தமிழ் தலைமைகள் மிக நிதானமாக செயற்பட வேண்டும் - சிவகரன்

மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியலை முன்னெடுக்காமல் அரசியல் மயப்படுத்தப்பட்ட வெறும் வாக்காளர்களாகவே தமிழ்மக்களை தமிழ்கட்சிகள் நோக்குகின்றன. அதனாலே இடைவெளி அதிகமாகின்றது. கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக தமிழ்க்கட்சிகள் எந்த சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தாமல் ஆக்கபூர்வமாக சிந்தித்து செயலாற்றவில்லை எனும் பொதுவான குற்றச்சாட்டை மறுக்க முடியாத உண்மையென நிரூபித்து வருகிறார்கள் என தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் இன்றைய நிலையை கவனத்தில் எடுத்துக்கொண்டு தமிழ் தலைமைகளுக்கு பகிரங்கமாக விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிப்பதாவது;

நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழலை மிகவும் நிதானமாகவும், பொறுமையுடனும், பொறுப்புடனும் தமிழ்த்தலைமைகள் கையாள வேண்டும். தமிழ்மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய வழிகளை எட்டுவதற்கு இந்த இக்கட்டான சூழ்நிலையை எமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும். அதுதான் தமிழ்த் தலைமைகளின் புத்திசாதூரியமான அறிவாந்த அணுகுமுறை ஆகும்.

கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையில் கூட தமிழ்க்கட்சிகள் தற்சார்பு பொருளாதார முறையை மேற்கொள்ள தமிழ் மக்களை ஊக்குவிக்கவில்லை எனும் குற்றச்சாட்டும் உண்டு. மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியலை முன்னெடுக்காமல் அரசியல் மயப்படுத்தப்பட்ட வெறும் வாக்காளர்களாகவே தமிழ்மக்களை தமிழ்கட்சிகள் நோக்குகின்றன. அதனாலே இடைவெளி அதிகமாகின்றது.

தென்னிலங்கையில் நடைபெறும் கோட்டா கோ கம போராட்டம் ஒரு தொலை நோக்கு சித்தாந்த போராட்டம் அல்ல. அந்த போராட்டக்காரர்களால் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை புரிந்து கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ, தயாராக இருப்பதாக தெரியவில்லை.

இந்த போராட்ட பின்னணியில் அரசியல் கட்சிகளான ஜே.வி.பி., முன்னிலை சோசலீச கட்சி, சில அரசியல் வாதிகளின் அமைப்புக்கள், ஒரு சில சிங்கள சிவில் அமைப்புக்கள் காணப்படுகின்றன.

எனவே, நெறிமுறை ஒழுங்கு கூட போராட்டத்தில் பின்பற்றப்படவில்லை. இவர்களினால் கைப்பற்றப்பட்ட அலுவலகங்களில் நடந்து கொண்ட முறையே யாவரையும் விசனத்திற்குட்படுத்தியது!

எனவே, இதில் உள்ள அரசியல் கட்சிகள் தமது விருப்பை நிறைவேற்றுவதிலே இலக்காக உள்ளனர். குறிப்பாக ஜே.வி.பி தான் இந்த நாட்டில் தமிழருக்கு எதிராக மிகப்பெரிய அளவில் இனவாதத்தை தூண்டி, வடகிழக்கை பிரித்து, சுனாமி கட்டமைப்பை முடக்கி, பல சூழ்ச்சிகளை எமக்கு எதிராக மேற்கொண்டவர்கள். தமிழ் மக்களுக்கு மிக ஆபத்தானவர்கள் இவர்களது சிந்தனையை நாம் ஆதரிக்கலாமா?

