
posted 20th July 2022
தழிழர் பண்பாடு இன்றைய சூழலில் அழிந்து கொண்டு செல்லும் நிலையில் நாம் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் எமக்கு இட்டுச் சென்ற ஆடிப்பிறப்பின் கொண்டாடத்தை அழியவிடாது தமிழ் பண்பாட்டை மாத்திரம் அல்ல, எமது ஒற்மைக்கும், உடலுக்கும், உள்ளத்துக்கும் உகந்ததாக அமைய வருடந்தோறும் இவ்வாறான செயலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னாரில் இவ் வருடமும் (2022) ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் வடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்டச் செயலக அலுவலர்கள் நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டடில் செவ்வாய் கிழமை (19.07.2022) மிக சிறப்பாக மன்னார் மாவட்ட செயலகத்தில் கொண்டாடப்பட்டது.
இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் இங்கு தொடர்ந்து உரையாடுகையில்;
ஆடிப்பிறப்பின் கொண்டாட்டத்தின் தந்தையாக நவாலியூர் சோமசுந்தரப் புலவர் திகழ்ந்து வருகின்றார்.
அவர் ஆடிப்பிறப்பைக் கொண்டாடப்பட வேண்டும் என்ற அவசியத்தை இரண்டு காரியங்களை முன் வைத்திருந்தார்.
ஒன்று, பல்வேறு தானியங்களைப் பயன்படுத்தி கூழ் காய்ச்சுவது, இரண்டாவது, எல்லோரும் ஒன்று சேர்ந்து கூழ் குடித்துக் கொண்டு ஒருவருக்கொருவர் உரையாடி மகிழ்வது.
அதாவது, பல்வேறு தானியங்களினால் ஆக்கப்பட்ட கூழை நாம் ஒன்று சேர்ந்து குடித்து மகிழும்போது அது எமது உடலுக்கும், மனதுக்கும் மிகவும் மகிழ்சியாக அமையும் என்பதே ஆகம் எனவும், ஆடி மாதம் மிகவும் உஷ்ணம் நிறைந்த காலமாதலால், இந்நாளில் நாம் இவ்வாறான உணவை உண்ணும்போது எமது உடலின் உஷ்ணத்தை அது தணிக்கக் கூடியதாக இருக்கும்.
இவ்வாறு தூரநோக்கோடு சிந்தித்தே புலவர் அவர்கள் இவ் ஆடிப்பிறப்பின் கொண்டாட்டத்திற்கென ஒரு தினத்தை தொடக்கி வைத்தார்.
இத்துடன் இதற்கென பாடல்களையும் இயற்றி இதன் முக்கியத்துவத்தைம் அவர் சொல்லி இருக்கினறார். அதாவது, 'ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பு இருக்காது' என்ற அந்தப் பாடலையும் இயற்றி இதன் மகத்துவத்தையும் தெளிவுபடுத்தினார்.
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை ஒன்றுகூடி உணவுப் பண்டமாக்கி, தமிழர் பண்பாட்டுடன் ஒருநாள் யாவரும் ஒன்றுகூடி மகிழ வேண்டும் என சோமசுந்தரப் புலவர் சொல்லிச் சென்றுள்ளார்.
ஆனால், இச் செயல்பாட்டையும், அதன் முக்கியத்துவத்தையும் இன்று பாடசாலை மாணவர்கள் தொடக்கம் மக்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதமானோர் மறந்து போயுள்ளமை மிகவும் கவலைக்குரியதாகும்.
ஆகவே, இவற்றை தொடர்ந்து நாம் மறந்து வாழாது எமது தமிழர் பண்பாட்டை மீண்டும் புதுப்பித்து செயல்பட வேண்டும்.
சோமசுந்தரப் புலவரின் இப் பணியானது மிகவும் மகத்தானது. இதை உணர்ந்தே வடக்கு மாகாண கலாச்சாரத் திணைக்களம் கவனத்தில் எடுத்து வடக்கு மாகாணத்தில் ஒவ்வொரு வருடமும் மாகாண ரீதியிலும், மாவட்ட ரீதியிலும், பிரதேச ரீதியிலும் கொண்டாடி வருவது சாலச் சிறந்ததாகும்.
இதற்கமைய மன்னார் மாவட்டமானது ஒரு விவசாய பூமியாக அமைந்துள்ளது. எமது பண்பாட்டை நாம் அழிந்துவிடச் செய்யாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)