பலவகைச் செய்தித் துணுக்குகள்

ஆர்ப்பாட்டத்தில் திருகோணமலை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர்

திருகோணமலை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் தமக்கு சீராக எரிபொருள் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து திருகோணமலை பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு முன்பாக பஸ்களை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் பஸ்களுக்கான எரிபொருளை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான டிப்போக்களில் இருந்து பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்திருந்த நிலையில் தமக்கு போதிய அளவிலான எரிபொருள் வழங்கப்படுவதில்லை என வலியுறுத்தி திருகோணமலை மத்திய பஸ் நிலையத்தின் நுழைவாயிலை பஸ்களைக் கொண்டு மறித்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

முன்னதாக நாளொன்றுக்கு 2500 லீற்றர் டீசல் வழங்கப்படுவதாக டிப்போ அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்ட போதிலும் தற்போது நாளொன்றுக்கு 750 லீற்றர் டீசல் வழங்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

குறித்த டீசலை பெற்றுக் கொள்வதற்கு தாம் பல மணி நேரம் காத்திருக்கவேண்டி இருப்பதாகவும், குறிப்பாக தமது பஸ்கள் சேவையில் ஈடுபடும் நேரத்தில் தம்மை வரிசைகளில் காத்திருக்க வைத்துவிட்டு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இராணுவ சிற்றுண்டிச்சாலை திறக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணங்களை மேற்கொள்ளும் உள்ளுர் மற்றும் வெளியூர் பயணிகள், அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்கள் பயன்படுத்தும் வகையில் விமான நிலையத்தின் சூழலில் இலங்கை இராணுவத்தின் 7 ஆவது பெண்கள் படையணியினால் புதிதாக அமைக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலை யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தரவின் தலைமையில் நேற்று (04) திறந்து வைக்கப்பட்டது.

இதன் மூலமாக விமான நிலையப் பணியாளர்கள் மற்றும் பயணிகளுக்கு தூய்மையான சுகாதார பாதுகாப்பு கொண்ட உணவுகள் மற்றும் பானங்களை சாதாரண விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டது.


விமானச் சேவை கட்

யாழ்ப்பாணம் (பலாலி) சர்வதேச விமான நிலையத்திலிருந்து தமிழகத்துக்கான விமான சேவை நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படாததற்கு இந்திய தரப்பில் எழுந்த எரிபொருள் பிரச்னை, சட்ட சிக்கல்களே காரணம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இங்கிருந்து, 2020ஆம் ஆண்டுவரை தமிழகத்துக்கு சேவைகள் இடம்பெற்றன.

இந்நிலையில், கோவிட் தொற்று பரவலால் சேவை நிறுத்தப்பட்டது. இந்த சேவையை ஆரம்பிக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை விடுத்தனர். இந்நிலையில், இன்று - ஜூலை முதலாம் திகதி முதல் சேவையை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதியளித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 18ஆம் திகதி யாழ்ப்பாணம் வந்த சிவில் விமான சேவைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வாவும் இன்று ஜூலை 1 முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

ஆனால், அறிவித்தபடி நேற்று விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவில்லை. இது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்பு கொண்டு கேட்டபோது,“இந்திய தரப்பில் உள்ள எரிபொருள் பிரச்னை மற்றும் சட்ட சிக்கல்கள் காரணமாக சேவையை ஆரம்பிப்பது பிற்போடப்பட்டுள்ளது”, என்று கூறினார்.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

தாய் கண்டித்தால் தற்கொலைதான் முடிவா?

தமிழகத்தில் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ராணி என்ற பெண் ஒரு மகன், மூன்று பெண் பிள்ளைகளுடன் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு சென்று மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கி வசித்து வருகின்றார்.

இந்நிலையில் இலங்கை அகதியான ராணி என்ற பெண்ணின் மகனான 22 வயதுடைய இளைஞர் நிரோஷன் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து செல்போனில் கேம் விளையாடி சுற்றித் திரிந்துள்ளார்.

இதையடுத்து ஆத்திரமடைந்த தாய், தனது மகனை கேம் விளையாடுவதை விட்டுவிட்டு வேலைக்கு செல்லுமாறு கண்டித்துள்ளார்.

இதையடுத்து தாயின் கண்டிப்பால் மனம் உடைந்த ஈழத் தமிழ் இளைஞர் நிரோஷன் நஞ்சறுந்தியுள்ளார்.

இதையடுத்து மயக்க நிலையில் இருந்த நிரோஷனை அவரது நண்பர்கள் வைத்தியசாலையில் அனுமதித்து அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து உயிரிழந்த ஈழத் தமிழர் இளைஞரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமிற்கு கொண்டு வரும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இது குறித்து உயிரிழந்த ஈழத் தமிழர் இளைஞரின் சகோதரி பிரியா கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

ஊர்காவற்றுறை கடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

ஊர்காவற்றுறை கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (01) வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஐஸ்பழ வீதி, குருநகரை சேர்ந்த திரகரி நைனாஸ் (வயது 57) என்பவராவார்.

தனது கடற்றொழில் உபகரணங்களை சரிசெய்த பின்னர் கடலுக்கு செல்ல முற்பட்டவேளை அவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.

