - மாலைசந்திப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது;

பருத்தித்துறை பொலிஸார், மணல் கடத்திச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றை மறித்தனர். ஆனால், அந்த வாகனம் நிற்காத நிலையில் அதனை அவர்கள் விரட்டிச் சென்றனர்.

வேகமாக சென்ற டிப்பர், மாலைசந்தை பிள்ளையார் ஆலயத்தின் சப்பைரதத் திருவிழாவை முன்னிட்டு இடம்பெற்ற இசைக் கச்சேரியை பார்த்துக்கொண்டு வீதியோரமாக நின்றவர்களை மோதித் தள்ளியது. இதில், 7 பேர் படுகாயமடைந்தனர்.

இவர்கள் அனைவரும் உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் கிடைக்கின்றன.

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய டிப்பர் தப்பிச் சென்றுள்ளது.

மணல் கடத்தல் மற்றும் விபத்து சம்பவங்கள் தொடர்பில் பருத்தித்துறை, நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


பல்வகைச் செய்தித்துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)