டீசல் பதுக்கல்கள்

கோப்பாயில் டீசல் பதுக்கியவர் கைது

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோப்பாய் மத்தி பகுதியில் டீசலை விற்பனை செய்தமை மற்றும் டீசலை பதுக்கி வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் கோப்பாய் பொலிஸார் ஒருவரை கைது செய்தனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோப்பாய் மத்தி பகுதியில் டீசலை விற்பனை செய்வதாக கோப்பாய் பொலிஸ் விசேட படையணியினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் விற்பனை செய்ய முற்பட்ட ஒரு லீற்றர் டீசலை கைப்பற்றினர்.

இதனை அடுத்து குறித்த டீசலை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கோப்பாய் மத்தியைச் சேர்ந்த 47 வயதான ஒருவரை கைது செய்ததோடு குறித்த நபரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 102 லீற்றர் டீசலும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.



வவுனியாவில் எரிபொருளை விற்பனை செய்த நபர் கைது

வவுனியாவில் 2,500 ரூபாய்படி 40 லீற்றர் டீசல் எரிபொருளை விற்பனை செய்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார், வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் 2,500 ரூபாய் படி 40 லீற்றர் டீசலை விற்பனை செய்தமையை கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து குறித்த நபரை கைது செய்த பொலிஸார் அவரது வீட்டிலும் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் வசித்து வந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.

டீசல் பதுக்கல்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)