இன்னொரு மீனவர் அந்த இடத்துக்கு சென்றபோது, சடலத்தை கண்டுள்ளார். அவர், ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

சுவீகரன் நிஷாந்தன் மீது வாள்வெட்டு

தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் மீது இனந்தெரியாத நபர்களால் சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று (01) வெள்ளிக்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் யாழ்ப்பாணம் கச்சேரி எரிபொருள் நிலையத்திற்கருகில் காத்திருந்தபோது பின்புறமாக வந்தவர்கள் அவரை வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அவர், உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


திருச்சி, மதுரை விமான சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் திருச்சி, மதுரை விமான நிலையங்களிலிருந்து இலங்கைக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை முதல் சரக்கு விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து இருந்து சென்னை, திருச்சி, மதுரை ஆகிய விமான நிலையங்களுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் விமான சேவை மேற்கொண்டு வருகிறது.

அதனடிப்பையில், தினசரி சென்னைக்கு 3 சேவையும், திருச்சிக்கு 3 சேவையும், மதுரைக்கு ஒரு சேவையும் அளித்துவந்தது. ஆனால், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலை உயர்வு காரணமாக சென்னைக்கு 02 விமான சேவையும், திருச்சிக்கு ஒரு விமான சேவையும், மதுரைக்கு வாரத்துக்கு 03 சேவையும் என குறைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் முதல் சரக்கு விமான சேவையை நிறுத்துவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால் சென்னை, திருச்சி, மதுரையில் இருந்து நாளொன்றுக்கு சராசரியாக ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த 10 தொன் பொருட்கள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது கவலை வெளியிடப்பட்டுள்ளது.


ஆர்ப்பாட்டத்தில் இறங்கய அரச அதிகாரிகள்

எரிபொருளை பகிர்ந்தளிக்க வேண்டிய அரச அதிகாரிகள் எரிபொருள் கோரி ஆர்ப்பாட்டத்தில்

எரிபொருள் வழங்கலை நெறிப்படுத்த வேண்டிய மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எரிபொருளைக் கோரியும் இராணுவத்தினரின் தரக்குறைவான செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தும் பிரதேச செயலகத்துக்கு முன்பாக உள்ள பிரதான வீதியை மறித்து இன்று திங்கட்கிழமை காலை மூன்று மணி நேரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர் .பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள் கமநல சேவை நிலைய அதிகாரிகள் போன்றோருக்கு இதுவரை அத்தியவசிய சேவையடிப்படையில் எரிபொருள் வழங்கப்படவில்லை என்பதுடன் குறித்த உத்தியோகத்தர்கள் எரிபொருள் நிலையத்துக்குச் சென்றாலும் அங்குள்ள இராணுவத்தினர் தகாத வார்த்தைகளினால் வசைபாடுவதையும் நேரடியாகக் காணமுடிகிறது.எரிபொருள் விநியோகத்தினை சீராக முன்னெடுக்க வழிகாட்ட வேண்டிய பிரதேச செயலாளர் இராணுவத்தினரின் செயற்பாடுகளை கண்டு கொள்ளாமல் இருப்பதனால் மக்கள் தமது அன்றாட அத்தியவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் திணறுவதையும் காணமுடிகிறது. எவ்வாறாயினும் போராட்டத்தில் ஈடுபட்ட மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு மட்டும் இன்று மாலை மூன்று லீற்றர் வீதம் எரிபொருள் வழங்க Ioc எரிபொருள் நிலையம் நடவடிக்கை எடுத்தது.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

மாட்டுவண்டி சவாரிப்போட்டி

மாட்டுவண்டி சவாரிப்போட்டி வட்டக்கச்சி சில்வாவீதி பகுதியில் அமைந்துள்ள மாட்டுவண்டி சவாரி திடலில் சவாரிபோட்டிகள் 04 .07.2022 இன்றைய தினம் நடைபெற்று.

இதில் 75 க்கும் அதிகமான காளைகள் இச் சவாரிப்போட்டியில் பங்குபற்றியிருந்தன.

கிளிநொச்சிமாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம் யாழ்மாவட்டம் போன்ற மாவட்டங்களில் இருந்துகலந்துகொண்ட காளைகளும் கலந்து கொண்டன. இதில் வெற்றியீட்டிய காளைகளுக்கு பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கப்பட்டன.


குண்டுத் தாக்குதல்களா?

ஜூலை 5 அல்லது 6 ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு அல்லது தென்னிலங்கையில் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறலாம் என எச்சரித்து, பாதுகாப்புச் செயலாளருக்கு பொலிஸ்மா அதிபர் அனுப்பிய கடிதம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தத் தகவல்கள் எப்படி, எங்கிருந்து பெறப்பட்டன என்பதையும், அப்படித் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதா என்பதையும் அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், குறித்த கடிதத்தின் பிரகாரம் சர்வதேச உளவு நிறுவனங்களின் பங்களிப்புடன் மேற்படி இரண்டு தினங்களில் இடம்பெறவுள்ள கரும்புலிகள் நினைவேந்தல் நிகழ்வுகளை இலக்கு வைத்து இந்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் எந்தவொரு நிகழ்வுகளிலும் பங்குபற்ற வேண்டாம் என வடக்கு, கிழக்கில் உள்ள சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை இந்த ஆவணம் எச்சரிக்கின்றது என்றார்.

பாதுகாப்புச் செயலாளருக்கு அனுப்பப்பட்ட ஆவணத்தின் சில பகுதிகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தத் தகவல்கள் எப்படி, எங்கிருந்து பெறப்பட்டன என்பதையும், அப்படித் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதா என்பதையும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தற்போது நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களையும் உணர்வுகளையும் நசுக்கவே இவ்வாறான செய்திகள் பகிரப்படுவதாகவும் சந்தேகம் இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க மேலும் கூறினார்.


பலவகைச் செய்தித் துணுக்குகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)