எமது இனத்திற்கான அரசியலை மேற்கொள்வதை விடுத்து கோட்டா கோ கமவை கூட்டமைப்பு ஆதரிப்பது முற்றிலும் அரசியல் முதிர்ச்சியற்ற செயலாகும். தேர்தல் அரசியலில் எவரும் உத்தமர் இல்லை. தற்போதைய அரசியலில் எவரும் காமராஜர் இல்லை. அரசியல் என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகழிடம் என்ற மாக்கியவல்லியின் கூற்று முற்றிலும் சரியானதே. அதை அனைவரும் அவ்வப்போது நிரூபித்தே வருகிறார்கள்.

சனநாயகம் என்பதையே லெனின் கும்பலின் ஆட்சி என்றால், பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்றான். ஆகவே ஆட்சி தத்துவ முறைமைகள் எல்லாம் கேலிக்கூத்தானவையே!

இதில் நல்ல சனநாயகம், கெட்ட சனநாயகம், நல்லவர், கெட்டவர், என்ற எந்த விளக்கமும் இருப்பதாக தெரியவில்லை. பொருள் முதல்வாதமும், பதவி முதல்வாதமே அரசியலின் மூலதன. இதில் நீதி நியாயம் எல்லாம் வெறும் வார்த்தைகளே.

இன வாதமும், பௌத்த தேசியவாதமும், யுத்த வெறிவாதமும்தான் சிங்கள ஆட்சியாளர்களின் தாரக மந்திரம். அதனால்தான் சிங்கள பௌத்த ஆட்சியை எவராலும் அழிக்கமுடியாது என்றார் கோட்டா கோ கம போராட்ட பிரதானிகளில் ஒருவரான ஓமல்பே சோபித் தேரர்.

ஆகவே, இந்த போராட்டத்தை ஆதரிக்கும் கூட்டமைப்பு தேரரை கண்டிக்காமல் அமைதியாக இருக்கிறது. சனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச இனப்படுகொலையாழி. அவரை அரசியலில் இருந்து அகற்றுவது மட்டுமல்ல, சிறைக்கும் அனுப்பவேண்டும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

எனவே, பலராலும் நிராகரித்த 13ம் சரத்தை அமுல்படுத்தக் கோரி இந்தியாவுக்கு கடிதம் எழுதி பெரு நாடகம் நடத்திய தமிழ்க்கட்சிகள் இந்த இக்கட்டான சூழலை தமிழ் மக்களுக்கு சாதகமாக பயன்படுத்தாமல் அமைதிகாப்பதும், தென்னிலங்கை அரசியலில் ஈடுபடுவதும் வேடிக்கையாக உள்ளது.

கோட்டா கோ கம போராட்டம் ஒரு அறிவுபூர்வமான போராட்டம் இல்லை. அது வெறும் தலைமையற்ற அத்தியாவசிய தேவைக்கான உணர்ச்சிகரமான அரசியல்கட்சிகளின் விருப்பு வெறுப்பு போராட்டம். இதை தமிழ்மக்கள் ஆதரிப்பதிலோ, எதிர்பார்ப்பிலோ எந்த பயனும் இல்லை. இதை கண்டுகொள்ளவே தேவையில்லை. அது அவர்களின் பிரச்சனை.

ஆகவே கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக தமிழ்க்கட்சிகள் எந்த சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தாமல் ஆக்கபூர்வமாக சிந்தித்து செயலாற்றவில்லை எனும் பொதுவான குற்றச்சாட்டை மறுக்கமுடியாத உண்மையென நிரூபித்து வருகிறார்கள்.

எனவே, இனியாவது உங்களுக்குள் ஐக்கியப்பட்டு தூரநோக்கோடு தமிழ்மக்களின் விடுதலை அரசியல் இலக்கை அடைவதற்கு செயலாற்ற வேண்டும். இல்லையேல் கோட்டாவின் நிலமை தமிழ் அரசியல் வாதிகளுக்கும் எதிர்காலத்தில் ஏற்படலாம். தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தலைமைகள் மிக நிதானமாக செயற்பட வேண்டும் - சிவகரன்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY