அமைதியான முறையில் வினியோகிக்கப்பட்ட எரிபொருள்

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மூன்று பிரதேச செயலாளர்களின் கண்காணிப்பில் எரிபொருள் விநியோகம் அமைதியாக இடம்பெற்றது.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்களிற்கும், கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆனையிறவு மற்றும் தட்டுவன் கொட்டி பிரதேச மக்களிற்கும் வழங்கப்பட்டது.

இதேவேளை, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் உள்ள குடாரப்பு, மாமுனை, செம்பியன்பற்று, செம்பியன்பற்று வடக்கு, தனிப்பனை, மருதங்கேணி, வத்திராயன், உடுத்துரை, கொடுக்குழாய், ஆழியவளை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, முள்ளியான், கேவில் ஆகிய 14 கிராம சேவையாளர் பிரிவுகளை சேர்ந்த மக்களிற்கும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நேற்று திங்கட்கிழமை (25) வழங்கப்பட்டது.

குறித்த எரிபொருள் விநியோக நடவடிக்கையானது பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் எஸ். கிருஸ்ணேந்திரன், மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரபாகரமூர்த்தி, மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் ரி. பிருந்தாகரன் ஆகியோரின் கண்காணிப்பில் இடம்பெற்றது.

இதன்போது எரிபொருள் விநியோக அட்டை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், கிராம சேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிசார், பிரதேசத்திற்கு பொறுப்பான இராணுவத்தினர் உள்ளிட்டோர் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த நாளுக்கான வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதானிக்க முடிந்தது.

அமைதியான முறையில் வினியோகிக்கப்பட்ட எரிபொருள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)