இ.போ.ச.வும், தனியார் சேவையும் மக்களுக்காக இணைந்து செயல்படும்

மேலிடம் எமக்கு வழங்கியிருக்கும் அறிவிறுத்தலில் எமது சாலையில் எரிபொருளின் இருப்பை கவனத்தில் வைத்துக் கொண்டே தனியாருக்கு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என தெரிவித்துள்ளபோதும் மக்களின் போக்குவரத்து நலன் கருதி மன்னார் இ.போ.ச.சாலை தனியார் போக்குவரத்துடன் இணைந்து செயல்பட முனைந்துள்ளது என மன்னார் இலங்கை போக்குவரத்து சபை சாலை முகாமையாளர் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னாரில் இலங்கை போக்குவரத்து சபை சாலைக்கும், தனியார் போக்குவரத்து சேவையாளர் சங்கத்துக்கும் இடையே ஏற்பட்டு வரும் எரிபொருள் விநியோகத்ததால் சேவைகள் தடைப்பட்டு வரும் நிலையில் பிரயாணிகளின் அசௌரியங்களை முன்னிட்டு மன்னார் இலங்கை போக்குவரத்து சபை சாலை முகாமையாளரிடம் கருத்து கேட்கப்பட்டபோது அவர் மேலும் தெரிவிக்கையில்;

மன்னார் இலங்கை போக்குவரத்து சபை சாலைக்கு எரிபொருள் பற்றாக்குறையாக இருப்பது மட்டுமல்ல எங்கள் சாலைக்கு அனுப்பப்படும் எரிபொருளும் மிக குறைவாகவே காணப்படுகின்றது.

எங்கள் மன்னார் இ.போ.ச. சாலைக்கு கடந்த வியாழக்கிழமையே (07.07.2022) கடைசியாக வந்த எரிபொருளாகும். இதன் பிற்பாடு எமக்கு திங்கள் கிழமை பிற்பகலே (11.07.2022) 6600 லீற்றர் டீசல் எரிபொருள் எமது சாலைக்கு வந்துள்ளது.

எங்கள் சாலைக்கு குறிப்பிட்ட நாட்களில் எரிபொருள் வராமையால் திங்கள் கிழமை (11) எமது சேவையை பூரணமாக செயல்படுத்த முடியாத நிலை உருவாகியது.

அதிலும் எமது சாலையின் தூர போக்குவரத்து சேவைகள் முற்றாக பாதிப்படைந்திருந்தன. ஞாயிற்றுக்கிழமை (10) எரிபொருள் பற்றாக்குறையால் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளையே நாம் மேற்கொண்டோம்.

இருந்தும் எற்கனவே எமக்கு டீசல் எரிபொருள் வரும்வேளையில் நாங்கள் தனியாருக்கு வழங்கிக் கொண்டு வந்துள்ளோம். டீசல் விநியோகத்தில் எங்களுக்கும் தனியாருக்கும் இடையே அண்மையில் பிரச்சனை ஏற்பட்டபோது அரச அதிபர் தலைமையில் எமக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதில் எங்களுக்கு நாளாந்தம் எரிபொருள் வரும் பட்சத்தில் நாங்கள் தனியாருக்கும் ஒரு பகுதியை வழங்குவதாக தெரிவித்திருந்தோம்.

நான்கு தினங்களுக்கு பிற்பாடு எங்களுக்கு எரிபொருள் வந்துள்ளமையாலும் புதன்கிழமை (13) போயா தினமாக இருப்பதாலும் இன்றைய போயா தினம் எமக்கு எரிபொருள் வரக்கூடிய சாத்திக்கூறுகள் இல்லாமைiயாலும் தற்பொழுது வந்துள்ள எரிபொருள் பற்றாக்குறையாக காணப்படுவதால் தற்பொழுது வந்துள்ள எரிபொருளை தனியாருக்கு வழங்க முடியாத நிலையாக இருக்கின்றது.

இருந்தும் அரச அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க நாங்கள் இன்றையத் தினம் (12) ஒரு குறிப்பிட்ட அளவு எரிபொருள் வழங்குவதற்கான ஆயத்த நிலையில் இருந்தோம்.

ஆனால் தனியார் போக்குவரத்து சேவையினர் எம்மை புரிந்து கொள்ளாத நிலையில் இன்றைய நாளில் (12.07.2022) எமது போக்குவரத்து சேவைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.

எமது மன்னார் இ.போ.ச. சாலையானது தனியாருடன் மக்களுக்கான போக்குவரத்து சேவையில் எவ்வித போட்டி பொறாமை தனத்தில் இல்லையென்பது தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

அதேநேரத்தில் எமது மேலிடம் எமக்கு வழங்கியிருக்கும் அறிவிறுத்தலில் எமது சாலையில் எரிபொருளின் இருப்பை கவனத்தில் வைத்துக் கொண்டே தனியாருக்கு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அத்துடன் எமது சாலை உறுப்பினர்கள் தங்கள் மோட்டர் பைசிக்களுக்கு பெற்றோல் இன்மையால் கடமைகளுக்கு வருவதிலும் பெரும் சிரமங்களையும் எதிர்நோக்குகின்றனர் என இவ்வாறு தெரிவித்தார்.

இ.போ.ச.வும், தனியார் சேவையும் மக்களுக்காக இணைந்து செயல்படும்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)