பலவகைச் செய்தித் துணுக்குகள்
பலவகைச் செய்தித் துணுக்குகள்

தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது பெண்குழந்தை ஒன்று உயிரிழந்தது.

இந்தச் சம்பவம் பொன்னாலையில் திங்கட்கிழமை (04) பகல் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த யசோதரன் யஸ்மிகா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது;

குழந்தை வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, 20 லீற்றர் கொள்வனவுடைய தண்ணீர் வாளிக்குள் இருந்த கரண்டியை குழந்தை எடுக்க முற்பட்டபோது தலைகீழாக விழுந்து தண்ணீரில் மூழ்கியது. இதனை அவதானித்த வீட்டார் குழந்தையை மீட்டு உடனடியாக மூளாய் மருத்துவமனையில் சேர்ப்பித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

கதிர்காமம் பாத யாத்திரை

தொண்டமனாறு செல்வச்சந்நிதியில் ஆரம்பமான கதிர்காமம் பாத யாத்திரை நேற்று முன் தினம் மாலை மட்டக்களப்பை சென்றடைந்ததுடன் செவ்வாய்க் கிழமை காலை கதிர்காமம் நோக்கி ஆரம்பமானது.

கடந்த மாதம் 04ஆம் திகதி செல்வசந்நிதி முருகன் ஆலயத்தில் நடைபெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து பாதயாத்திரை ஆரம்பமானது. இம்மாதம் கதிர்காமத்தின் கொடியேற்றம் 29ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்த பாதையாத்திரை கதிர்காமத்தை நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் மாலை மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்துக்கு சென்ற பாத யாத்திரைக் குழுவினர் நேற்று காலை ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகள்,கூட்டுப்பிரார்த்தனைகளை தொடர்ந்து கதிர்காமம் நோக்கி தமது பாத யாத்திரையை ஆரம்பித்தனர்.


சங்கிலி அறுப்புத் திருடர் கைது

வவுனியாவில் இரு இளைஞர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த வாரம் முதியவர் ஒருவர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து இருவர் அவர் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துச் சென்றனர்.

முதியவர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், இது தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் தோணிக்கல், ஸ்ரீமாபுரம் பகுதிகளை சேர்ந்த 33 மற்றும் 25 இரு இளைஞர்களை கைது செய்துள்ளதுடன், பசார் வீதியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைக்கப்பட்ட நிலையில் 6 அரைப் பவுண் சங்கிலியையும் மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


கிளிநொச்சிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான புதிய ரயில் சேவை அடுத்தவாரம் ஆரம்பம்

இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடியினால் அலுவலக ஊழியர்களின் போக்குவரத்துக்கு பஸ்கள் இன்மையால் அசௌகரியங்கள் ஏற்படுகின்றன. எனவே, இதனை நிவர்த்திக்கும் வகையில் கிளிநொச்சிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான புதிய ரயில் சேவையை எதிர்வரும் வாரத்தில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான அரச மற்றும் தனியார்துறை ஊழியர்கள் கிளிநொச்சிக்கு செல்கின்றனர். அவர்களின் வசதி கருதி போக்குவரத்து அமைச்சிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

அந்த அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று கிளிநொச்சிக்கு சென்று இவ்விடயம் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டதன் பின்னர், எதிர்வரும் வாரம் முதல் ரயில் போக்குவரத்தை ஆரம்பிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ரயில்வே பொது முகாமையாளர் ஏ.டி.பி. செனவிரத்ன, யாழ் ரயில் நிலைய அதிபர் பிரதீபன், கிளிநொச்சி மாவட்ட நிலைய அதிபர் ஸ்ரீ மோகன், கடற்றொழில் அமைச்சரின் மேலதிக ஒருங்கிணைப்புச் செயலாளர் கோடீஸ்வரன் ருஷாங்கன் ஆகியோர் புதிய ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.

பின்னர் வடமாகாண ரயில் சேவைப் பணிப்பாளர் விசுமித்ர மற்றும் கிளிநொச்சி ரயில் நிலைய அதிபர் சிகாமணி, மாவட்ட செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் ஆகியோருடன், ரயில் சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலான விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.


அத்தியாவசிய சேவை வாகனங்களுக்கு எரிபொருள் வினியோக முன்னுரிமை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய தேவைக்கான சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் நேற்று முன்தினம் மட்டக்களப்பு ஐ.ஓ.சி ஊடாக டீசல் விநியோகிக்கப்பட்டதாக மட்டக்களப்பு வர்த்தகர் சங்கத்தின் தலைவரும் மட்டக்களப்பு .ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளருமான முத்துக்குமார் செல்வராசா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் சுகாதார மருத்துவ பாதுகாப்பு நலன் கருதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய தேவைகளுக்கான சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நோயாளர் காவி வண்டிகள் (அம்புலன்ஸ்) மற்றும் மருந்துப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் போன்ற அத்தியாவசிய வாகனங்களுக்கு எரிபொருளை வழங்கியதுடன், இதன்போது எரிபொருளை பெற்றுக்கொள்ள வீதிகளில் காத்திருந்த வாகனச் சாரதிகளும் தமது ஒத்துழைப்புக்களை வழங்கியதாகவும் முத்துக்குமார் செல்வராசா மேலும் கூறினார்


பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)