
posted 19th July 2022
இலங்கையில் எரிபொருள்களின் விலைகள் நேற்று முதல் குறைக்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரலாறு காணாத நீண்ட கியூவரிசைகளில் எரிபொருள் நிரப்புவதற்காக மக்கள் அல்லல்படும் இச் சந்தரப்பத்தில் பேற்றோல், டீசல் என்பவற்றின் விலைகளே குறைக்கப்பட்டுள்ளன.
இதன்படி 92 ரக பெற்றோல், 1 லீற்றர் 20 ரூபா விலை குறைத்து 450 ரூபா எனவும், 95 ரக பெற்றோல் 10 ரூபா விலை குறைத்து 540 ரூபா எனவும்,
டீஸல் ஆட்டோ 1 லீற்றர் 20 ரூபா விலை குறைத்து 440 ரூபா எனவும், சுப்பர் டீஸல் 10 ரூபா விலை குறைத்து 510 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை குறைப்பு மக்கள் மத்தியில் ஏளனமான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. விலை அதிகரிக்கும் போது 200 ரூபாவுக்கு மேல் திடீர் விலை அதிகரிப்பு செய்வர், கேவலம் குறைக்கும் போது 20 ரூபா பிச்சைக் காசைக் குறைக்கின்றனர் என மக்கள் பெரும் விசனம் தெரிவிப்பதுடன்,உலக சந்தையில் எரிபொருட்களின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள இச் சந்தரப்பத்தில் இலங்கையில் விலைக்குறைப்பு கேலிக்கூத்தானது எனவும் தெரிவிக்கின்றனர்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி வாழ்வா சாவா எனும் நிலைக்குள்ளாகியுள்ள மக்களின் யானைப் பசிக்கு சோளப் பொரியா இந்த விலைக் குறைப்பு விவகாரம் எனவும் கேள்வி எழுப்பப்படுகின்றது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)