காலி முகத்திடல் அமைதி வழி போராட்டக்காரர் மீதான தாக்குதலுக்கும் கைதுக்கும் கண்டனம் மன்னாரில்.

அமைதி வழி போராட்டக்காரர்களையும், ஊடகவியலாளரையும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் தாக்குவதை நிறுத்துமாறு நாம் இலங்கை அரசை கோருகின்றோம் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்ட மன்னாரில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

காலி முகத்திடல் அமைதி வழி போராட்டக்காரர் மீதான தாக்குதலைக் கண்டித்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டமானது மன்னாரில் வெள்ளிக்கிழமை (29.07.2022) காலை 11 மணியிலிருந்து ஒரு சில மணித்தியாலங்கள் மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்றது.

அதிகமான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்ட இக் கவனயீர்ப்பு போராட்டத்தின்போது இங்கு மேலும் தெரிவிக்கப்பட்டதாவது;

29 ஆவணி 2022 ஆகிய இந்த நாளில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களாகிய நாமும், சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மனித உரிமை பாதுகாவலர்கள் சிவில் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து அமைதி வழி போராட்டக்காரர் மீது அரசினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.

அமைதி வழி போராட்டக்காரர்களையும், ஊடகவியலாளரையும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் தாக்குவதை நிறுத்துமாறு நாம் இலங்கை அரசை கோருகின்றோம்.

அத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து போராட்டக்காரர்களையும் உடன் விடுவிக்குமாறு நாம் அரசை வேண்டுகின்றோம்.

இலங்கை தீவின் அதிகாரங்களற்ற சாதாரண பொதுமக்கள் ஜனநாயகமான மக்கள் போராட்டத்தின் (அரகலய) மூலம் சர்வாதிகார ராஜபக்ச ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

இலங்கை தீவின் மக்கள் என்னும் வகையில் நாம் பெருமிதம் அடைகின்றோம். தமிழின அழிப்புக்கும், போர் குற்றங்களுக்கும் பொறுப்பான பேரினவாத பாதுகாவலர்களான ராஜபக்சர்களை மண்டியிடச் செய்த மக்கள் போராட்டத்திற்கு தலை வணங்குகின்றோம்.

முழு நாடும் ஜனநாயக ஆட்சி மாற்றத்திற்காக காத்திருந்தது. எனினும் மக்கள் போராட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட அதிகாரம் மாற்றத்தின் காரணமாக அதிகாரத்துக்கு வந்தவர்கள் அதே மக்களுக்கு எதிராக திரும்பி அந்த மக்களின் குரல்வளையை நசுக்குவது சந்தர்ப்பவாதமாகும்.

தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் வன்முறையான ஜனநாயக விரோதமான நடவடிக்கைகள் நாட்டை மீளவும் ஒரு இருண்ட யுகத்துக்கு கொண்டு செல்லும் என நாம் அஞ்சுகின்றோம்.

எனவே, மக்களுக்கு அரசியல் அமைப்பின் மூலம் வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகள் மீறுவதை உடன் நிறுத்துமாறும் ஜனநாயகத்தையும், சட்ட ஆட்சியையும், உறுதிப்படுத்துமாறும் நாம் இலங்கை அரசை கோருகின்றோம் என வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தின் போது இக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காலி முகத்திடல் அமைதி வழி போராட்டக்காரர் மீதான தாக்குதலுக்கும் கைதுக்கும் கண்டனம் மன்னாரில்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)