நாட்டை சீரளித்துக் கொண்டிருக்கும் அரசே விலகு - எழுச்சிப் பேரணி

நாட்டை சீரழித்து, மக்களை நிர்க்கதியாக்கிய அரசாங்கத்தை பதவி விலகக்கோரி முன்னெடுக்கும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு NFGG பூரண ஆதரவு.

நமது நாட்டையும் நமது மக்களையும் வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான நிலைமைக்குக் கொண்டு சென்ற அரசாங்கத்தையும் அதன் ஆட்சியாளர்களையும் உடனடியாக பதவி விலகக்கோரியும் சிறந்த ஆட்சி ஒன்றை உருவாக்கக்கோரியும் சனிக்கிழமை 9ஆம் திகதி (09.07.2022) மேற்கொள்ளப்பட இருக்கின்ற மக்கள் உரிமைப் போராட்டத்திற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முழு ஆதரவை வழங்குவதோடு, அப்போராட்டத்தில் கலந்து கொள்வதாகவும் தீர்மானித்துள்ளது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை வியாழக்கிழமை 7ஆம் திகதி (07.07.2022) கூடி நாட்டின் தற்போதைய நிலமை குறித்து விரிவாக கலந்துரையாடியது.

தற்போதைய நிலமை தொடர்ந்தால் நாட்டு மக்கள் பாரிய பொருளாதாரப் பிரச்சினை, பசி பட்டினியை சந்திக்க நேரிடும். அது நாட்டின் கலாசாரத்தை சீரழித்து, பாரிய சமூகப் பிரச்சினையை ஏற்படுத்தும் என இதன்போது கலந்துரையாடப்பட்டது.

எனவே, தற்போதைய ஆட்சியாளர்களை உடனடியாக வீட்டுக்கு அனுப்பி சிறந்த ஆட்சியாளர்களைக் கொண்டுவருவதற்காக போராடும் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பூரண ஆதரவை வழங்க வேண்டும் என தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் அனைவரும் தெரிவித்தனர்.

ஆனால், மக்கள் உரிமைப் போராட்டத்தின்போது ஜனநாயக விரோத செயல்கள், நாட்டின் சொத்துக்களுக்கு சேதம் விளைத்தல், சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் நடந்து கொள்வது நாட்டு மக்களின் தார்மீகக் கடமை என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்பட வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேண்டிக் கொள்கிறது என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டை சீரளித்துக் கொண்டிருக்கும் அரசே விலகு - எழுச்சிப் பேரணி

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)