ஜனநாயக ரீதியாக போராடுபவர்களின் குரல்வளையை நசுக்குவது ஜனநாயக விரோத செயலாகும்

இளைஞர், யுவதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு நல்லாட்சிக்காகவும், ஐக்கிய நாட்டுக்குள் ஒரு கௌரவமான உரிமையோடு வாழும் அனைத்து மக்களும் ஒன்றாக வாழ்வதற்காகவும், ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கும் இவ்வேளையில், அரசானது ஜனநாயகத்தக்கு எதிராக இவர்களின் குரல்வளைகளை நசுக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று அரசை வினயமாக கேட்டே மன்னார் மக்கள் இக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் என மெசிடோ நிறுவன இணைப்பாளர் யூட்சன் பிகிராடோ இவ்வாறு தெரிவித்தார்.

காலி முகத்திடல் அமைதி வழி போராட்டக்காரர் மீதான தாக்குதலையும், கைது செய்யப்படுவதையும் கண்டித்து வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டமானது மன்னாரில் வெள்ளிக்கிழமை (29.07.2022) காலை மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்றது.

இதன்போது மெசிடோ நிறுவன இணைப்பாளர் யூட்சன் பிகிராடோ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

இன்றைய நாளில் நாங்கள் மன்னாரில் ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கின்றோம்.

இங்கு இந்த போரட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் மக்கள் யாவரும் ஒருமித்த குரலாக தெரிவிக்கும் ஒரே செய்தி என்னவென்றால் ஜனநாயக ரீதியாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் எமது நாட்டின் இளைஞர், யுவதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு நல்லாட்சிக்காகவும், ஐக்கிய நாட்டுக்குள் ஒரு கௌரவமான உரிமையோடு வாழும் அனைத்து மக்களும் ஒன்றாக வாழ்வதற்காகவும் ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கும் இவ்வேளையில் அரசானது ஜனநாயகத்தக்கு எதிராக இவர்களின் குரல்வளைகளை நசுக்கும் நடவடிக்கையாக இவர்களை நசுக்குவதை நாங்கள் வண்மையாக கண்டிக்கின்றோம்.

இந்த நாட்டில் யாவரும் ஜனநாயக ரீதியில் போராடவும் குரல் கொடுக்கவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.

ஆந்த வகையில் இலங்கை அரசானது இவர்களுக்கு எதிராக செயல்படாது, இவர்கள் ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் போராடவும் அவர்களுக்கான இடத்தையும், சந்தர்ப்பத்தையும் வழங்கி பாதுகாப்பும் அளிக்க வேண்டும் எனவும், இந்த நாட்டில் ஒவ்வொருவரும் எதிர்பார்க்கும் நல்லாட்சி மலர வேண்டும் என்று இந்த நேரத்தில் நாங்கள் அரசையும் சர்வதேசத்தையும் வினயமாக வேண்டி நிற்கின்றோம் என இவ்வாறு தெரிவித்தார்.

ஜனநாயக ரீதியாக போராடுபவர்களின் குரல்வளையை நசுக்குவது ஜனநாயக விரோத செயலாகும்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)