
posted 6th July 2022
இலங்கை போக்குவரத்துச் சபையின் கல்முனை பிராந்திய உத்தியோகத்தர்கள் எரிபொருள் நெருக்கடி காரணமாக போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
இன்று புதன்கிழமை திடிரென கல்முனை பிராந்திய இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான டிப்போ முன்றலில் ஒன்றுகூடி தமக்கு எரிபொருளை பெற்றுத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் துரிதமாக செயற்பட்ட கல்முனை குற்றப்புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் , கல்முனை பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ. எல் ஏ. வாஹிட் , தலைமையிலான பொலிஸ் குழுவினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சுமார் 210 லீற்றர் பெற்றோல் கல்முனை ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் இருந்து பெற்றுக்கொடுக்கப்பட்டது.
இதன்போது குறித்த எரிபொருள் பெற்றுக்கொடுக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை நிறுத்தி வழமை போன்று தமது பணிகளை கல்முனை பிராந்திய அலுவலக உத்தியோகத்தர்கள் முன்னெடுத்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)