ஜனாதிபதி கோட்டாபய  நாட்டு மக்களுக்காக தனது பதவியைத் தியாகம் செய்வாரா?

மிகப்பெரிய தியாகமாக கருதி தனது ஜனாதிபதி பதவியை எமது நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இராஜினாமா செய்து சகல சமூகங்களையும் உள்ளடக்கிய புதிய அரசாங்கத்தை இந்த நாட்டில் உருவாக்க முடியமாக இருந்தால் தலைதூக்கியுள்ள பொருளாதார பிரச்னையை தீர்த்து வைக்க அரபுநாடுகளின் உதவியை பெற்று பிரச்னைக்கு முழுமையான தீர்வை பெற ஆயத்தமாக இருக்கின்றோம் என்ற செய்தியை நாட்டு மக்களுக்கு சொல்லிவைக்க விரும்புகிறோம் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.எம்.ஏ. ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

நான் உட்பட முஸ்லிம் தலைவர்கள் ஏன் இலங்கையின் இன்றைய நிலையை ஏத்திவைத்து பிரச்னைகளை தீர்க்க அரபு நாடுகளிடமிருந்து உதவிகளை பெற்றுக்கொடுக்கக்கூடாது என்ற கேள்வியை பொதுமக்கள் முன்வைத்து வருவதை ஊடகங்களில் பார்த்தேன். எது எவ்வாறாக இருந்தாலும் இந்த நாட்டை தலைநிமிரச் செய்வது இலங்கையர்களாகிய எங்களின் கடமையாக இருக்கிறது. நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவேண்டிய கடமை மற்றும் பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது. அந்த அடிப்படையில் இந்த நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் எப்போதும் தயாராக இருக்கின்றோம்.

ஜனாதிபதி இந்த பதவியில் இருக்கும் ஒவ்வொரு நாளும் பல மில்லியன் டொலர்களை நாங்கள் இழந்து கொண்டிருக்கிறோம். அவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இராஜினாமா செய்திருந்தால் நாம் கடன் கட்டவேண்டிய காலம் குறுகிய காலம். இன்றைய நிலையில் அவர் இராஜினாமா செய்தால் எங்களுக்கு கடன் கட்டவேண்டிய காலம் ஒரு குறிப்பிட்ட காலமாக இருக்கிறது. இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு இந்த நிலை நீடித்தால் எங்களினால் கூட இந்த நிலையை சமாளிக்க முடியாத நிலை உண்டாகும். இந்த நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வறுமையான நாடக மாற்றம் பெரும்.

எமது நாட்டின் உயரிய பதவியான ஜனாதிபதி பதவி 69 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஆணை கொடுத்து உருவாக்கப்பட்டது. கடந்த இரண்டரை ஆண்டுகள் அந்த பதவியில் இருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கடந்த காலங்களில் நாட்டுக்காக செய்த பல தியாகங்களை போன்று இந்த நாட்டு மக்களின் மீது நம்பிக்கை வைத்து மக்களின் நன்மைக்காக மீதி இரண்டரை ஆண்டுகளை தியாகம் செய்து பதவி துறக்கவேண்டும். என்றார்.

ஜனாதிபதி கோட்டாபய  நாட்டு மக்களுக்காக தனது பதவியைத் தியாகம் செய்வாரா?

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)