
posted 19th July 2022
தமிழ்க் கட்சிகளும் பா. உ.களும் எவ்வாறு செயல்பட வேண்டும் - ஜெல்சின்
ஜனாதிபதி தெரிவின்போது பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை கருத்திற்கொண்டும் தமிழ்க் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் செயல்படவேண்டுமென யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஜெல்சின் தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று செெவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
வடக்கு-கிழக்கு தமிழ் தரப்புகளுக்கு இது ஒரு முக்கியமான தருணம். இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை கருத்திற் கொண்டும் தமிழ் கட்சிகள் செயல்படவேண்டும். நீங்கள் ஆதரிக்கும் வேட்பாளர் எமது தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் அபிலாஷைகளையும் ஏற்கும் தருணத்தில் நடுநிலையாக செயல்படாமல் அந்த வேட்பாளருக்கு முழு ஆதரவை நீங்கள் வழங்க வேண்டுமென மாணவர் சமூகமாக நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.
தமிழ் மக்களால் தேர்வு செய்யப்பட்ட நீங்கள் தமிழ் மக்களின் உண்மையான தேவைகளை புரிந்து இருப்பீர்கள் என நம்புகிறோம். காலங்காலமாக தமிழ் மக்கள் உங்கள் வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றம் அடைந்து இருக்கின்ற வேளையில் இந்த சந்தர்ப்பத்தை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவும் செயலாற்ற வேண்டும்.
தென்னிலையில் மக்கள் அனைவரும் இக்கட்டான சூழலிற்கு தள்ளப்பட்ட வேளையில் அவர்களின் தலைவர்களுக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். அதே நிலைமையை கருத்திற்க்கொண்டு உங்களுக்கு எதிராகவும் தமிழ் மக்கள் ஒரு காலகட்டத்தில் நம்பிக்கையை இழந்து செயல்படும் பட்சத்தில் மாணவர் சமூகமாக இருக்கின்ற நாங்கள் மக்களுடன் இணைந்து செயல்படுவோம் என சந்தர்ப்பத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறோம் என்றார்.
மதகுரு ஒருவரை பொலிஸ் தாக்கியதால் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய மக்கள்
வவுனியாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதகுரு ஒருவரை பொலிஸ் தாக்கியதாக தெரிவித்து மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா நெளுக்குளம் நான்காம் கட்டை பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் திங்கட்கிழமை (18.07.2022) எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் மக்கள் நின்று கொண்டிருந்த போது பொலிஸ் பொறுப்பதிகாரி மதகுரு ஒருவரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அங்கு நின்ற மக்கள் வவுனியா - மன்னார் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு தாக்கப்பட்ட மதகுருவிடம் பொலிஸ் பொறுப்பதிகாரி மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் அங்கு பதட்ட நிலைமை காணப்பட்டதோடு நீண்ட நேரமாக வவுனியா - மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. இதனை தொடர்ந்து குறித்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸ் பொறுப்பதிகாரி தாக்கப்பட்ட மதகுருவிடம் மன்னிப்பு கேட்டதற்கு இணங்க ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
வாரத்தில் 3 தினங்களே கல்வி
இலங்கையில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் பாடசாலை ஆரம்பமானாலும் வாரத்தில் 3 தினங்களே கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறும். மிகுதி இரு நாட்களும் இணைய வழி கற்றலை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை, செப்ரெம்பர் 7ஆம் திகதி வரையில் நீடிக்கப்படவுள்ளது. இரண்டாம் மற்றும் 3ஆம் தவணையை நடத்துவதற்கான கால எல்லை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முதலாம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரையில், திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 25ஆம் திகதி முதல் அது தொடர்பான கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
அத்துடன், முதலாம் தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை வாராந்தம் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய 3 தினங்களில் மாத்திரம் பாடசாலைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை நடத்தப்படாத புதன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் இணையவழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கிளிநொச்சியில் தனியார் காணியிலிருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள தனியார் காணியிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
காணி உரிமையாளர் துப்பரவுப் பணியில் ஈடுபட்ட நிலையில் இவை அடையாளம் காணப்பட்டன. இந்த நிலையில் பொலிஸாருக்கு காணி உரிமையாளரால் தகவல் வழங்கப்பட்டது.
விசேட அதிரடிப்படையினரால் இவை நேற்று முற்பகல் மீட்கப்பட்டன.
இதில் மோட்டர் செல்கள், மகசின்கள், கண்ணீர் புகைக்குண்டுகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY